மகேஸ்வரி.கோவை.

Estimated read time 1 min read

Web team

IMG-20240307-WA0057.jpg

ஹைக்கூ முதற்றே உலகு!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை : ப. மகேஸ்வரி,
அலுவலகப் பணி, உதவிப்பிரிவு அலுவலர், நிதி அலுவலகம், பாரதியார் பல்கலை, கோவை.

******

மதிப்பிற்குரிய கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு வணக்கம். தங்களது ஹைக்கூ நூலின் மதிப்புரையை இணையத்தில் பார்த்து, படிக்க ஆவல் கொண்டு, வானதி பதிப்பகம் சென்னை புத்தக திருவிழா-வில் கேட்ட போது, கிடைக்கவில்லை என்று தங்களிடம் சொன்ன அடுத்த நாளே எனக்கு தங்களின் ஹைக்கூ நூல்களை அனுப்பி வைத்து முனைவர் இறையன்பு அவர்களின் “புலிப்பால் இரவி” என்ற சொல்லிற்கு, அழகான காரணப் பெயருக்கு, ஏற்றாற்போல் இயல்பாய் நடந்தது மகிழ்வு … நன்றிகள் பல…

“ஹைக்கூ முதற்றே உலகு” எனும் புத்தகத்தை முதலில் வாசித்தேன். நான் ஒரு சாதாரண வாசிப்பாளர் மட்டுமே. எனது மதிப்புரையை இணைத்துள்ளேன் ஐயா, பிழைகள் பொறுத்தருள்க.

நன்றி.

என்றும் அன்புடன் / நட்புடன்,
மகேஸ்வரி.

மதிப்புரை

கவிஞர் இரா. இரவி அவர்களின் “ஹைக்கூ முதற்றே உலகு” ஹைக்கூ கவிதைகள் புத்தகத்தை வாசித்ததில் சாதாரண வாசிப்பாளரான என்னில் உதித்த எண்ணங்களை மதிப்புரையாக தருவதில் மகிழ்வடைகிறேன்.

ஹைக்கூ கவிதைகளில் இவ்வளவு தலைப்புகளில் சொல்ல என்னவெல்லாம் இருக்கும் என்று கேள்விக்குறியோடு தொடங்கினேன் வாசிக்க!

வாசிக்க வாசிக்க ஆச்சரியத்தோடு, ஆச்சரியக்குறியோடு ஹைக்கூ இரவி அவர்களின் பொதுநல எண்ணங்களையும், அதை வெளிப்படுத்தும் திறன்களையும் காண முடிந்தது. காண்பதை எல்லாம் கவியோடு காண்பார் போலும்! தோரண வாயிலாக முனைவர் இறையன்பு அவர்கள், கவிஞர் இரா.இரவி மீது கொண்டுள்ள நம்பிக்கையும், பற்றையும், நட்பையும் கண்டு சந்தோசித்தேன்.

முனைவர் இரா.மோகன் அவர்களின் அணிந்துரை விரிவாக விளக்கமாக முழு புத்தகத்தின் சாரமாக கொடுத்துள்ளது மிக அருமை! இரவி அவர்களின் எழுத்துக்களுக்குக் கிடைத்த வெற்றியும் கூட! மொத்தம் 30 தலைப்புகளில் ஹைக்கூ கவிதைகள்!

அற்புத மனிதர் நம் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களைப் பற்றிய ‘கலாம் நாற்பது’வில் ஒவ்வொரு கவிதையும் சிறப்பு, பொருத்தம்!! மற்றுமுள்ள 29 தலைப்புகளின் கீழுள்ள அனைத்து கவிதைகளும் சிந்திக்கத் தூண்டுபவை! இயற்கைய ரசிக்க இறகுகள் கூட்டுபவை! சமத்துவத்தை நிலைநாட்ட சாமரம் வீசுபவை! வாழ்க்கையை வழிபட பாதை தருபவை!

மனித மனங்களைப் படித்து, ஐந்தறிவு பிராணிகளையும் சிலாகித்து, இயற்கையை ஆராதித்து, நூலகத்தையும், புத்தகத்தையும் உரைத்து, நட்பை நட்பாய்ப் பாராட்டி, இன்றைய நீதியின் நிலைப்பாட்டை வருத்தமாய் வெளிப்படுத்தி, அரசியல் அவலங்களை அறுதியிட்டு, தன்னம்பிக்கை விதைகளை தன்மையாய் தூவி, உயர்திணை எதுவென உயர்வாய் சொல்லி, பெண்மையை பாங்காய் போற்றி, உற்சாகமூட்டும் நூலினைக் கொடுத்துள்ளது மனதிற்கு உரமிட்டது போல மகிழ்வூட்டுகிறது.

தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்கள் குறிப்பிட்ட கவிதைகள் அனைத்தும் எனக்கு மிகச்சிறப்பாய் தோன்றுகிறது!

முத்தாய்ப்புக் கவிதைகள்!

திருமணம் விரும்பாத திரு மனம் படைத்தவர் கலாம்!

பணத்தால் மதிப்பது விடுத்து குணத்தால் மதித்தால் நலம் பெறும் நாடு!

கண்டிக்க வேண்டும் தவறு செய்தது அன்பானவரானாலும்!

பிரார்த்தனையிலும் சிறந்தது பிறர் கண்ணீர் துடைப்பது!

போகும் உயிரைப் போராடி மீட்பவர்கள் மருத்துவர்கள்!

விழாமல் என்றும் முட்டுக் கொடுப்பவன் நண்பன்!

அறிவாளிகள் இருக்கும் அறிவார்ந்த இடம் நூலகம்!

நேரம் இருப்பதில்லை புறம் பேசிட உழைப்பாளிக்கு!

தரமாட்டான் அவ்வைக்கு நெல்லிக்கனி இன்றைய அதியமான்!

எல்லாவற்றிற்கும் மேலாக கவிஞர் இரா.இரவி அவர்களின் பொருத்தமான ஒரு ஹைக்கூ என்னவெனில்,

ஊக்கப்படுத்துவது ஒரு வகை,
காயப்படுத்துவது மறுவகை – விமர்சனம்!
ஹைக்கூ!

“என்றும் ஊக்கப்படுத்தியே அனைத்து தமிழறிஞர்களின் படைப்புகளுக்கு விமர்சனம் படைப்பார் பதிப்பிற்குரிய கவிஞர் இரா.இரவி அவர்கள்!

நன்றி… வணக்கம்!….

என்றும் அன்புடன் / வாசகி
மகேஸ்வரி.

Please follow and like us:

You May Also Like

More From Author