ஏர்வாடியம்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240312_084143.jpg

ஏர்வாடியம் !

நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன் !
பேராசிரியர் நிர்மலா மோகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.!

வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை-600 017. பக்கம் : ரூ.125, விலை : ரூ.125.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி.

*******

‘ஏர்வாடியம்’ பெயரே சிறப்பாக உள்ளது என்று சூட்டியபோதே தெரிவித்தேன். ‘பெண்ணியம்’, ‘பெரியாரியம்’ என்பது போல ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் பற்றிய இயம் என்பதால் ஏர்வாடியம் என்று சூட்டியது சிறப்பு.

நூலாசிரியர்கள் பேராசிரியர் இரா.மோகன் அவர்களும், பேராசிரியர் நிர்மலா மோகன் அவர்களும் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும் மாண்பாளர்கள். இலக்கிய இணையரின் இனிய படைப்பாக வந்துள்ளது.

எளிமை, இனிமை, புதுமை, மென்மை, மேன்மை இப்படி பல ‘மை’களுக்கும் சொந்தக்காரர் ஏர்வாடியார். புன்னகை மன்னர் என்பதை நூலின் முன்அட்டை பறைசாற்றுகின்றது. மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள பதிப்புத் திலகம் மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஏர்வாடியார் பற்றி எழுதிய கட்டுரைகளையும் நூல் அணிந்துரை-களையும் தொகுத்து புகழ்மாலையாக்கி வாழும் காலத்திலேயே படைப்பாளிக்கு இலக்கிய மாலை சூட்டி உள்ளனர். ஏர்வாடியாரை அறியாதவர்கள் இல்லை இருந்தாலும் அவரைப்பற்றி அவரது எளிமையான வரலாறு பன்முக ஆற்றல் என முழுமையாக உணர்ந்து கொள்ள உதவிடும் உன்னத நூல். நூல் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள்.

முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பன் அவர்களின் அணிந்துரையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்களின் அணிந்துரையும் நூல் எனும் மகுடத்தில் வைத்த வைரக்கல்லாக மிளிரிகின்றன. ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்களின் வாழ்த்துரையும் உள்ளது.

பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என்பது போல இந்நூலில் பத்து கட்டுரைகள் உள்ளன. பத்தும் ஏர்வாடியாரின் இலக்கியச் சொத்தைப் பதிவு செய்து உள்ளன.

ஏர்வாடியாரின் திருமண நாளான 10.09.1972 அன்று நடந்த ரகசியம் நூல் உள்ளது. நலங்கு சடங்கின் போது அவரது மனைவி சிதம்பரம்மாள் அவர்கள், தனக்குக் கிடைத்த மோதிரத்தை குடத்திற்குள் கணவன் எடுக்கட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டு, “நீங்க தோற்கக் கூடாது, அதுக்காகத் தான்” என்று சொல்லிய வரலாற்று நிகழ்வு நூலில் உள்ளது. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை திருமணத்தன்றே நிறைவேற்றியது சிறப்பு. நாமும் நம் துணைக்கு விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது.

ஏர்வாடியார் பிறந்தது திருநெல்வேலி அருகே உள்ளது ஏர்வாடி. ஆனால் மிகவும் பிரபலமானது இராமனாதபுரம் அருகே உள்ள ஏர்வாடி அதை மனதில் வைத்து கவிக்கோ அப்துல் ரகுமான் கவியரங்கில் ஏர்வாடியார் இப்படி அழைக்க

அடுத்த கவிஞர் இராதாகிருஷ்ணன்
ஏர்வாடியார் இருந்து வருகிறார்
யாரும் பயப்பட வேண்டாம்
அடுத்து ஏர்வாடியார் வாசிக்கிறார்!

ஏர்வாடியில் இருந்து வருகிறவர்களைப்

பார்த்து பயப்படத் தேவையில்லை

போகிறவர்களோடு

பழகும்போது தான்

கொஞ்சம் பத்திரமாக இருக்க வேண்டும்.

வருகிறவர்கள நலமாகி வருவார்கள். போகிறவர்கள் தான் கோளாறாகி இருப்பார்கள் என்பதை உடனடியாக கவியரங்கில் சொல்லி கைதட்டல் பெற்ற நிகழ்வு நூலில் உள்ளது.

கவிதை குறித்து ஏர்வாடியார் தந்துள்ள விளக்கம்.

பக்கம் பக்கமாய் வளர்வதல்ல கவிதை
இதயத்தின் பக்கம் வருவதே கவிதை
சொல்லப்படுவது கவிதையன்று,

மழையெனப் பெய்யப்படுவதே கவிதையாவது
தானாய் வருவதே கவிதை – தினம்
தேனாய இனிப்பதே கவிதை!

‘கவிதை உறவு’ என்ற பெயரில் கவிதைக்கு முக்கியத்துவம், முன்னுரிமை அளித்து நடத்தி வரும் கவிஞரின் கவிதை, விளக்கம் அருமை. பெருமை.

கவிதை உறவில் ஏர்வாடியார் எழுதி வரும் ‘என் பக்கம்’, ‘ஏழாம் பக்கக் கவிதை’, ‘மனத்தில் பதிந்தவர்கள்’, ‘நூல் மதிப்புரை’ என அனைத்தையும் ஆய்வு செய்து அவர் எழுதிய நூல்கள், குறிப்பாக முன்பு எழுதிய நாடக நூல்கள் அனைத்தையும் வரி விடாது ஆழ்ந்து படித்து ஏர்வாடியார் எனும் இலக்கியக் கடலில் மூழ்கி நல்முத்துக்களை எடுத்து, தொகுத்து, பகுத்து நூலாக்கி உள்ளா நூலாசிரியருக்கு பாராட்டுக்கள். வைர வரிகள் பல இடம்பெற்றுள்ளன.

கையில்லை என்பதை விடவா
கையில் இல்லை என்கிற கவலை!
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

இப்படி பல வரிகள் சிந்திக்க வைக்கின்றன. ஏர்வாடியாரின் நகைச்சுவை உணர்வை, மொழி ஆளுமையை, பன்முக ஆற்றலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளனர்.

நூலிலிருந்து சில துளிகள்!

“கவியரசர் கண்ணதாசனும், வள்ளல் இராமலிங்க அடிகளும், கவிமணி தேசிய வியாயகம் பிள்ளையும், கவிஞர் வைரமுத்துவும், முதுமுனைவர் வெ. இறையன்பும், வார்த்தைச் சித்தர் வலம்புரிஜானும், மகாகவி பாரதியும், பிற நாட்டு நல்லறிஞர்களான சாமர்செட் மாமும், பெர்னாட்ஷாவும், வேர்ட்ஸ்வொர்த்தும், ஏர்வாடியார் அழைத்த போதெல்லாம் அன்பான விருந்தாளிகளாக வருகை தருகிறார்கள்.

இதில் குறிப்பிட்டுள்ள அனைவரின் நூல்களையும் ஆழ்ந்து படித்தவர் ஏர்வாடியார். அதனால் தான் அவர்களை மேற்கோள் காட்டி எழுதி முடிகின்றது. அவர்களுடைய பெயருடனேயே மேற்கோள் காட்டிடும் அறிவு நாணயத்தையும் பாராட்டி உள்ளார்கள்.

உங்க வீடு மதுரையா? சிதம்பரமா? என்ற கேள்விக்கு ஏர்வாடியார் மனைவியை வைத்துக்கொண்டே தைரியமாக சிதம்பரம் என்பார். காரணம் மனைவியின் பெயர் சிதம்பரத்தம்மாள். இதுபோன்ற பல நகைச்சுவைகள் நூலில் உள்ளன.

இன்றைய இளைய தலைமுறையினர் பாடமாக எடுத்துச் சொல்ல வேண்டிய மிகச்சிறந்த ஆளுமையாளர் ஏர்வாடியார் என்பதை நூல் பறைசாற்றுகின்றது.

Please follow and like us:

You May Also Like

More From Author