குடை மறந்த மழை.

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

குடை மறந்த மழை !

நூல் ஆசிரியர் : பாவலர்

புதுவைத் தமிழ் நெஞ்சன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018.

******

தமிழ் ஹைக்கூ கவிதை நூல்கள் அதிகம் வெளியிட்ட பதிப்பகமான மின்னல் கலைக்கூடம் வெளியிட்டுள்ள ஹைக்கூ நூல். நூலாசிரியர் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் ஒரே ஒரு ஹைக்கூவின் மூலம் உலகப்புகழ் பெற்றவர். அந்தப் புகழ்பெற்ற ஹைக்கூ இது தான்.

கொடி தந்தீர்

குண்டூசி தந்தீர்

சட்டை?

‘குடை மறந்த மழை’ என்ற இந்த நூலின் மூலம் பல்வேறு சிந்தனைகளை விதைக்கும் உணர்ச்சி மிக்க நல்ல ஹைக்கூ கவிதைகளை வழங்கி உள்ளார். பாராட்டுக்கள்.

முதுமுனைவர் பேராசிரியர் மித்ரா அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அமைந்துள்ளது.

மண்ணில் விழுந்தது

வானம்

மழை வெள்ளம் !

இந்த ஹைக்கூ படித்தவுடன் சிங்கார சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதித்த சோக நிகழ்வு நம் மனக்கண்ணில் வந்துபோவது நூலாசிரியர் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களின் வெற்றி.

வாழும் சாதியால்

வீழ்ந்து போனது

வாழ்ந்த தமிழினம்!

உண்மை தான். வரலாற்று சிறப்புமிக்க தமிழகம் இன்று சாதிக்கொரு சங்கம் வைத்து சாதிச்சண்டையிட்டு அமைதியைக் குலைத்து வருகின்றது. வாழ்ந்த, வீழ்ந்த முரண்சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று. தமிழகத்தில் வாழும் தமிழர்கள் சாதி மதம் மறந்து தமிழர்களாக ஒன்றுபட வேண்டும் என்பதே நூலாசிரியர் விருப்பம்.

எப்போது முடியும்

பள்ளி விடுமுறை

பசி.!

இரண்டு நாள் விடுமுறைக்கே தவித்திட்ட ஏழைக் குழந்தைகள் தற்போது 4 மாதங்களாக மதிய உணவின்றி பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். ஊரடங்கு என்று முடியுமோ? பள்ளிகள் எப்போது திறக்குமோ? பசியார உண்பது எப்போது என்ற ஏக்கத்தில் உள்ளனர் குழந்தைகள்.

ஆங்கிலவழிப் பள்ளியில்
சிறைபட்டுப் போனது
அப்பாவின் வியர்வைத் துளி!

உண்மை தான். ஏழைகளும், வட்டிக்கு கடன் வாங்கியாவது ஆங்கிலவழிப் பள்ளியின் பகல்கொள்ளைக்க்கு பணம் கட்டி பிள்ளையைச் சேர்க்கும் அவலம் அரங்கேறி வருகின்றது. வட்டிகட்டி ஏழை அப்பன் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து வருகிறான். அதனை உணர்த்திய ஹைக்கூ நன்று.

பெண் பால்

தருகிறாள்

கள்ளிப்பால் !

கணினி யுகத்திலும் பல வருடங்களுக்கு முன்பு கருத்தம்மா திரைப்படத்தில் காட்டிய கொடூரக் கொலை இன்றும் நடப்பதாக செய்திகள் வருகின்றன. பெண் சிசுக் கொலைக்கு முடிவு கட்ட வேண்டும். மனித குலத்திற்கே அவமானம் தரும் அவச்செயல் இது.

இனிய நேரம்

தொலைந்து போனது

மட்டைப்பந்து !

மட்டைப்பந்து வீரர்கள் மறைமுகமாக
பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்ற
தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு.

போலியான விளையாட்டை நம்நாட்டு தட்ப வெப்பநிலைக்கு பொருந்தாத விளையாட்டை இளைஞர்கள் பார்த்து நேரத்தை விரயம் செய்து வருவதை உணர்த்திய ஹைக்கூ நன்று.

உழவு மாடு

அடி மாடானது

நிலத்தில் வீடு !

நெல் விளையும் நிலத்தில் எல்லாம் மணல்களைக் கொட்டி வீட்டடி மனைகளாக்கும் கொடிய செயலை வெகுவேகமாக செய்து வருகின்றனர் சிலர். உணவிற்கு தட்டுப்பாடு வந்துவிடும் என்ற கவலை துளியுமின்றி தான்தோன்றித்தனமாக கேடு செய்து வருகின்றனர். உழவு மாடு அடிமாடானது போலவே விளைநிலங்களை வீடாக்கிவரும் அவலம் சுட்டும் ஹைக்கூ நன்று.

நிலாச்சோறூட்ட

நேரமில்லை

அலுவலக அம்மா!

பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் மனைவி இருவரும் வேலை பார்க்க வேண்டிய நிலைமை இன்று. வேலைக்கு செல்லும் அம்மாவினால் நிலாச்சோறு ஊட்ட முடியவில்லை என்ற கசப்பான உண்மையை ஹைக்கூவில் உணர்த்தியது சிறப்பு.

விருந்தினருக்கு விருந்தானது
வீட்டுச் சேவல்
காலை எழுப்புவது யார்?

ஆசையாக அன்பாக வளர்ந்திட்ட சேவலை விருந்தினர் வந்ததும் அடித்து குழம்பு வைத்து விருந்து வைத்து விடுவார்கள் பெரியவர்கள். ஆனால் அந்த வீட்டில் சேவலோடு வளர்ந்த குழந்தையோ சேவல் காணவில்லையே என்று வருந்தும்.

‘சைவம்’ திரைப்படத்தில் சேவலை குழந்தை ஒளித்து வைத்துவிடும். இந்த ஹைக்கூ படித்தவுடன் அந்த சைவம் திரைப்படம் மனதிற்குள் வந்து போனது. இது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. ஒன்று படிக்கையில் அது தொடர்பான மற்றொன்று நினைவுக்கு வருவது சிறப்பு.

தொலைத்தது
கூட்டுக்குடும்ப வாழ்க்கை
பொருளியல் வாழ்க்கை!

தனிக்குடித்தனத்திற்கு தள்ளிவிடுகின்றது பொருளாதார சூழ்நிலை. இதனால் பேரக்குழந்தைகளும் பேத்திகளும் தாத்தா பாட்டியை காண முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே இன்று சிறு குழந்தை கூட எனக்கு ‘டென்சனாக’ உள்ளது என்று சொல்லும் நிலை வந்தது. தாத்தா பாட்டி உடன் இருந்திருந்தால் இப்படி சொல்லி இருக்காது.

கடிதம் எழுதுவதை / மறக்கவில்லை / தமிழக அரசு

எழுதிய கடித்ததை / ஏறெடுத்துப் பார்ப்பதில்லை / தில்லி அரசு

இந்த இரண்டு ஹைக்கூ கவிதைகளின் மூலம் தமிழக அரசு எழுதும் கடிதங்களை பாராமுகமாக இருந்து நடுவணரசு நடத்தும் நாடகத்தை தோலுரித்துக் காட்டி உள்ளார். நீங்கள் எழுதுறத எழுதுங்க, நாங்க எதையும் கண்டு கொள்ளாமல் எங்கள் போக்கிலேயே போவோம் என்று சொல்வதை ஹைக்கூவால் உணர்த்தி உள்ளார்.

மணல் வீடும்
திருடு போகிறது
மணற்கொள்ளை!

மணல் உருவாக பல நூறு ஆண்டுகள் ஆகும். செயற்கையாக மணல் தயாரிக்க முடியாது. வருங்கால சந்ததிகளுக்கு மணல் அவசியம். மணலைத் திருடுவது ஆற்றுக்கும் கேடு. இதனை உணராமல் பணம் சேர்க்க வேண்டும் என்ற வெறி பிடித்த மனித விலங்குகள் குழந்தைகள் கட்டிய மணல் வீட்டையும் சேர்த்து கொள்ளையடிக்கும் அவலத்தை சுட்டிய ஹைக்கூ நன்று. நூலாசிரியர் பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author