ஆணின் வெற்றிக்குக் காரணம் மனைவியே!

Estimated read time 0 min read

Web team

84818_thumb.jpg

ஓர் ஆணின் வெற்றிக்கு
பெரும்பங்கு வகிப்பது மனைவியே!

கவிஞர் இரா. இரவி.

******

‘ஓர் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் பின் நிற்கிறாள்’ என்பது பழமொழி. ‘ஓர் ஆணின் வெற்றிக்கு ஒரு பெண் முன் நிற்கிறாள்’ என்பது புதுமொழி.

மாதா பிதா குரு
மூன்றும் ஒரே வடிவில்
மனைவி!

இது மனைவி பற்றி நான் எழுதிய ஹைக்கூ. இக்கவிதையைப் படித்து விட்டு உச்சநீதிமன்றத்தின் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள். முற்றிலும் உண்மை என்றார்கள்.

மனைவியுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது சிறப்பு. எனக்கு பெங்களூர் இடமாற்றம் வந்தபோது விருப்ப ஓய்வில் சென்று விடலாம் என முடிவெடுத்தேன். ஆனால் என் மனைவி வேண்டாம், மகன் திருமண அழைப்பிதழில் விருப்ப ஓய்வு என்று அச்சிட்டால் சிறப்பாக இருக்காது என்று தடுத்தார். கேட்டுக் கொண்டு முடிவை மாற்றினேன். ஒன்றே கால் வருடத்தில் மதுரைக்கே இடமாற்றம் கிடைத்தது.

இதுபற்றி கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் பேசியபோது அவர்களும் சொன்னார்கள், அவசரப்பட்டு விருப்பு ஓய்வு எடுக்க வேண்டாம் ; “நான் ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் விருப்ப ஓய்வில் செல்ல விரும்புகிறேன் என்ற போது, “ஒரு மாத ஊதியத்தை ஒரு மணி நேரத்தில் ஈட்டினாலும் பணியை விட்டு விடாதீர்கள்” என்றார். அப்படியே ஏற்று பணியை விடவில்லை, பணி நிறைவு பெற்ற பின், கௌரவ பேராசிரியராக மேலும் ஓராண்டு பணியாற்றினேன்” என்றார்கள்.

நல்லகண்ணு அய்யா அனைவரும் அறிவோம். மிக நேர்மையான அரசியல்வாதி. அவரது மனைவியின் மரணத்திற்குப் பின் நேர்முகத்தில் குறிப்பிட்டு இருந்தார். எனக்கு எல்லாமுமாக இருந்தவள் என் மனைவி. என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு போராட்டத்திற்கு என்றுமே தடையாக இருந்தது இல்லை. அவளது இழப்பு எனக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டு இருந்தார். தொலைக்காட்சி கோபிநாத் குறிப்பிடும் போது, “கணவனை இழந்த மனைவி கூட, போராடி வாழ்ந்து பிள்ளைகளை சாதிக்க வைத்து விடுவாள். ஆனால் மனைவியை இழந்த கணவனோ சோர்ந்து விடுவான். கவலையில் விரைவில் இறந்தும் விடுவான்” என்றார்.சில பேரிடம் உங்க மனைவி என்ன செய்றாங்க என்றால், வீட்டில் சும்மா இருக்காங்க என்பார்கள். அவர்களை கன்னத்தில் அறைய வேண்டும், வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ஓய்வின்றி பார்க்கும் மனைவியை சும்மா இருக்கிறாள் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்பதை உணர வேண்டும்.

திருச்சி சிவா அவர்களும் மனைவி இறந்த பின் பேசி இருந்தார். இருக்கும் போது நான் அவளை மதிக்கவில்லை. அவளுடன் நேரம் செலவிடவில்லை. வாழும் போது அவள் அருமை அறியவில்லை. இறந்தபின்னே அவளின் இழப்பு பேரிழப்பு என்பதை உணர்ந்தேன் என்றார்.

மகாகவி பாரதியார், கவியரசு கண்ணதாசன் பாடிய வைர வரிகளை மனதில் கொள்ள வேண்டும்.

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!

ஆம்! மனைவியின் கண்களில் கண்ணீர் வராமல் வாழ வைப்பவனே நல்ல கணவன்.

ஒரு மனிதன் தன் தாயுடன் வாழும் வாழ்க்கை 25 ஆண்டுகள் தான். ஆனால் மனைவியுடன் வாழும் வாழ்க்கை மூச்சு இருக்கும் வரை 75 ஆண்டுகள் என்று கூட சொல்லலாம். வளர்ப்பது படிக்க வைப்பதுடன் தாயின் கடமை முடிந்து விடுகிறது.

ஆனால்,

தறுதலையையும், தலைவனாக்குவது மனைவி
தென்றலையும் புயலாக்குவது மனைவி.
ரவுடியையை ரம்மியமாக்குவது மனைவி.
முட்டாளையும் அறிவாளியாக்குவது மனைவி.
ஆற்றுப்படுத்தி நெறிப்படுத்துவது மனைவி.

மனிதனை மனிதனாக மாற்றுவது மனைவி. மனைவி இருப்பதால் தான் கணவன் கோபம் தவிர்த்து குடும்பத்தை நினைத்து விலங்கு குணம் விடுத்து மனிதனாக வாழ்கின்றான்.அம்மா குடிக்காதே! என்றால் குடிப்பவனும், மனைவி குடிக்காதே! என்றால் கேட்டுக் கொள்வான். ஒழுக்கமுள்ளவனாக மாறி விடுவான். மனைவி கிழித்த கோட்டை தாண்டாத கணவன் உண்டு. அவள் கிழிக்கும் கோடு நன்மைக்காகவே இருக்கும்.

ஆட்டோ வாசகம் படித்தேன். மனைவி தந்த வரம், மனைவி சொல்லே மந்திரம், எல்லாம் அவளே, அவளின்றி ஓர் அணுவும் அசையாது. தலையணை மந்திரம் தலைவலி நீக்கும்.

மனைவி பெரும்பாலும் மேன்மைக்கும், நன்மைக்கும், உயர்வுக்கும் கருத்து சொல்வாள். மனைவி பேச்சைக் கேட்பதில் அன்னப்பறவையாக் இருங்கள். நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டதாக இருந்தால் விட்டு விடுங்கள். கலந்து பேசி முடிவெடுங்கள். கருத்தைக் கேளுங்கள். மனைவிக்கும் மனது உண்டு, மதித்து நடங்கள்.

திருவள்ளுவர் உலகப்புகழ் அடையக் காரணம் வாசுகி, காந்தியடிகள் தேசப்பிதா ஆகக் காரணம் கஸ்தூரிபாய். பாரதியார் மகாகவி ஆகிடக் காரணம் செல்லம்மாள். இப்படி சாதனையாளர்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருந்து ஊக்குவித்தது மனைவி தான்.

கஸ்தூரிபாய் இறந்த போது காந்தியடிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். எனக்கு அகிம்சையை கற்றுத் தந்த குரு கஸ்தூரிபாய் என்றார். நான் ஆரம்பக்காலங்களில் ஆணாதிக்கம் செலுத்திய போதும், சினம் கொள்ளாமல் சீர்தூக்கிப் பார்த்து என்னை செம்மைப்படுத்தியவள் என்று சொல்லி அழுதார்.

மனைவி மனையை ஆள்பவள்
இல்லாள் இல்லத்தை ஆள்பவள்

மனைவியை மதித்து நடப்போம்
மகுடம் சூட்டுவோம்!

Please follow and like us:

You May Also Like

More From Author