குறிஞ்சிப் பூ இதழ்கள்.

Estimated read time 1 min read

Web team

q2.jpg

குறிஞ்சிப் பூ இதழ்கள் !

நூல் ஆசிரியர் : இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

செந்தமிழ்ப் பதிப்பகம், 37, 21வது கிராஸ் பாலாஜி லே அவுட்,
ஒய்சலா நகர், 3வது மெயின், இராமமூர்த்தி நகர்
பெங்களூரு – 560 016
விலை ரூ. 100 பக்கங்கள் 144.

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ, ஒருமுறை கொடைக்கானல் சென்று இருந்த போது கண்டு மகிழ்ந்தேன். குறஞ்சி ஆண்டவர் கோவில் என்று ஒன்று உள்ளது. அதன் பின்புறம் மலர்ந்து இருந்தன. இந்த நூலின் தலைப்பான ‘குறஞ்சிப்பூ இதழ்கள்’ என்று படித்தவுடன் மலரும் நினைவுகளை மலர்வித்தன.

இந்த நூல் ஆசிரியர் இனவெழுச்சிப் பாவலர் நா. மகிழ்நன் அவர்களை நெருப்பலைப் பாவலர் இராம இளங்கோவன் அவர்கள் பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தார். நூலாசிரியர் தமிழ்ப்பற்று மிக்கவர், பேச்சு, எழுத்து இரண்டிலும் நல்ல தமிழ் கடைபிடித்து வருபவர். பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரிக்கரை கவியரங்கம், பாவாணர் பாட்டரங்கம் உள்ளிட்ட கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதை பாடி வருபவர்.

இந்த நூலில் 125 தலைப்புகளில் மரபுக் கவிதைகள் உள்ளன. மரபுக் கவிதைகள் படிப்பது என்பது பழைய பாடல்கள் கேட்டதைப் போன்ற இனிய உணர்வு தருபவை. சந்த நயம், ஓசை நயம் மட்டுமல்ல, சொற்களஞ்சியமாக நூல் உள்ளது.

வளரும் கவிஞர்கள் இந்த நூல் படித்தால் தமிழின் அருமை, பெருமை மட்டுமல்ல, பல சொற்கள் பற்றியும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். பல கவிதைகளில் சொற்களால் விளையாண்டு உள்ளார். சொற்கள் நடந்தால் வசனம். சொற்கள் நடனமாடினால் கவிதை. இந்த நூலில் சொற்கள் களிநடனம் புரிந்து உள்ளன.

கவிதைக்கு தலைப்பிடுவதும் ஒரு கலை. தலைப்பைப் படித்தாலே கவிதையைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளன. பதச்சோறாக சில தலைப்புகள் இதோ !

காதற்களியாடுவோம், கெண்டை விழிப்பார்வையால், கற்பனைக்குள் தள்ளினாள், நிகரேது தேனே, உயிருக்கு இன்பம் , ஏசுதடி என் நெஞ்சு, என்றும் தேயாது உன்முகம், குறளில் தேர்ந்தேன், மெய்தான் அன்பே, கூறடி கண்மணியே! – இப்படி 125 தலைப்புகள் உள்ளன.

காதல் கவிதைகள் எந்த வயதிலும் எழுதலாம். வயது வரம்பு இல்லை. நூல் ஆசிரியர் வயது 60 கடந்த போதும் அற்புதமான காதல் கவிதைகள் அதுவும் மரபுக் கவிதைகள் எழுதி வருவதால் இன்னும் இளமையாகவே வலம் வருகின்றார்.

காதல் கவிதை எழுதுவது இளமையைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு யுத்தியாகவும் எழுதலாம். காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் வடித்துள்ளார். அறிஞர் அண்ணா எழுதிய நூலிற்கு கம்பரசம் என்று பெயர் உண்டு. நூல் ஆசிரியர் நா. மகிழ்நன் எழுதிய இந்த நூலிற்கு காதல் ரசம் என்று வைத்து இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

சங்க இலக்கியத்தில் வரும் தலைவன், தலைவி கூற்று போலவே அவள்-அவன், கணவன்-மனைவி, காதலன்-காதலி என இருவர் கூற்றாக கவிதைகள் வடித்துள்ளார்.

விலகிலேன் !

இனியப்பூந் தென்றல் இளைய நிலாவின்
மண்ணொளித் தாரால் இதழ்விரித் தின்பம்
இனிதே ஈந்திடும், வெண்முல்லை ஈர்ப்பு
இருள்வான் விரிபட் டாடை ஒப்பனைச்
செய்யும் செதுக்காத் தாரகை மின்னல் !

இவரது கவிதைகள் படித்த போது எனக்கு டி. ராஜேந்தர் அவர்களின் கவிதைகள் நினைவிற்கு வந்தன. எதுகை, மோனை இயைபு என எதற்கும் பஞ்சமின்றி சொல் விளையாட்டு விளையாடி வர்ணனைகள் வடித்து உள்ளார்.

கவிதையுடன் ஏட்டில்?

ஈட்டியெனப் பாய்கின்ற
ஓரவிழிக் காட்டி
பூட்டியெனை அகம் வைத்தாள்
புன்முறுவல் கூட்டி
நாட்டியத்தின் நற்பங்கை
நல்லிடையில் நாட்டி
பாட்டிசைக்கும் பாவலர்க்குப்
படைத்தாளே போட்டி?

தலைவி தோழியிடம் தலைவனைப் பற்றி கூறுவது போல கவிதைகள் வடித்துள்ளார். அதில் சொல்லும் உவமை மிக வித்தியாசமாக உள்ளது பாருங்கள்.

நெத்திலி மீன்சோறு !
அத்தை மகன் தந்துவிட் டப் பார்வை
அடுப்பிலிட்ட நெத்திலிச் சாறாய்
மரபுப் படி என்றன் நினைவில்
அத்தான் நினைவாய் கொதித்து மணக்கும்!

நூல் முழுவதும் காதல் காதல் காதல் காதலின்றி வேறில்லை என்று சொல்லுமளவிற்க்கு காதல் கவிதை விருந்து வைத்துள்ளார்.

காதற்கிறுக்கு !

கண்ணுக் கினியவளே காதலியே என்றமிழின்
பண்ணுக் கிசையாகும் பாவழகே – மண்ணுக்குள்
பொன்னழகுக் கோலமிட்ட எந்தமிழ்ப் பைங்கிளியே
மின்னுகின்றாய் என் நெஞ்சில் நீ!

பாடலாகப் பாடிடும் வண்ணம் இசைப்பா வடிவிலும் கவிதைகள் உள்ளன. இசையமைத்து பாடலாகப் பாடி விடலாம்.

தடுமாறிப் போகுது (இசைப்பா)

சங்கத் தமிழ் மெல்ல இங்கு
நடந்து வந்தது!
நடந்து வந்த அழகைக் கண்டேன்
கவிதைப் பிறந்தது!
கவிதையாகவும் தமிழ் அவளின்
எழிலைச் சொன்னது – அந்த
எழிலைக் கண்ட கவிஞன் மனம்
தடுமாறிப் போனது!

இலை பூவின் மொட்டு (இசைப்பா)

அவள் செந்தாழப் பூங்கட்டு – மலர்
சூழ்ந்தாழும் தேன்சிட்டு
இவள் திருமேனி பயிராடும்
இளம்பச்சை பட்டு
அவளிதழ் காட்டும் அழகோ
இளம்பூவின் மொட்டு !

இசைப்பாக்களை எள்ளல் சுவையுடனும் வடித்துள்ளார். நீண்ட நெடிய கவிதைகளும் சிறு சிறு கவிதைகளும் என பல்சுவை விருந்தாக உள்ளன.

முடித்தாள் (இசைப்பா)

விழியோரம் நெஞ்சுக்குத் தூது விட்டாள் – எனை
ஆழி நீர் சுழல் போல ஆட்டி வைத்தாள்!
பழிக்காரி என்றுரைத்து வழக்கு தொடுத்தேன் – கோவைப்
பழவிதழ் தந்தெனக்கு வழக்கு முடித்தாள்!

நூலில் உள்ள கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் விதமாக கவிதைகள் உள்ளன.

மாந்தோப்பும் குலுங்குதடி ! (இசைப்பா)
வண்ண வண்ண நிறப் பூவாய்
வந்து விழும் உந்தன் சிரிப்பாலே
மண்ணும் இங்கே சிலிர்க்குதடி – உன்
மலர்ப்பாதம் பதிகையிலே
மாந்தோப்பும் குலுங்குது!

மரபுக் கவிதைகளால் காதல் கவி விருந்து வைத்துள்ளார். காதல் கவிதை படிப்பது ஒரு சுகம். காதல் கவிதைகள் எப்போதும் சலிப்பதில்லை. மறு வாய்ப்பு செய்தாலும் சுவை தரும். நூலாசிரியர் இனவெழுச்சிப் பாவலர் நூல் முழுவதும் நல்ல தமிழில் வடசொல் இன்றி குறிப்பாக ஆங்கிலச் சொற்கள் எதுவுமின்றி கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுக்கள். கவிதை என்ற பெயரில் ஆங்கிலச் சொற்கள் கலந்து தமிங்கிலம் வடிக்கும் கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோள். காதல் கவிதைகள் போதும் அடுத்த நூல் இனஎழுச்சிப் பாடலாக இருக்கட்டும்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author