ஒத்தையடிப் பாதை

Estimated read time 0 min read

Web team

IMG_20240202_145305.jpg

ஒத்தையடிப் பாதை !
நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.

நூலாசிரியர் கவிஞர் மா. முத்துப்பாண்டி, கல்லூரியில் படிக்கும் போதே படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு கவிதை எழுதி வருபவர். எழுதிய கவிதைகளைத் தொகுத்து “ஒத்தையடிப் பாதை” என்ற தலைப்பிட்டு நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். மதுரையில் நடக்கும் கவியரங்கில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டவர்.
கவிதை என்பது, படிக்கும் வாசகர் எண்ணத்தில் சில மின்னலை உருவாக்க வேண்டும். படைப்பாளி உணர்ந்த உணர்வை, வாசகருக்கும் உணர்த்துவதே சிறந்த படைப்பு. அந்த வகையில் கவிஞர் மா. முத்துப்பாண்டி பல்வேறு தலைப்புகளில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள். தனிமையில் அமர்ந்து கவிதை வடித்துள்ளார்.
தனிமை அழகு!
அலங்கரிக்கிறேன் / மேக இருட்டில் /
ஜன்னலின் ஒருபுறம் / அமைதி கொண்ட சூழலின் தரம்
பங்கங்களின் வரிகள் / பாசம் காட்டும் அறை
சிறுவொளியில் பறக்கும் உயிர்க்ள் / எண்ணங்களாயிரம்
என்ன சந்தோஷம் / கனவுகளை கவிதையாக்கும்
அந்த தனிமை!
தேர்வு அறையில் அமர்ந்து தேர்வுகள் பல எழுதியவர் என்பதால் ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து தேர்வு அறை பற்றி எழுதிய கவிதை நன்று.
தேர்வு அறை
விரிந்த வானமாகி விடும் மூளை / அதில்
அடிக்கடி மழையாய் / வந்து போகும் விடைகள்!
தியான அறையும் / தேர்வறையும்
கொஞ்சம் வித்தியாசம் மட்டுமே!
அங்கே கண்ணை மூடி / இங்கே கண்களைத் திறந்து
ஆனால் இருஇடத்திலும் / அமைதி மட்டும்
கடைபிடிக்க வேண்டும்.
திருநங்கைகளை கேலி கிண்டலாக திரைப்படங்களில் சித்தரித்து காயப்படுத்தி வருகின்றனர். சமுதாயத்திலும் சிலர் அவர்கள் மீது ஏளனப்பார்வை வீசுகின்றனர். திருநங்கைகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து வடித்த கவிதை சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்கும். திருநங்கைகள் மீதான மதிப்பை உயர்த்தும்.
திருநங்கை
பார்த்திருப்பீர்கள் / பனைமரத்தில் / அரசமரம் தழைவதை
அதிசயமாகத்தானே / ஒன்றுக்குள் / ஒன்றாய் இருக்கிறது
இங்கு / ஆணுக்கும் பெண் / பெண்ணுக்கும் ஆண்
யாருக்கு கிடைக்கும் / இந்த அதிசயப்பிறவி!
புதுக்கவிதைகளோடு சில ஹைக்கூ கவிதைகளும் வடித்துள்ளார். ஹைக்கூ கவிதை எல்லோராலும் ரசிக்கப்படுகின்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். சுண்டக்காய்ச்சிய பால் போல சொற் சிக்கனத்துடன் வடிக்கும் அற்புதம். ஹைக்கூ நுட்பம் உணர்ந்து வடித்த கவிதைகள் நன்று.
விலங்காபிமானத்தின் வெளிப்பாடாக வந்துள்ள ஹைக்கூ.
படிப்பறிவுமில்லை கற்றுக்கொள்வதுமில்லை
பின் எப்படி பார்த்துக் கொள்கிறது
விலங்குகளின் பிரசவத்தை!
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக வைத்து பாடுபவை. நூலாசிரியர் கவிஞர் மா. முத்துப்பாண்டியன் இயற்கை பற்றிய ஹைக்கூ வடித்துள்ளார்.
நிலா தண்ணீரில் விழுந்து விட்டதென்று
உடனே காப்பாற்றியதாம்
விடியலோடு வந்த சூரியன்!
கவிஞர்கள் அனைவரும் முதலில் காதல் கவிதைகள் எழுதுவார்கள். பிறகு தான் யாராவது ஆற்றுப்படுத்தினால் சமுதாயம் பற்றிய கவிதைகளும் எழுதுவார்கள். இவர் காதல் கவிதை கொஞ்சம், சமுதாயக் கவிதைகள் அதிகம் என்ற கலவையில் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
கறையாது மறையாது அழியாது …
உன் காதலும் / என் காதலும் / நமக்குள்
தார்கலவையாய் கலந்த / நினைவுகளால் ஆனதடி
என்னதான் உருக்கினாலும் / தார்கலவை
தார்கலவையாகத் தானே இருக்கும்.
எடுத்துக்கொண்ட உவமை மிகவும் புதுமை. காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். இதுவரை யாருமே சொல்லாத உவமையான தார்க்கலவை பற்றி எழுதியது வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது.
இந்த நூல் இவரது முதல் நூல். இலக்கிய உலகம் இவரது நூலை வாங்கிப் படித்துப் பாராட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து முடிக்கிறேன்.

Please follow and like us:

You May Also Like

More From Author