கவிதை நூல் விமர்சனம்.

Estimated read time 1 min read

Web team

IMG_20240326_160227.jpg

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்

கவிதை தொகுப்பு 2017

நூல் மதிப்புரை கவிஞர் இரா .இரவி !

தொகுப்பாசிரியர் : பேராசிரியர் சு. கோவிந்தராசன்
கவியரங்கப் பொறுப்பாளர்கள் :
பாவலர்கள் அமுதபாண்டியன், கே.ஜி. ராஜேந்திரபாபு, கொ.சி.சேகர்.

வெளியீடு : பெங்களுர்த் தமிழ்ச் சங்கம், விலை ரூ. 100 பக்கம் 80.

*****

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் மாதம்தோறும் தொடர்ந்து ஏரிக்கரை கவியரங்கம் நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதமும் ஒருவர் தலைமையில் பெங்களூருக் கவிஞர்கள் கவிதை பாடி வருகின்றனர். என் தலைமையிலும் ஒரு நாள் கவியரங்கம் நடந்தது. நேரம் கிடைக்கும் போது நானும் சென்று கவிதைபாடி வருகின்றேன். இந்நூலில் 57 கவிஞர்கள் கவிதைகள் உள்ளன . , அதில் எனது கவிதையும் இடம் பெற்றுள்ளது.

தமிழர் திருநாள் சிறப்புக் கவியரங்கில் கவிதை பாடிய கவிஞர்களின் தொகுப்பு நூல். இந்நூல் சிறக்க தொகுப்பு ஆசிரியர் பேராசிரியர் சு. கோவிந்தராசன், பாவலர்கள் அமுதபாண்டியன், கே.ஜி. ராஜேந்திரபாபு, கொ.சி. சேகர் ஆகியோரின் உழைப்பை உணர முடிந்தது. பாராட்டுகள்.

நூலில் தொடக்கத்தில் 8 பக்கம், முடிவில் 8 பக்கம் வண்ணத்தில் தமிழர்களின் பெருமையையும், ஐவகை நிலங்களையும் அழகாக அச்சிட்டு உள்ளனர்.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தலைவர் திரு. தி. கோ. தாமோதரன், துணைத்தலைவர் கோ. தாமோதரன், செயல் தலைவர் மு. மீனாட்சி-சுந்தரம் ஆகியோரின் வாழ்த்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளன.

பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் செயலர் எஸ். இராம-சுப்பிரமணியன் தொடங்கி மணிகண்டன் வரை மொத்தம் 57 கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. திருக்குறளில் முப்பால் உள்ளன போல தமிழில் முத்தமிழ் உள்ளன போல இந்நூலில் மூன்று வகைப் பாக்கள் உள்ளன. மரபு, புதிது, ஹைக்கூ உள்ளன.

ஈழத்தமிழர்கள், புதுவைத் தமிழர்கள், கர்னாடக வாழ் தமிழர்கள் மூவரும் தமிழ்ப்பற்றுடன் உள்ளனர். தமிழ் இன உணர்வுடன் உள்ளனர். தாயுக்கும் மேலாக தமிழை நேசிக்கின்றனர். பெங்களூர் வாழ் தமிழர்களின் கவிதைகள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதால் தாய்மொழிப்பற்று தமிழ்மொழிப்பற்று அதிகமாகவே உள்ளது.
கவியரங்கின் தலைப்பும் தமிழ் மொழியைப் போற்றுவதாக அமைந்தது சிறப்பு. “மங்காத தமிழென்று பொங்கலே பொங்குக”. இந்த தலைப்பில் அனைவரும் கவிதை எழுதி உள்ளனர்.
பாவலர் எஸ். இராமசுப்பிரமணியன்,
செயலர் பெங்களூர்த் தமிழ்ச்சங்கம்.

மொழிக்கெல்லாம் தாயான முன்னவளே!
தைத்தமிழைத் தன்னகத்தே கொண்டவளே!
எழிலான சொல்லெல்லாம் தந்தவளே!
எம்மினத்தை ஏற்றம்பெறச் செய்தவளே!

பாவலர் அமுதபாண்டியன்,
துணைச் செயலர் கவியரங்கப் பொறுப்பாளர்

ஆதியிலே வந்த குடியாம், அழகான தமிழ்க் குடியாம்!
மாந்த இனம் தோன்றியதும் முதலான தமிழ்க் குடியாம்!
அம்முதற் குடியே செய்ததாம் உயர்வான உழவுத்தொழிலாம்!
அவ்வுழவுத் தொழிலை மறவாது, வணங்கும் நாளே
பொங்கல் நாளாம்!

பாவலர் கே.ஜி. ராஜேந்திரபாபு,
கவியரங்கம் பொறுப்பாளர்.

சீர்திருத்த பெரியாரின் பகுத்தறிவுத் தமிழ்
தென்றல் திரு.வி.க. வின் அரசியல் தமிழ்
நல்லறிஞர் மறைமலையின் தனித்தமிழ்
கல்வி தந்து காமராசர் வளர்த்த தமிழ்.

பொற்கிழி பாவலர் கொ.வி. சேகர்,
கவியரங்கம் பொறுப்பாளர்.

வான்மறையாம் வள்ளுவத்தை வாழ்மறையாய்க் கொண்டோரே
வாழ்வாங்கு வாழ்ந்திடவே வளமாக நீ பொங்கு!
தேன்மொழியாம் தமிழ் மொழியே திசையெலாம் வைத்திடவே
திண்ணமுடன் எண்ணமெல்லாம் திகழ்ந்திடவே நீ பொங்க !

பேராசிரியர் சு. கோவிந்தராசன்
ஊற்று ஆசிரியர், இந்நூல் தொகுப்பாசிரியர்.

நாடு நலனுறச் சிறக்க வேண்டும் என்பதில்
நலிவில்லா உயரெண்ணம் கொண்டவர் தமிழன்!
நீடுழி வாழுகின்ற நல்லோர் உளவினையே
நாளெல்லாம் நல்லுறவாய்க் கொள்பவன் தமிழன்!

பாவலர் கருமலைத் தமிழாழன் !

ஆட்சிமொழி நீதிமொழியோடு பள்ளிக்கூட
அறிவுமொழி வணிகமொழி கோயில் வீடு
கட்சிமொழி பேச்சுமொழி ஊடகத்தில்
காணுமொழி அனைத்திலுமே தனித்தமிழாக !

பாவலர் ஜெய்சக்தி !

வங்கக் கடல் கூட வற்றுமோ என்னவோ
வாடும் தமிழென்றும் வற்றாது வற்றாது
மங்கள தமிழென்று பொங்கலே பொங்குக
அய்யன் வள்ளுவன் பெயர் சொல்லப் பொங்குக!

கவிசூரியன் ஹரீஸ்

சாதியின் பெயரால் விதியை முடிந்திடும்
சமூகச் சீர்கேடு மாறவே பொங்குக!
நதியும் நீதியும் தடம்மாறிப் பேசாமல்
அதன் வழியில் செல்லவே விரைவாய் பொங்குக !

பாவலர் ப. மூர்த்தி

தமிழகம் முழுவதுமான கிராமங்களின் தழைத்தோங்கிடும்
கோலாகலமே தமிழர் திருநாள்
பசுமையின் விரிப்பில் செழுமையின் அழகு!
வாழையடி வாழையை வளர்த்துக்காட்டும் பேரழகு !

கவியருவி கா. உ. கிருட்டிணமூர்த்தி

சிம்மாசனங்கள் சிதறிய போதும்
செம்மாற் திருந்த சிங்கம்
இம்மா திரியோர் மொழியிலை என்றே
இன்றும் ஓரிருவர் தங்கம் !

கவிமலர் வ. மலர்மன்னன்

மூத்தகுடி நாமென்றும் தொன்மை யோடு
மதிமுகமாய் தமிழ்த்தாயின் பெருமை நாடு
ஏத்தும் படி தமிழினமே ஒன்றாயக் கூடு
எந்தமிழே உலகோர்க்குத் தாய்மை வீடு!

பாவலர் மும்பை நம்பிராசன்

தமிழா ஜல்லிக்கட்டு தொடர வேண்டி
மல்லுக்கட்டி நிற்கிறோம்!
பொங்கலுக்கும் பூட்டு போடுமுன்
பொங்கலைக் கொண்டாடுவோம்!

அரங்கிசைப் பாவலர் பாராள்வோன்

வரலாற்றுப் பெருமை ஓங்க வாழ்ந்திடும்
தமிழினம் சிறப்புறப் பொங்கலே பொங்கு!
சீரார்ந்த உலகுபுகழ் தமிழ்ப்பண்பாட்டை உணர்த்தும்
தமிழத் திருநாள் ஒளிரப் பொங்கலே பொங்கு?

பொற்கிழிப்பாவலர் வே. கல்யாணகுமார்.

ஈனமெனும் இருளே இனப்பகை யொழிக்க
இன்றவர் எழுந்தால் என்ன செய்வாய்?
எழுஞாயிறு முன்னே வைத்திட்ட பொங்கலே
இனமானப் பொங்கலென்று பொங்குவாயா?

நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன்

இலையுதிரும் காலத்தில் மரங்களில் மொத்த
இலையுதிர்ந்து போவதாலே பட்டமர(ம்) ஆமோ?
உலை கொதித்த வெந்நீரில் வைரத்தைப் போட்டால்
உருக்குலைந்த வைரமது கரைந்துருகிப் போகும்?

பாவலர் சே.ரா. காந்தி

புலனத்தில் (Whatsapp) மங்காத தமிழே!
முகநூலில் (Face Book) மூழ்காத தமிழே!
வலையொளியின் (You tube) வளையாத தமிழே!
அளாவியில் (We Chat) அழியாத் தமிழே!

நூல் முழுவதும் 57 கவிஞர்களும் அற்புதமாக கவிதைகள் வடித்துள்ளனர். மதிப்புரையில் அனைத்துக் கவிதைகளையும் குறிப்பிட முடியாது என்ற காரணத்தால் பதச்சோறாக எழுதி உள்ளேன். மேற்கோள் காட்டாதவர்கள் வருந்த வேண்டாம். என் கவிதையும் மேற்கோள் காட்டவில்லை. தமிழன்னைக்கு அணி சேர்க்கும் அற்புத நூல். பாராட்டுகள்.

Please follow and like us:

You May Also Like

More From Author