கருஞ்சூரியன்

Estimated read time 1 min read

Web team

IMG-20240509-WA0024.jpg

கருஞ்சூரியன்!
நூல் ஆசிரியர் : ‘கவிப்பேரரசு வைரமுத்து’

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 841 (52),
ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.

******

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தமிழ்ஆற்றுப்படை என்று வரிசையாக சொற்பொழிவு ஆற்றி, கட்டுரையாக வடித்து வெளியிட்டு வருகிறார். முத்தாய்ப்பாக அனைத்துக் கட்டுரைகளுக்கும் மகுடமாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி, “கருஞ்சூரியன்” என்று மிகப் பொருத்தமான தலைப்பிட்டு ஆற்றிய உரை நூலாக வந்துள்ளது. திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. இந்த நூலை கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு நெருங்கிய நண்பர், எனக்கும் இனிய நண்பர், பொறியாளர் சுரேசு அவர்கள் வழங்கினார்.

நூலை வாங்கி வந்த நிமிடத்லிருந்து திரும்பத் திரும்ப பலமுறை படித்து விட்டேன். காரணம், என்னை செதுக்கிய சிற்பியாக தந்தை பெரியாரை நினைப்பவன் நான். புரட்சிக்கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசன் அவர்கள் தான், எனக்கு தந்தை பெரியாரை அறிமுகம் செய்து வைத்தார். அவரது அறிவார்ந்த நூல்கள் படித்து என்னை நானே செதுக்கிக் கொள்ள காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்.

அவரைப் பற்றி மிகச் சிறப்பாக எழுதி உள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். பெரியார் பற்றி வந்துள்ள நூல்களில் ஆகச்சிறந்த நூல் எனலாம். வைரமுத்து அவர்களின் வைர வரிகளில் தந்தை பெரியாரைப் பற்றி படித்தபோது அவரைப் பற்றிய மதிப்பு இன்னும் கூடியது. கையடக்க நூலாக இருந்தாலும் மனதில் நிலைக்கும் நூலாக அமைந்து விட்டது.

படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. தமிழ் சமுதாயத்திற்காக மானமும் அறிவும் பெறுவதற்காக இறுதிமூச்சு உள்ளவரை உழைத்திட்ட உண்மைத் தலைவர் பெரியாரின் அளப்பரிய சாதனையை அறிந்து வியந்து திரும்பத் திரும்ப படிக்க வேண்டிய நூல் இது.

நூலிலிருந்து சிறு துளிகள் “இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பது தான்.

(06-01-1953) அன்று பெரியார் பேசிய பேச்சின் ஒரு பகுதி.

இன்றைக்கு தமிழர்கள் தன்மானத்துடன் மானத்துடனும் அறிவுடனும் மனிதத்தன்மையுடனும் சமத்துவமாகவும் வாழ்ந்திட வழிவகை செய்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் மற்றொரு கூற்று : ‘நான் என்றும் கட்சிக்காரனாக இல்லவே இல்லை. கொள்கைக்காரனாகவெ இருந்தேன். உண்மை தான். தந்தை பெரியார் கட்சிக்காரனாக இருந்திருந்தால் தேர்தலில் நின்று வாக்கு கேட்டு வந்திருப்பார். வாக்கிற்காக கடவுள் உண்டு என்று பொய் கூட சொல்ல வேண்டி வந்திருக்கும். அதனால் தான் அவர் தேர்தலை வெறுத்து கொள்கைக்காரனாகவே வாழ்ந்தார்.

“மொழி என்பது உலகப் போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவி ஆகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்”.

மொழிக்கு இப்படி ஒரு விளக்கம் சொன்னவர் தந்தை பெரியார் என்பதை நூலில் மிக அழகாக மேற்கோள் காட்டி உள்ளார்.

தந்தை பெரியாருக்கும், தேசப்பிதா காந்தியடிகளுக்கும் நடந்த உரையாடலை அப்படியே பதிவு செய்துள்ளார், பாராட்டுக்கள். காந்தியடிகளை விட்டுவைக்க மாட்டார்கள் என்று தந்தை பெரியார் முன்கூட்டியே எச்சரித்து உள்ளார்.

மாட்டு இறைச்சி சாப்பிடுவது குற்றமென இன்றைக்கும் ஒரு கூட்டம் கொடி பிடித்து வருகின்றது. இவர்களைப் பார்த்து அன்றே பெரியார் ஒரு கேள்வி கேட்டுள்ளார், பாருங்கள்.

கோழியும், மீனும், பன்றியும், எச்சிலையும், பூச்சி புழுக்களையும், அழுக்குகளையும், மலத்தையும் தின்கின்றன. இப்படி இருக்க புல்லும் பருத்திக் கொட்டையும், தவிடும் புண்ணாக்கும் தின்கிற மாட்டின் இறைச்சி சாப்பிடுவதால் மாத்திரம் எப்படி ஒரு மனிதன் தாழ்ந்தவனாவான்?.

சைவ உணவை மட்டுமே சாப்பிடும் மாட்டின் இறைச்சியை சாப்பிடுவது அவன் உரிமை. அதனால் அவனை தாழ்ந்தவன் என்று சொல்வது மடமை என்று அன்றே தந்தை பெரியார் சம்மட்டி அடித்து பகுத்தறிவை விதைத்த விதத்தை பல மேற்கோள்களுடன் நூலில் விளக்கி உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

” தமிழர்களின் மனித அதிசயம் பெரியார். காற்றைப் போல, தண்ணீரைப் போல தமிழர்களுக்கு எப்போதும் தேவைப்படுகிறவர். முற்றிலும் உண்மை. பெரியார் இன்றும் என்றும் தேவைப்படுபவர்.”

வைர வரிகளால் தந்தை பெரியாருக்கு வைரக்கிரீடம் சூட்டி உள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

“எவனொருவனின் வாழ்வும் வாக்கும் செயலும் பொருளும் மனிதக்கூட்டத்தின் தற்காலத் தருணத்திற்கும் தேவைப்படுகின்றனவோ அதுவரைக்கும் ஒரு மனதின் நினைக்கப்படுகிறான், கல்லறையில் அவன் உயிரோடிருக்கிறான். பெரியார் இன்னும் உயிரோடிருக்கிறார், இருப்பார் மற்றும் இருக்க வேண்டும்”

ஞானக் கிழவன் : கவிப்பேரரசு வைரமுத்து !

ஒரு நூற்றாண்டைக் கூட்டிக் கழித்தால்
உன்றன் அறிவே மிஞ்சும் எமக்கு
நின் அடையாளம் தாடியும் தடியும்
நீ தான் எங்கள் அடியும் முடியும் !

நீண்ட கவிதையின் கடைசி வரிகள் இவை.

தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ என்ற பட்டம் வழங்கிய புகைப்படம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் தாமிரப்பட்டயம் வழங்கும் புகைப்படம், யுனெஸ்கோ விருது வழங்கிய புகைப்படம், இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை, சிறப்பு அஞ்சல் உறை, பெரியார் புரட்சி மொழிகள், தமிழக அரசு வெளியிட்ட தகவல், ஆங்கில் ஏடு பாராட்டிய தகவல் என நூலின் இறுதியில் உள்ளன. மொத்தத்தில் பெரியாரைப் புரியாமல் பழிக்கும் அறிவிலிகள் அனைவரும் படித்து அறிவு பெற வேண்டிய அற்புத நூல்.

Please follow and like us:

You May Also Like

More From Author