தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு!

Estimated read time 0 min read

மாங்கல்ய பலம் பெறுவதற்காக திருமணமான பெண்கள் இருக்கும் முக்கியமான விரதம் காரடையான் நோன்பு ஆகும்.

காரடையான் நோன்பு :

மாசி மாதம் முடியும் நாளும் பங்குனி மாதம் பிறக்கும் நேரமும் கூடுகிற நன்னாளில் காரடையான் நோன்பு எனும் விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து வீட்டில் வழிபாடு செய்து மஞ்சள் சரடை கழுத்தில் கட்டிக் கொண்டால் கணவனுக்கு ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த ஆண்டு வரும் காரடையான் நோன்பு அம்பிகைக்குரிய பஞ்சமி திதியுடன் இணைந்து வருவதால் இது மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.

அதேபோல் சதுர்த்தி திதி, சஷ்டி திதி, பஞ்சமி திதி என மூன்று திதிகளும் சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக நமக்கு கருதப்படுகிறது.

இந்த காரடையான் நோன்பை திருமணமான சுமங்கலி பெண்களும் மேற்கொள்ளலாம். திருமணமாகாத கன்னிப்பெண்களும் மேற்கொள்ளலாம். திருமணமான பெண்களுக்கு சுமங்கலி வரம் கிடைக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு எதிர்காலத்தில் நல்ல கணவன் அமையவும், இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

வரலாறு :

சாவித்திரி தன் கணவர் சத்தியவானை எமதர்மனிடமிருந்து மீட்டெடுத்ததைக் கொண்டாடும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

கணவன் சத்தியவான், எமனின் பாசக் கயிற்றில் சிக்கி இருப்பதை தெரிந்து கொண்ட சாவித்ரி, காமாட்சி அன்னையை நோக்கி கடும் விரதம் இருந்தாள். இந்த விரதத்தின் பலனால் எமலோகத்தின் வாசல் வரை சென்று, எமனுடன் போராடி பல வரங்களை பெற்றாள்.

அப்படி சாவித்ரி தனது அறிவின் திறமையால் பெற்ற ஒரு வரத்தின் பலனாக தனது கணவரின் உயிரையும் எமனிடம் இருந்து மீட்டு, தீர்க்க சுமங்கலியாக வாழும் ஆசியையும் பெற்றார். இந்த நாளில் நாமும் அம்பிகையை விரதம் இருந்து வழிபட்டால் நம்முடைய தாலி பாக்கியம் பலப்படும், கணவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என்பது நம்பிக்கை.

கடைபிடிக்கும் முறை :

விரதம் இருக்கும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள காமாட்சி அம்பாளின் படம் அல்லது ஏதாவது அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஒரு இலை போட்டு அதன் மீது வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி, பூஜை ஆகிய தாம்பூல பொருட்களை வைக்க வேண்டும்.

பிறகு மாற்றிக் கொள்ள வேண்டிய மஞ்சள் சரடில் சிறிது பூ சுற்றி அந்த இலையில் வைக்க வேண்டும். ஒரு நூலில் மஞ்சள் தடவி நோன்பு கயிறு தயார் செய்து, அதிலும் பூ சுற்றி இலையில் வைக்க வேண்டும்.

நைவேத்தியமாக அரிசி மாவு மற்றும் காராமணி சேர்த்து செய்யும் கார அடை மற்றும் வெள்ளை அடை செய்து படைக்க வேண்டும். கடைசியாக மிக முக்கியமாக உருவாக வெண்ணெய் சிறிதளவாவது அந்த இலையில் வைத்து அம்பிகைக்கு உரிய ஸ்லோகங்களை சொல்லி வழிபட வேண்டும்.

பூஜை முடித்த பிறகு மஞ்சள் சரடினை மாற்றிக் கொள்ளலாம். மஞ்சள் சரடு மாற்றும் வழக்கம் இல்லாதவர்கள் நோன்பு கயிறை கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொள்ளலாம்.

நல்ல நேரம் :

இந்த வருடம் காரடையான் நோன்பு மார்ச் 14 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. இந்த நாளில் காலை 06.40 முதல் பகல் 12.48 வரை நோன்பு கடைபிடிக்க வேண்டும். அதாவது 6 மணி நேரம் 11 நிமிடங்கள் இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டும். மஞ்சள் சரடு மாற்றும் பழக்கம் உள்ளவர்கள் பகல் 12.40 மணி வரையிலான நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

மந்திரம் :

காரடையான் நோன்பு அன்று சொல்லவேண்டிய மந்திரம்.

1. உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்
ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்

2. தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்துஹூ ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா.

ஒரு பெண் நினைத்தால் தன்னையும் தன் கணவனையும் காப்பாற்றி விடுவாள் என்பதை சாவித்திரியின் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author