கம்பர் நூல் மதிப்புரை

Estimated read time 0 min read

Web team

IMG_20240324_104027.jpg

பெண்ணிய நோக்கில் கம்பர்
நூல் ஆசிரியர் : முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
உமா பதிப்பகம், 171, (பு.எண். 8), பவளக்கார தெரு, மண்ணடி, சென்னை – 600 001. தொலைபேசி : 25215363 விலை : ரூ.100
******
நூலின் அட்டைப்படம் அசோகவனத்து சீதை போல உள்ளது. உள் அச்சு வடிவமைப்பு யாவும் நேர்த்தியாக உள்ளது. பதிப்பித்த உமா பதிப்பகத்தினருக்குப் பாராட்டுக்கள். நூலாசிரியர் முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் கம்ப இராமாயணத்தை முழுவதுமாக படித்து கம்பர் கடலில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்து வழங்கி உள்ளார்கள்.
இந்த நூலாசிரியர் பற்றிய தகவல் நூல் எழுதியதன் நோக்கத்தை பறைசாற்றும் விதமாக உள்ளது.
முனைவர் எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி செந்தமிழ் மணக்கும் செட்டி நாட்டில் பிறந்து அயலக மண்ணில் அருந்தமிழ் வளர்ப்பவர். ஆய்வுப் பணிகளை கரும்பென நினைப்பவர். புதியன காணும் புதுமை விரும்பி, அரைத்த மா அரைப்பதில் ஆர்வமற்றவர். அஞ்சா நெஞ்சர். விருதுகள் பெற்ற வித்தகர். வித்தியாசமான ஆய்வு களங்களை தெரிவு செய்து புதியன சொலும் வேட்கை மிக்கவர். மலாய் மொழி வல்லவர்.
பேராசிரியர் முனைவர் தேவதத்தா அவர்களின் வாழ்த்துரை, முனைவர் அரங்கமல்லிகா அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக உள்ளன .
கம்ப இராமாயண வரிகளை எழுதி ஆய்வின் முடிவாக பல கருத்துக்களை நன்கு பதிவு செய்துள்ளார்கள். கம்பர் ஓர் ஆண் என்பதால் ஆணாதிக்கச் சிந்தனை அவரிடம் அவர் அறியாமலே இருந்த காரணத்தால் பாத்திரப்படைப்பில் ஆணாதிக்கச் சிந்தனை மிகுதியாக இருந்துள்ளது உண்மை.
‘நாட்டின் வளமும் பலமும் பெண்களே’ என்பது கம்பரின் மதிப்பீடு. இம்மதிப்பீடு காப்பியம் முழுமையும் வெளிப்படுகிறதா? என்பதை பெண்ணிய நோக்கில் எனும் இயல் விவாதிக்கிறது ” எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தால் கம்பர் மீது ஈடுபாடு இல்லாமலே இருந்தேன். காரணம் அறிஞர் அண்ணாவின் கம்பரசம் படித்தவன். தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களின் ஒருங்கிணைப்பால் நடந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரையாற்றி. நூலை ஆழ்ந்து படித்தேன். நூலாசிரியர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் நெஞ்சில் உரத்துடன், நேர்மை திறத்துடன் கம்ப இராமாயணத்தை ஆராய்ந்து மனதில் பட்ட கருத்துக்களை யாரும் எழுதிட அஞ்சிடும் கருத்துக்களை மிகத் துணிவுடன் எழுதி உள்ளார்கள். பாராட்டுக்கள்.
இந்த நூலில் கம்பரின் பெண் பாத்திரங்களை கோசலை, கைகேயி, சுமித்திரை, சீதை, கூனி, சூர்ப்பனகை, திரிசடை, மண்டோதரி, தானியமலி, தாரை, சவரி, தாடகை, அகலிகை என நுட்பமாக ஆய்வு செய்து கட்டுரை வடித்து உள்ளார்கள். பாராட்டுகள்.
“நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதிடும் நக்கீரர் போல கம்பரே ஆனாலும் பெண்களை போகப்பொருளாக சித்தரித்தது தவறு தான் என்பதை நன்கு நிறுவி உள்ளார்.
“பெண் என்பவள் போகப் பொருளாகவும், நுகர்பொருளாகவும் கம்பர் காலத்திலும், அதற்கு முன்னரும் இருந்துள்ளாள். கம்பர் இந்நிலையை பதிவு செய்துள்ளார். அரம்பை போல் இன்பமளிப்பவள் என ஒரு பெண் உண்டாட்டுப் படலத்தில் வருணிக்கபடுகின்றாள். விண்ணுலக இன்பத்தை மண்ணுலகில் தந்த நாயகியைப் பாடுவது மட்டுமன்றி பெண்களின் கடைக்கண் பார்வை தவஆற்றல் மிக்க முனிவரையும் மாற்றி விடும் என்கிறார் கம்பர். இது தவிர பெண்களை ஞானியராலும் வெல்ல முடியாது என்னும் கருத்தைக் கம்பர் பாடி உள்ளார். இது ஆணாதிக்கச் சமுதாய வெளிப்பாட்டின் தொடர்ச்சி என்று கூறுவதில் தவறிருக்க முடியாது.”
நூலாசிரியர் முனைவர் எம்.எஸ். ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் கம்ப இராமயணத்தை மறு வாசிப்புக்கு உட்படுத்தும் விதமாகவும் கம்ப இராமாயணத்தை பக்தியோடு மட்டும் பார்க்காதீர்கள். புத்தியோடு பாருங்கள் என்று விழிப்புணர்வு விதைக்கும் விதமாக எழுதி உள்ளார். தமிழ் சொற்களின் சுரங்கம் கம்ப இராமாயணம் என்பதில் மாற்றுகருத்து இல்லை. அதில் ஆபாச சொற்களும் இருக்கின்றன என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இதுவரை வந்த ஆய்வு நூல்கள் யாவும் கம்பரை வானளாவ புகழும் விதமாகவே வந்தன. இந்த நூல் ஒன்று தான் பெண்ணியம் என்ற கண்ணாடி அணிந்து கம்பரை விமர்சிக்கும் விதமாக வந்துள்ளது. ஒரு எழுத்தாளருக்கு, கவிஞனுக்கு மனதில் பட்டதை எழுதும் துணிவு வேண்டும். மகாகவி பாரதிக்கு, பாரதிதாசனுக்கு அந்தத் துணிவு இருந்தது. அந்த வரிசையில் இந்த நூலாசிரியர் துணிவுடன் மனதில் பட்டதை எழுதி உள்ளார். பாராட்டுக்கள் .
நூலசிரியராகிய என் கருத்து :
அனுமன் சீதையை அசோகவனத்தில் கண்டு, இராமனிடம் 21 பாடல்களில் சீதையின் நிலையைக் கூறுகிறான் .
இப்படி விரிவாக அனுமன் எடுத்துக்கூறியும் சீதையை இராமன் சந்தேகப்பட்டு அவளை கடுமையான சொற்களால் பேசி எங்காவது சென்று இறந்து ஒழிவாய் எனவும், அவளை ஒழுக்கக்கேடு உடையவள் எனவும் கூறுவதற்கு அவனுக்கு எப்படி மனம் வந்தது. சீதை மீது களங்கம் சுமத்தியது இராமனின் உயர்பண்பு அல்லது உயர் ஒழுக்கத்திற்கு எவ்வாறு பொருந்தும்?
ஆம், இராமன் சீதையை தீக்குளிக்க சொன்னது குற்றமே என்பதை நூலில் நன்கு நிறுவி உள்ளார். ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்பதை விளக்கி உள்ளார். இந்த நூல் படித்த போது பவானிசாகர் அரசு அலுவலர்கள் பயிற்சிக்கு நான் சென்று இருந்த போது நவீன இராமாயணம் என்ற தலைப்பில் நான் நடத்திய நாடகம் நினைவிற்கு வந்தது. இராமன் சீதையை தீக்குளிக்க சொன்ன போது சீதை சொல்வாள், நீயும் தான் பிரிந்து இருந்தாய் முதலில் நீ தீ குதி . பிறகு நான் குதிக்கிறேன் என்று சொல்வது போல வசனம் எழுதி பாராட்டு சான்றிதழ் பெற்றேன். இப்படி பல சிந்தனைகளை விதைக்கும் நல்ல நூல்.

Please follow and like us:

You May Also Like

More From Author