சீனாவிற்கு சவால் ஜோராவர் இலகு ரக பீரங்கி தயாரித்து இந்தியா சாதனை!

Estimated read time 1 min read

சீனாவுக்கு எதிராக லடாக் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்கு துணை புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜோராவர் இலகு ரக பீரங்கி உற்பத்தி இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இரண்டு வருட காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஜோராவர், உள்நாட்டு இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு சான்றாகும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஜோராவர் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகு ரக பீரங்கி ஆகும். லார்சன் & டூப்ரோ (L&T) உடன் இணைந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஜோராவர் பீரங்கியைத் தயாரித்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டில் ஜம்முவின் ராஜா குலாப் சிங்கின் கீழ் பணியாற்றிய இராணுவ ஜெனரல் ஜோராவர் சிங் சிங்கின் நினைவாக ஜோராவர் என பெயரிடப்பட்டுள்ளது. ஜோராவர் அதிகபட்சம் 25 டன் எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

உயரமான மலை உச்சிகள் முதல் தீவுப் பகுதிகள் வரை பல்வேறு நிலப்பரப்புகளில் துரிதமாக செயல்படும் வகையில் ஜோராவர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் ஒருங்கிணைப்பு, அதிக அளவு சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் நீர்வீழ்ச்சி இயக்க திறன் போன்ற அனைத்து நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப் பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள ஹசிராவில், இந்திய இராணுவத்தின் நவீன இலகு ரக ஜோராவர் பீரங்கியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சோதனையில், ஜோராவர் பீரங்கியில், வெடிமருந்துகள் பொருத்த பட்டு , அதன் செயல் திறன் சோதிக்கப்பட்டது. மேலும், ஜோராவர் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த டிஆர்டிஓ வின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத், குளிர்காலத்தில் பீரங்கியின் செயல்பாடுகள் மற்றும் அதிக உயரமான இடங்களில் சோதனைகள் என பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன என்று தெரிவித்தார்.

ஜோராவர் சோதனைகள் முழுவதுமாக முடிய இன்னும் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் , முதல் முழு சுழற்சியை முடித்து ராணுவத்தில் இணைப்பதற்கு சுமார் ஒராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் ஆகும். எனவே, ஜோராவர் 2027ம் ஆண்டுக்குள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

முதற்கட்டமாக 59 பீரங்கிகள் இந்திய இராணுவத்தில் இணைக்கப் படும் என்றும், அடுத்த கட்டமாக, 295 கவச வாகனங்களின் முக்கிய திட்டத்திற்கு ஜோராவர் முன்னணியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் இருந்து முதல் வெடிமருந்துகளை கொள்முதல் செய்தாலும் , இப்போது உள்நாட்டிலேயே வெடிமருந்துகளை தயாரிக்க டிஆர்டிஓ முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

MADE IN INDIA திட்டத்தின் கீழ், இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் இலகு ரக பீரங்கி ஜோராவர் ஆகும். இந்திய ராணுவ அறிக்கையின் படி, குறைந்தபட்சம் 354 ஜோராவர்களை வாங்க திட்டமிடப் பட்டுள்ளன.

தொடர்ந்து, அடுத்த கட்டமாக, 700 ஜோராவர்களை வாங்குவதற்கான வாய்ப்பு வலுவாக இருப்பதாகவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவுக்குப் பதிலடி கொடுக்க உதவும் வகையில் ஜோராவர் உற்பத்தியில் இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

ஏற்கனவே தயாரித்த 500-க்கும் மேற்பட்ட இலகு ரக பீரங்கிகள் உள்ள நிலையில், தொடர்ந்து உற்பத்தியைப் பெருக்கி வருகிறது சீனா.

குறிப்பாக லடாக், உத்தரகண்ட், தவாங் மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மிகவும் உயரமான எல்லை பகுதிகளில் போர் ஏற்பட்டால், இருநாடுகளுக்கும் இந்த இலகு ரக பீரங்கிகள் மிகவும் பொருத்தமான இராணுவத் தளவாடமாக இருக்கும் என்று கூறப் படுகிறது.

இந்திய எல்லையில் சீனாவின் மோதலை எதிர்கொண்டு தடுக்கும் வகையில் இந்த ஜோராவர் உள்நாட்டிலேயே உருவாக்கி இருப்பது இந்தியாவின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author