அணிந்துரை முனைவர் கோவிந்தராஜ்

Estimated read time 1 min read

Web team

IMG-20240507-WA0013.jpg

கவிச்சுவை .நூலாசிரியர் கவிஞர் இரா.இரவி.
அணிந்துரை !

முனைவர் கவிஞர் அ. கோவிந்தராஜூ ! கரூர்

தேசிய நல்லாசிரியர் விருதாளர்

பேராசிரியர் இரா. மோகன் அவர்களின் தலை மாணாக்கர்.

காலத்தை வெல்லும் கவிதைகள்

******

ஹைக்கூ கவிதை உலகில் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் மதுரக் கவிஞர், மதுரைக் கவிஞர் இரா. இரவி அவர்கள். இப்போது குறள் வெண்செந்துறை யாப்பில் ஒரு கவிதை நூலைப் படைத்துள்ளார், அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

மரபுக் கவிதைகளில் மிகவும் எளிமையான யாப்பு அமைப்பைக் கொண்டது குறள் வெண்செந்துறை பா. மிகுந்த நெகிழ்வுத் தன்மை உடையது. கவிதை எழுதும் ஆர்வம் உடைய எவரும் எளிதாக இந்த யாப்பில் மரபுக் கவிதையை எழுத முடியும்.

இரண்டிரண்டு அடிகளாக அமையும் முதலடியில் ஈரசை அல்லது மூவசை கொண்ட இரண்டு, மூன்று, நான்கு சீர்கள் அமையலாம். அதே எண்ணிக்கையில் இரண்டாம் அடியிலும் அமைய வேண்டும். முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைவதும், இரு அடிகளின் முதல் சீர்களிலும் எதுகை அமைவதும் சிறப்பு. கவிஞர் இரவி அவர்கள் அடி மோனையை அதாவது ஈரடிகளின் முதல் சீர்களில் மோனையை அமைத்து யாப்பை மேலும் எளிமைப்படுத்தியுள்ளார். எதுகை மோனைகளுக்குத் தவம் இருக்காமல் தான் சொல்ல வந்த கருத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

நூல் முழுவதையும் பொறுமையாய்ப் படித்து முடித்தவுடன் நூலாசிரியர் இரவி அவர்கள் சமூகப் பொறுப்புடன் எழுதும் படைப்பாளர் என்பதை உணர்த்து மகிழ்ந்தேன்.

காந்தியத்தை நாட்டு மக்கள் மறந்து விட்டார்கள் என்பதை,

பணத்தாளில் மட்டும் உன் படத்தை அச்சடித்து விட்டு
பாரத்தின் தந்தை உன்னை மறந்து விட்டோம்.

என வருந்துகிறார்.

அனைவரும் ஆகலாம் கலாம் என்னும் கவிதையில்

“வாய்மை நேர்மை எளிமை மூன்றும் இருந்தால்
வையகத்தில் நீங்களும் ஆகலாம் கலாம்”

என்று இளைஞர்களை ஆற்றுப்படுத்துகின்றார்.

மாமனிதர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்குப் பாமாலை சூட்டும் பகுதி மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. அவர்களது ஆளுமைப் பண்புகளைப் படம்பிடித்துக் காட்டும் பாடல் வரிகள் பலவாக உள்ளன. எடுத்துக்காட்டாக தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எழுதும் போது

“திரைப்படத்தில் மிகமிக நன்றாக நடித்தவர்
தமிழக மக்களிடம் என்றும் நடிக்காதவர்”

என்று குறிப்பிடுவதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மதுரைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களைத்

“தூங்கிய தமிழைத் தட்டி எழுப்பியவர்
தூங்கும் போதும் தமிழை நினைத்தவர்”

என்று அறிமுகப்படுத்துவத் சாலப்பொருத்தமே.

தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் நன்னன் அவர்களின் மறைவு குறித்து இயற்றிய இரங்கற்பாவில், அது ஈடு செய்ய முடியாத இழப்பு என்கிறார். தொடர்ந்து அதை ஈடு செய்வதற்குரிய ஆலோசனையை வழங்குகிறார்.

“ஈடு செய்வோம் நல்ல தமிழில் நாளும் பேசி”

என்னும் முத்திரை வரியைப் பதிவு செய்கின்றார் காலமெல்லாம் நல்ல தமிழில் பேச நல்ல வழிகளைச் சொன்ன நாவலர் நன்னன் அவர்களுக்கு இதுதான் பொருத்தமான அஞ்சலியாகும்.

அண்மையில் மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் புறத்தோற்றம் அழகாக இல்லை என்றாலும் அவரது அகத்தோற்றம் கண்டு உலகம் பாராட்டியது என்பதை,

“புவியே பாராட்டியது அகத்தின் அழகை
புறத்தோற்றம் அழகில்லை என்ற போதும்”

என்று கூறும்போது,

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலால் கொளல்

என்னும் குறட்பா உடனிகழ்வாக உள்ளத்தில் தோன்றுகிறது.

கவிஞர் இரவி அவர்கள், தமிழ்மொழி இன்று, தமிங்கில மொழியாக ஆனது குறித்துத் தன் கடுங்கோபத்தையும், கண்டனக்குரலையும் ஆங்காங்கே பதிவு செய்கிறார். ‘தமிழாசிரியர் நாவிலும், தமிங்கிலம் என்று அவர்களையும் இடித்துரைக்கின்றார். தொடர்ந்து, ‘தமிழ் சிதைந்தால் தமிழினம் சிதைந்து போகும்’ என் ஓர் எச்சரிக்கைப் பலகையை வைக்கின்றார் நிறைவாக.

“ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றிப் பேசிடுவோம்
அழகுத் தமிழின் தனித்தன்மை காத்திடுவோம்”

என்று முன்மொழிகிறார். வாசகர்களாகிய நாம் அதை வழிமொழிந்து களைமொழி அதனை விளைமொழி ஆக்கிடுவோம்.

பெண்களுக்காக, பெண்களின் உரிமைகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்குகிறார் கவிஞர் இரா.இரவி. மகள் காட்டும் பாசம் மகத்தானது என்பதை,

“மூச்சு உள்ளவரை பாசம் காட்டுபவள் மகள்
மோசம் செய்யாது நேசம் வைப்பவள் மகள்
வாழ்வாங்கு வாழ்ந்திட வழிசெய்வாள் மகள்
வாய்விட்டுச் சிரித்து நோய் களைவாள் மகள்”

என அவர் மகள் புராணம் பாடினாலும் அதை எவராலும் மறுக்க முடியாது.

நடுவில் எந்த ஆட்சி வந்தாலும் பெண்களுக்கான முப்பத்து மூன்று விழுக்காடு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது என ஏக்கத்துடன் எடுத்துரைக்கிறார். அதனைப் போராடி பெறுவோம் என்று போர்முரசு கொட்டுகின்றார்.

“சமையல் அறையில் முடங்கியது போதும்
தென்றலாய் மென்மையாய் இருந்தது போதும்
புயலாய் இடியாய் புறப்படு பெண்ணே”

இது மகளிர் அனைவரையும் மகத்தான போருக்கு ஆயத்தப்படுத்தும் வழிநடைப்பாடலாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

உலகில் மாறாதிருப்பது எதுவுமில்லை என்பார்கள். ஆனால் காதலும் காதலை கவிஞர் பாடுதலும் எக்காலத்தும் மாறாமல் இருக்கின்றதே. கவிஞர் இரவியும் காதலைப் பாடுகின்றார் யாரும் பாடாத விதத்தில்.

“புவிஈர்ப்பு விசை எல்லோர்க்கும் பொதுவாம்
பாவையின் விழிஈர்ப்பு விசையோ எனக்கு மட்டும்”

மழை பற்றிய கவிதையில் மூட நம்பிக்கைகளைச் சாடுகிறார் மற்றும் ஓர் ஈ.வெ.ரா. பெரியார் என உயர்ந்து நிற்கின்றார்.

“கழுதைக்குக் கல்யாணம் செய்வதால் வருவதில்லை
காடுகளைச் செழிக்க வைத்தால் வரும் மழை”

இக் கூற்றை மறுக்க முடியுமா?

இப்படி நூல் முழுவதிலும் சிந்தனையைத் தூண்டும் வகையில் இவரது செழுமையான தேன் தமிழ்ப் பாக்கள் சிந்திக் கிடக்கின்றன. சில இடங்களில் யாப்பை மீறியிருக்கிறார் என்றாலும் கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்படும் போது கரை உடைபடுவது இயல்பு என்பதால் அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

இவர் இன்னும் பல நூல்களைப் படைத்து அன்னைத் தமிழுக்கு அணி சேர்க்க வேண்டும் என அகத்திலிருந்து வாழ்த்துகிறேன்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

Please follow and like us:

You May Also Like

More From Author