ஒற்றை சிறகோடு

Estimated read time 0 min read

Web team

r2.jpg

ஒற்றைச் சிறகோடு ! கவிஞர் இரா .இரவி !

ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும்
உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும் !

இரு சிறகால் பறப்பது என்பது இயல்பு
இரண்டில் ஒன்றை இழந்தும் பறப்பது சிறப்பு !

முயற்சி பயிற்சி செய்தால் போதும்
முன்னோக்கிப் பறக்கலாம் சிறக்கலாம் !

பயன்படாது ஒற்றைச் சிறகு எதற்கு
பாரமென வருந்தினால் பறக்க முடியாது !

ஒற்றைச் சிறகென வருந்துவது விடுத்து
ஓங்கிப் பறக்க முயன்றிட வேண்டும் !

முடியுமா ? என்று தயங்குவது விடுத்து
முடியும் என்றே பறந்திட வேண்டும் !

மற்றவர்களால் வாங்க முடியாத பதக்கம்
மாற்றுத் திறனாளி மாரியப்பன் வாங்கினான் !

காலில் குறை என்று முடங்கவில்லை
காலை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினான் !

தலை வழுக்கை என்பதற்காக வருந்திய
தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்அவர்கள் !

மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டார்
மீசைக்காரர் என்றே எல்லோரும் அழைத்தனர் !

வாழ்வியல் தத்துவம் என்று விளக்கினார்
வியந்து விட்டேன் விளக்கம் கேட்டு !

இழந்ததற்காக வருந்துவதை விட்டு விட்டு
இருப்பதைச் செம்மையாக்குவது சிறப்பு !

ஒற்றைச் சிறகு போனால் போகட்டும்
மற்றொன்றுக்கு மகிழ்ச்சி கொள்வோம் !

ஒற்றைச் சிறகோடும் உயரம் செல்லலாம்
உள்ளத்தில் ஒளி பிறந்தால் வழி பிறக்கும் !
.

Please follow and like us:

You May Also Like

More From Author