பிரிட்டன் தேர்தல் வெற்றி வாகை சூடிய இந்தியர்கள்!

Estimated read time 1 min read

2024 பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 107 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் உட்பட பலர் வெற்றி பெற்றுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்த பிரிட்டன் தேர்தலில் தனிப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தொழிலாளர் கட்சி ஆட்சியைக் கைப் பற்றி இருக்கிறது.

அக்கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி எல்லோரும் எதிர்பார்த்த படியே படு தோல்வியைச் சந்தித்துள்ளது.

மொத்தமுள்ள 650 இடங்களுக்கான தேர்தலில், 98 வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 4,515 வேட்பாளர்கள்போட்டியிட்டனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 107 பேர் களம் கண்டனர்.

சென்ற முறை, பிரிட்டன் நாடாளுமன்றத்தில், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஏழு பேரும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எட்டு பேரும், என 15 இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். இந்த தேர்தலில் அதிகமான அளவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குள் செல்வார்கள் என்று தெரிய வருகிறது.

பதவி விலகும் பிரதமரும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான ரிஷி சுனக், வடக்கு இங்கிலாந்து பகுதியில் போட்டியிட்டு அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கன்சர்வேடிவ் கட்சியின் முக்கிய தலைவரான ஷிவானி ராஜா, (Leicester East) கிழக்கு லெய்செஸ்டர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

லெய்செஸ்டரில் பிறந்த ஷிவானி ராஜா, டி மான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அழகுசாதன அறிவியலில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்கிறார்.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர்களில் ஒருவரான (Suella Braverman) சுயெல்லா பிராவர்மேன், ஃபேர்ஹாம் மற்றும் வாட்டர்லூ தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். ரிஷி சுனக்கின் கடைசி அமைச்சரவை மாற்றத்தில், இவரது இலாகா மாற்றப் பட்டது. மேலும், அப்போதைய பிரதமர் சுனக் -க்கு எதிராக சவால் விட்டதால் உள்துறை செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்சர்வேட்டிவ் வேட்பாளரான ககன் மொகிந்திரா (South West Herts) தென் மேற்கு ஹெர்ட்ஸ் தொகுதியைக் கைப்பற்றி இருக்கிறார்.

தொழிலாளர் கட்சித் தலைவர்களில் ஒருவரான கனிஷ்க நாராயண், சிறுபான்மைப் பின்னணியில் இருந்து வெல்ஷ் நாட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார். இந்தியாவில் பிறந்த இவர், தனது 12வது வயதில் (Cardiff) கார்டிஃப் நகருக்குப் புலம் பெயர்ந்தவராவார்.

தொழிலாளர் கட்சி வேட்பாளராக, பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் தொகுதியில் களமிறங்கிய ப்ரீத் கவுர் கில் வெற்றி பெற்றிருக்கிறார். கன்சர்வேடிவ் வேட்பாளர் அஷ்விர் சங்காவைத் தோற்கடித்திருக்கிறார். 2017ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியிலிருந்து வெற்றி பெற்ற ப்ரீத் கவுர் கில் பிரிட்டனின் முதல் சீக்கிய பெண் எம்பி என்ற பெருமையைப் பெற்றார்.

தொழிலாளர் கட்சி வேட்பாளர்கள் நவேந்து மிஸ்ரா, ஸ்டாக்போர்ட் தொகுதியிலும், லிசா நந்தி Wigan விகான் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிகமான இந்திய வம்சாவளியினர் பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது, இந்தியர்களுக்குப் பெருமை தரும் செய்திதான்.

பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரான முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி ஆவார். 1886 ஆம் ஆண்டு லண்டனில் கிழக்கிந்திய சங்கத்தைத் தொடங்கிய இவர், 1892 ஆம் ஆண்டு பிரிட்டன் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக அவர், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு ஆற்றிய சேவை இன்றும் போற்றத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author