கவிதைகள்

Estimated read time 1 min read

Web team

IMG_20240202_145305.jpg

கவிஞர் இரா .இரவி கவிதைகள் படித்து மகிழுங்கள் !

உலகின் முதல் மொழி தமிழ் ! கவிஞர் இரா .இரவி !

உலகின் முதல் மொழி தமிழ் உண்மை
உரைத்தவர் பன்மொழி அறிஞர் பாவாணர் !

அமெரிக்காவில் மொழிகளின் ஆய்வாளர் இன்று
அன்று பாவாணர் உரைத்ததை வழிமொழிந்துள்ளார் !

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
ஒப்பற்ற உன்னத மொழி நம் தமிழ்மொழி !

உலக உயிரினங்கள் உச்சரிக்கும் சொல்
உயர்வான அம்மா எனும் தமிழ்ச்சொல் !

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது தமிழ்
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் தமிழ் !

இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்
எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ்!

உலகப் பொது மறையை வழங்கிய தமிழ்
உலக இலக்கியங்களில் தலை சிறந்தது தமிழ்!

கற்கண்டு கம்ப இராமாயணத்தைத் தந்த தமிழ்
கண்ணகியின் சிலப்பதிகாரத்தைத் தந்த தமிழ்!

ஒவ்வொரு சொல்லிற்கும் பொருள் உண்டு
ஒரு எழுத்துக்கும் பொருள் உள்ள தமிழ் !

உலகின் முதல் மொழி மட்டுமல்ல தமிழ்
உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் !

பன்மொழி அறிஞர் பாரதியார் போற்றிய தமிழ்
பண் இசைத்து பாடல்கள் தந்திட்ட தமிழ் !

உலகம் முழுவதும் பேசப்படும் தமிழ்
உலகம் அறிந்த முதல் மொழி தமிழ் !

பழமைக்குப் பழமை புதுமைக்குப் புதுமை தமிழ்
பண்டைத்தமிழர்கள் சங்கம் வைத்து வளர்த்த தமிழ் !

ஈடு இணையற்ற உயர் தனிச்செம்மொழி தமிழ்
என்றும் அழியாத வரம் பெற்ற நம் தமிழ் !

எழுத்து பேச்ச்சு இரண்டிலும் வாழும் தமிழ்
எங்கும் எதிலும் எப்போதும் வாழும் தமிழ் !

தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி இல்லை
தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழி மொழியே இல்லை !

உலகத் தமிழர்கள் யாவரும் பெருமை கொள்வோம்
உலகில் தமிழராகப் பிறந்ததற்காக நாம் !

கல்லில் அற்புத சிலை வடித்தவன் தமிழன்
மரத்தில் அழகிய சிற்பம் செதுக்கியவன் தமிழன் !

உலோகத்திலும் உன்னத சிலை செய்தவன் தமிழன்
உலகிற்கு நாகரிகம் கற்பித்த ஆசான் தமிழன் !

கடல் கடந்து போரிட்டு வென்றவன் தமிழன்
கல்லணையைக் கட்டிய கரிகாலன் தமிழன் !

முல்லைக்குதேர் தந்து மகிழ்ந்தவன் தமிழன்
மயிலுக்கு போர்த்திடப் போர்வை ஈந்தவன் தமிழன் !

பசுவுக்காக மகனைக் கொல்லத் துணிந்தவன் தமிழன்
புறாவிற்காக தன தசையை அறுத்தவன் தமிழன் !

விலங்குகளை பறவைகளை நேசித்தவன் தமிழன்
விண் முட்டும் பெருமை மிக்கவன் தமிழன் !

காலத்தால் அழியாத பெருமை மிக்கவன் தமிழன்
காலந்தோறும் திறமை நிருபித்து வருபவன் தமிழன் !

பொக்கரானில் அணுகுண்டு வெடித்தவன் தமிழன்
சந்திரனுக்கு சந்திராயான் அனுப்பியவன் தமிழன் !

சிம்பொனி இசைத்து பிரமிக்க வைத்தவன் தமிழன்
ஆசுகார் விருது இரண்டை வென்றவன் தமிழன் !

பட்டிமன்றங்கள் மூலம் தமிழ் வளர்ப்பவன் தமிழன் !
பாட்டுமன்றங்கள் மூலம் தமிழ் வளர்ப்பவன் தமிழன் !

உலக சாதனைகள் பல நிகழ்த்தியவன் தமிழன்
உலகமே வியந்து பாராட்டி மகிழும் தமிழன் !

உலகம் உள்ளவரை தமிழ் மொழி இருக்கும்
தமிழ்மொழி உள்ளவரை தமிழன் புகழ் நிலைக்கும் !
.
ஆறாயிரம் மொழிகள் உலகில் இருந்தாலும்
அழகுத் தமிழுக்கு ஈடான மொழி இல்லை !

ஆய்வு சொல்கிறது அழியும் மொழிகளில் தமிழ்
அனைவரும் சொல்வோம் அழியவிட மாட்டோம் !
————————————————————————————————–

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !
———————————————————————————-

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால்
இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்தாகக் கொள்வோம் என்பது மெய்யே !

ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில்
வேறெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு !

எழுத்துக்களுக்குப் பற்றாக்குறை இல்லை தமிழில்
ஏன் ? எதற்கு ? பிறமொழி எழுத்துக்கள் சிந்திப்பீர் !

வடமொழி எழுத்துக்களைக் கலப்பதை நிறுத்திடுவோம்
வண்டமிழை கலப்பின்றி வளர்த்திடுவோம் !

தமிழ்மொழியில் ஒரேழுத்துக்கும் பொருள் உண்டு
தமிழ்மொழி போல வேறுமொழிக்கு சிறப்பு இல்லை !

வறுமையில் வாடுபவன் கடன் வாங்கலாம்
வளமான தமிழுக்கு பிறமொழிக்கடன் வேண்டாம் !

உணவில் கலப்படம் உயிர்க்குக் கேடு
உன்னத மொழியில் கலப்படம் தமிழுக்குக் கேடு !

படிக்காத பாமரர்கள் பிறமொழி எழுத்து உச்சரிப்பதில்லை
படித்த பண்டிதர்கள்தான் பிறமொழி எழுத்தை எழுதுகின்றனர் !

படிக்காத கிராமத்தினர் ராசா ரோசா என்கின்றனர்
படித்தவர்கள்தான் ராஜா ரோஜா என்கின்றனர் !

உலகின் முதல்மொழி தமிழ்மொழி அறிந்திடுக
உலகப் பொதுமறை தந்தமொழி நம் தமிழ் !

தமிழ் மொழியின் பெருமையைக் காத்திடுவோம்
தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்திடுவோம் !
——————————————————————————————————
உலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் !
கவிஞர் இரா .இரவி !

குடும்பம் என்ற மரத்தின் ஆணி வேர் பெண்கள் !
குடும்பத்தைப் பேணிக் காப்பது பெண்கள் !

பெண்ணில்லா வீடு வீடல்ல காடு !
பெண்ணே இருள் அகற்றும் விளக்கு !

அன்பு செலுத்தி வளர்ப்பது அம்மா !
அறிவு சொல்லி வளர்ப்பது அக்கா !

மாதா பிதா குரு மொத்தம் மனைவி !
மனிதவாழ்வில் பெருந்துணை பெண்கள் !

பெண் இல்லையேல் ஆண் இல்லை !
பிறப்பு முதல் இறப்பு வரை துணை பெண்கள் !

ஒரு ஆண் படித்தால் அவனுக்கு நன்மை !
ஒரு பெண் படித்தால் குடும்பத்திற்கே நன்மை !

மெழுகென உருகி ஒளி தரும் பெண்கள் !
சந்தனமென தேய்ந்து வாசம் தரும் பெண்கள் !

தோணியென இருந்து கரை சேர்க்கும் பெண்கள் !
ஏணியென இருந்து வாழ்வில் உயர்த்திடும் பெண்கள் !

ஆறை நூறாக்கும் ஆற்றல் மிக்கோர் பெண்கள் !
ஆறுதல் தந்து தேற்றி தெம்பு தரும் பெண்கள் !

கவலைகளை மறக்கடித்து மகிழ்விக்கும் பெண்கள் !
கண்ணை இமை காப்பது போல காக்கும் பெண்கள் !

நல்வழி நடத்திடும் நாயகிகள் பெண்கள் !
நல்லவனாய் வாழ் வகை செய்திடும் பெண்கள் !

தென்றலை புயலாக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் !
புயலைத் தென்றலாக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் !

தன்னலம் மறந்து குடும்பநலம் காக்கும் பெண்கள் !
தன்னிகரில்லா ஆற்றல் பெற்றோர் பெண்கள் !

பெண்களை மதிக்கும் சமுகம் சிறக்கும் !
பெண்களை மதிக்காத சமுகம் சீரழியும் !

உலக அமைதிக்கு காரணம் பெண்கள் !
உலகில் போற்றப்பட வேண்டியோர் பெண்கள் !
—————————————————————————————————-

பெண்கள் ! கவிஞர் இரா .இரவி !

அன்னையாக சகோதரியாக மனைவியாக மகளாக
அன்புத்தோழியாக வாழ்வில் அங்கம் தங்கப்பெண்கள் !

பிறப்பு முதல் இறப்பு வரை ஆண்களுக்கு
பெண்களின் பங்களிப்பு சொல்லில் அடங்காது !

தன்னலமின்றி குடும்ப நலம் பேணும் பெண்கள்
தன்னம்பிக்கையோடு சாதிக்க உதவிடும் பெண்கள் !

வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணிற்குப் பின்னும்
விவேகமான பெண் இருப்பது முக்கால உண்மை !

நல்லவனாக்கி நல்லோர் மதித்திட வைப்போர்
நல்வழி நடத்திடும் வழிகாட்டிகள் பெண்கள் !

மனம் போன போக்கில் போன ஆண்களை
மனமாற்றம் செய்து மடைமாற்றுவோர் பெண்கள் !

புயலையும் பூவாக்கும் பேராற்றல் பெற்றோர் பெண்கள்
புதுமை விரும்பி புதுமை புகுத்தும் புரட்சிப் பெண்கள் !

வெள்ளத்தையும் வடிகாலாக்கும் வித்தைக் கற்றோர்
விவேகத்தை கற்பிக்கும் ஆசான்கள் பெண்கள் !

ஆண்களின் மேன்மைக்கு மென்மைக்கு காரணம் பெண்கள்
அடியாளையும் அடியாராக்கும் ஆற்றல் பெண்கள் !

ஆணாதிக்கச் சிந்தனை அறவே அகற்றிடுவோம்
அறிவுச்சுடர் பெரியார் சொல்படி மதித்திடுவோம் !

மனித குலத்தை உயர்த்த வந்த விடியல்கள்
மனிதர்களை மாண்பாக்கி உயர்த்துவோர் பெண்கள் !

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை தகர்ப்போம்
மாதரை மண்ணின் மாணிக்கங்களாக மதிப்போம் !

பெண்கள் இல்லாத உலகம் இருட்டாகும்
பெண்களே இந்த உலகின் ஒளியாகும் !
————————————————————

மகள் !கவிஞர் இரா. இரவி !

உறவுகளில் உன்னதமானவள் மகள்
உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள்

மணம் முடித்தப்பின்னும் மறக்காதவள்
மனதின் ஓரத்தில் வைத்திருப்பவள்

கவலைகளை மறக்கடிக்கும் ஆற்றல்மிக்கவள்
கண்களின் காட்சிக்கு இனிமைதருபவள்

பார்த்தால் பசி தீரும் நிரூபித்தவள்
பாசத்தில் ஈடு இணையற்றவள்

பெற்றோரைப் பழித்தால் பொறுக்காதவள்
பொங்கி எழுந்து விடுபவள்

இளவரசியாக இல்லத்தில் இருப்பவள்
இளவரசனைவிட பெற்றோரை நேசிப்பவள்

அப்பாவின் செல்லமாய் வளர்பவள்
அம்மாவிடமும் அன்பு செலுத்துபவள்

மனைவி சொன்னால் கேட்காதவனும்
மகள் சொன்னால் கேட்பான்

அப்பாவை ஆற்றுப்படுத்தும் அற்புதமானவள்
அப்பாவை பாசத்தால் கட்டுபவள்

புயலை தென்றலாக்கும் வித்தை கற்றவள்
தென்றலை புயலாக்கும் விவேகம் கற்றவள்

மட்டற்ற மகிழ்வைத் தருபவள்
மற்ற எல்லாவற்றிலும் உயர்ந்தவள்

பெற்றோரின் மீதான பாசத்தில் சிறந்தவர்கள்

மகன்களா ? மகள்களா? பட்டிமன்றம் நடத்தினால்

மகள்களே! என்று தான் தீர்ப்பு வரும் காரணம்
மகள்களே என்றும் மகத்தானவர்கள் !
—————————————————————————————-
புதுமைப் பொங்கல் ! கவிஞர் இரா. இரவி

மூடநம்பிக்கைகள் என்ற பழையன கழித்து
பகுத்தறிவு கொண்டு புதுமைப்பொங்கல் படைப்போம்.

எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்வி கேட்போம்
எதையும் ஆராய்ந்த பின்னே ஏற்றிடுவோம்

ராசிபலன் சோதிடங்களுக்கு முடிவு கட்டுவோம்
வாஸ்துபலன் நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

தெற்கே சூலம் வடக்கே சூலம் வேண்டாம் நமக்கு
எத்திசையும் நல்ல திசையே பயணிப்போம்

எமகண்டம் இராகு காலம் பார்ப்பதில்லை
எல்லா நேரமும் நல்ல நேரமே செயல்புரிவோம்

சகுனம் பார்ப்பதில்லை என முடிவெடுப்போம்
சிந்தித்து செயல்பட்டு சிகரம் தொடுவோம்

பூசணிக்காயை வீணாய் வீதியில் உடைக்காதிருப்போம்
பூசணியை சமைத்து காயாக உண்டிடுவோம்

திருஷ்டி என்ற பெயரில் தீ கொளுத்தாதிருப்போம்
தெருவில் தீ வைத்து தீ விபத்துக்கு காரணமாகாதிருப்போம்

சோதிடம் என்ற பெயரில் பணவிரயம் வேண்டாம்
சிந்தனையை பகுத்தறிவிற்கு நாளும் பயன்படுத்திடுவோம்

சாதி மதச் சண்டைகளுக்கு முடிவுரை எழுதிடுவோம்
சகோதர உணர்விற்கு முன்னுரை எழுதிடுவோம்

மனித நேயத்திற்கு என்றும் முன்னுரிமை தந்திடுவோம்
மனிதனை மனிதன் என்றும் நேசிக்கக் கற்றிடுவோம்

தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமையாகாதிருப்போம்
தொல்லைக்காட்சியாகி விட்ட தொடர்களைத் தள்ளி வைப்போம்

நடிகரை தலையில் வைத்து கூத்தாடாமல் இருப்போம்
நடிகரையும் சக மனிதனாகவே மதித்திடுவோம்

குடி கெடுக்கும் குடிக்கு அடிமையாகாதிருப்போம்
குடியில் விழுந்தோரை போத்தித்துத் திருத்திடுவோம்

அமைதியான வாழ்விற்கு உறுதி தருவோம்
ஆர்ப்பாட்டங்களை விடுத்து எளிமையை கடைபிடிப்போம்

புதுமைபொங்கல் பொங்கிடுவோம் வாருங்கள்
புத்துணர்வு பிறக்கும் புதுவழி திறக்கும்.
————————————————————————————————–
முயற்சி திருவினையாக்கும் ! கவிஞர் இரா .இரவி !

என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம்
என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் !

உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும்
உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் !

திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால்
திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும் !

கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல்
கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் !

நேரத்தை நீ மதித்து நடந்தால்
நேரம் உன்னை மதித்து நடக்கும் !

சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால்
சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் !

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம்
கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

முந்தைய சாதனை வரலாறு படித்திடு
முயன்று முந்தையதை முறியிடித்திடு !

அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே
அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது !

உன்னை நீ முதலில் முழுதாக நம்பு
உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு !

நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை
நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு !

முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும்
முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது !
.
.————————————————————————————————-
பாதச்சுவடுகள் ! கவிஞர் இரா .இரவி !

கடற்கரையில் உள்ள பாதச்சுவடுகள்
காதலர்கள் வந்து போனதைப் பறை சாற்றுகின்றன !

இரண்டு கால்களின் பாதச்சுவடுகளும் ஒன்று
இரண்டு காதலர்களின் எண்ண அலைகள் ஒன்று !

கடற்கரை வந்து கரம் பிடித்தோர் உண்டு
கரம் பிடிக்க முடியாமல் பிரிந்தோர் உண்டு !

திட்டமிட்டு பிரிந்திட்ட காதலர்கள் உண்டு
திட்டமிட்டு இணைந்திட்ட காதலர்கள் உண்டு !

இருவராக இணைந்தே வந்தவர்கள் உண்டு
இருவர் ஒருவராகி வந்து செல்வதும் உண்டு !

ஊடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு
உடல் காரணமாகப் பிரிந்தவர்கள் உண்டு !

பாதச்சுவடுகள் பார்க்க அழகாக இருந்தாலும்
பெரும் காற்று வந்து கலைப்பதும் உண்டு !

கடல் கரையோரத்து பாதச்சுவடுகளை
கடல் அலைகள் வந்தும் அழிப்பது உண்டு !

காதலர்களின் பாதச்சுவடுகள் மட்டுமல்ல
கடலை சுண்டல் விற்கும் பாதச்சுவடுகள் உண்டு !

கல்வெட்டு போல பதிந்தவைகள் உண்டு
காற்றால் அழிந்தவைகள் உண்டு !

வாழ்க்கை நிரந்தரமன்று என்ற வாழ்வியலை
வந்து போனவர்களின் பாதச்சுவடுகள் உணர்த்துகின்றன !
——————————————————————————–
காத்திருப்பு ! கவிஞர் இரா .இரவி !

இலவு காத்த கிளி கதையாக
இங்கே காத்திருந்து ஏமாந்தோர் அதிகம் !

பழம் என்று காத்திருந்து பஞ்சானது கண்டு
பச்சைக் கிளி வருந்தியது போலவே !

பலர் நடக்காது என்று தெரிந்திருந்தும்
பொறுமையோடு காத்திருந்து ஏமாறுகின்றனர் !

பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணி
பேருந்து வந்ததும் பயணிக்கிறான் !

பெண்ணிற்காகக் காத்திருந்து பலர்
பொன்னான வாழ்கையை இழந்தனர் !

காத்திருந்த காலத்தில் செயலாற்றினால்
கடமையில் புகழ் சேர்ந்திருக்கும் !

பொன்னை விட மேலானது நேரம்
பொன்னை வாங்கலாம் நேரத்தை வாங்கமுடியாது !

வினாடியின் மதிப்பு விளையாட்டு வீரன் அறிவான்
நிமிடத்தின் மதிப்பு விமானப்பயணி அறிவான் !

அர்த்தமுள்ள அளவான காத்திருப்பு நன்று
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பு நன்றன்று !

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பும் நஞ்சு !

பொருளற்ற காத்திருப்பு விவேகமன்று
பொழுதை மதித்தவன் சிறப்பான் !
.காத்திருப்பு ! கவிஞர் இரா .இரவி !

இலவு காத்த கிளி கதையாக
இங்கே காத்திருந்து ஏமாந்தோர் அதிகம் !

பழம் என்று காத்திருந்து பஞ்சானது கண்டு
பச்சைக் கிளி வருந்தியது போலவே !

பலர் நடக்காது என்று தெரிந்திருந்தும்
பொறுமையோடு காத்திருந்து ஏமாறுகின்றனர் !

பேருந்திற்காகக் காத்திருக்கும் பயணி
பேருந்து வந்ததும் பயணிக்கிறான் !

பெண்ணிற்காகக் காத்திருந்து பலர்
பொன்னான வாழ்கையை இழந்தனர் !

காத்திருந்த காலத்தில் செயலாற்றினால்
கடமையில் புகழ் சேர்ந்திருக்கும் !

பொன்னை விட மேலானது நேரம்
பொன்னை வாங்கலாம் நேரத்தை வாங்கமுடியாது !

வினாடியின் மதிப்பு விளையாட்டு வீரன் அறிவான்
நிமிடத்தின் மதிப்பு விமானப்பயணி அறிவான் !

அர்த்தமுள்ள அளவான காத்திருப்பு நன்று
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பு நன்றன்று !

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
அர்த்தமற்ற அளவற்ற காத்திருப்பும் நஞ்சு !

பொருளற்ற காத்திருப்பு விவேகமன்று
பொழுதை மதித்தவன் சிறப்பான் !
.——————————————————————————————

காதல் எனும் ஒரு வழிப்பாதை: கவிஞர் இரா .இரவி

அன்றும் இன்றும் என்றும் இனிக்கும் காதல்

ஆதியில் தொடங்கி கணினிக் காலமும் தொடர்வது !

காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உன்னதம்

காதலிக்காதோர் மண்ணின் சொர்க்கம் காணாதோர் !

காதலர்கள் அழிந்தாலும் காதல் அழிவதில்லை

காதல் முக்காலமும் எக்காலமும் வாழும் !

ஒரே ஒரு முறை காதல் அனுபவம்

உயிருள்ளவரை நினைவில் நிற்கும் !

மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும்

முதல் காதல் என்றும் வீற்றிருக்கும் !

காதலில் வென்றவர்கள் மறக்கிறார்கள்

காதலில் தோற்றவர்கள் மறப்பதில்லை !

காதல்தோல்வி வலி உணர்தவர்களுக்கே புரியும்

காதலை அறியாதவர்களுக்கு புரிவதில்லை !

மூன்றாம் நபர் சதியாலும் முறிந்திருக்கலாம்

மூச்சு உள்ளவரை நினைவு அழியாது !

உலகின் எதோ ஒரு மூலையில் இருந்தாலும்

உள்ளத்தில் ஒரு வித ஏக்கம் இருக்கும் !

பார்க்க விரும்பவில்லை உதடுகள் சொல்லும்

பார்க்க வேண்டுமென்று உள்ளம் துடிக்கும்

உண்மைக்காதலை ஒருபோதும் மறக்க முடியாது

உண்மைக்காதல் ஒருவழிப்பாதை திரும்ப முடியாது !
——————————————————————————–

இழப்புகள் தரும் வலி ! கவிஞர் இரா .இரவி !

இருக்கும் போது பெற்றோர் அருமை
இன்று பலருக்குப் புரிவதில்லை !

அவர்களை இழந்த பின்னே
அருமை அறிந்து அழுவார்கள் !

நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நின் பெற்றோர் அருமை இழந்தால் புரியும் !

மதிக்க வேண்டிய காலத்தில் மதிக்காது
மரித்த பின்னே மதித்து என்ன பயன் ?

மூத்தோர் சொல் முன்னே கசக்கும்
பின்னர் இனிக்கும் புரிந்திடுக !

அனுபவசாலிகளின் பட்டு உணர்ந்த
அனுபவத்தை கேட்டு நடத்தல் நன்று !

இருக்கும் போதே பெற்றோரை
இனியாவது மதித்து நடங்கள் !

மனம் நோகும் படி பேசாதீர்கள்
மனம் மகிழ்வோடு வைத்து இருங்கள் !

பிறப்பும் இறப்பும் ஒரே ஒரு முறைதான்
பெற்றோரைப் பேணிக் காத்திடுவோம் !

இழப்புகள் தரும் வலி தரும்
இருக்கும்போது போற்றிடுங்கள் !

————————————————————————————————

கவலை வேண்டாம் ! கவிஞர் இரா .இரவி !

எதை இழந்தாலும் மீண்டும் பெற்று விடலாம்
இழப்புகளுக்காக கவலை வேண்டாம் !

தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம்
துன்பம் இதுவும் கடந்து போகும் !

எரிமலை அருகிலும் மனிதன் வாழ்கிறான்
பனிமலை மீதிலும் மனிதன் வாழ்கிறான் !

இடர்பாடுகள் வந்தது கண்டு உடையாதே
இன்னல்கள் கவலைப்படுவதால் தீராதே !

பெய்யாமல் வாட்டியதுண்டு மழை
பெய்து வாட்டுகின்றது மழை !

சுனாமியின் போதும் உயிர்கள் போனது
சூறைக்காற்று மழையிலும் உயிர்கள் போனது !

அணுகுண்டால் சிதைந்த சப்பான் மீண்டது
அடைமழையால் சிதைந்த தமிழகம் மீண்டிடும் !

மனிதாபிமானம் மரிக்கவில்லை உணர்ந்தோம்
மதங்கள் கடந்து மனிதம் வென்றது !

உதவிக்கரங்கள் நீட்டிய உள்ளங்கள் வாழ்க
உள்ளன்போடு உதவிய நேயர்கள் வாழ்க !

கவலையை மறப்போம் கண்ணீரைத் துடைப்போம்
கட்டி எழுப்போவும் நம்பிக்கை கட்டிடத்தை !

நம்பிக்கை நாரால் மாலை தொடுப்போம்
நாளை நமதே தோள் கொடுப்போம் !

———————————————————————————–
பயணம் ! கவிஞர் இரா .இரவி !

பிறப்பில் தொடங்கி இறப்பு வரை
பயணம் தொடரும் அதுவே வாழ்க்கை !

ஆதியில் பயணம் பெற்றோருடன்
அடுத்த பயணம் வாழ்க்கைத் துணையுடன் !

பெற்ற குழந்தைகளுடன் தொடரும்
பயணம் பாடங்கள் கற்பிக்கும் !

உலகைப் புரிந்துக் கொள்ள முடியும்
உணர்வுகளை அறிந்துக் கொள்ள முடியும் !

நேற்று போல இன்று இருப்பதில்லை
இன்று போல நாளை இருப்பதில்லை !

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்
ஓடுகின்ற கடிகார முள் போல ஓடும் !

நல்வழி நடந்தால் நிம்மதியாகும்
தீய வழி நடந்தால் நிம்மதி போகும் !

இலக்கு உள்ள பயணம் இனிக்கும்
இலக்கற்ற பயணம் இன்னல் தரும் !
.———————————————————————————–
என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !

உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது
உணவிலிருந்து உடை வரை அந்நியமானது

இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று
எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று

வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று
வியாபாரம்என்று வந்து ஆள்கின்றனர் இன்று

விதை நெல்கள் காணமல் போனது
விதைகள் அயல்நாட்டான் முடிவானது

இயற்கை விவசாயம் அழிந்து விட்டது
செயற்கை உரங்கள் பெருகி விட்டது

பூச்சி மருந்துகள் மனிதனையும் கொல்கின்றது
பூச்சிகள் பல புதிது புதிதாக உருவானது

உலகமயம் என்ற பெயரில் வந்தனர்
உலை வைத்தனர் உள்ளூர் தொழில்களுக்கு

தாராளமயம் என்ற பெயரில் வந்தனர்
தாராளக் கொள்ளை அடிக்கின்றனர்

புதிய பொருளாதாரம் என்ற பெயரில்
புதுப்புது கொள்ளை அடிக்கின்றனர்

ஆயுத வியாபாரம் செய்து நம்மிடமிருந்து
அள்ளிச் செல்கிறான் கோடிகளை சிலர்

அணு உலைகளை தலையில் கட்டி
ஆபத்தில் ஆழ்த்தி கோடிகள் பெறுகிறான்

திறந்த வீட்டில் நாய்கள் நுழைந்த கதையாய்
தேசத்தின் உள்ளே பன்னாட்டுக் கொள்ளையர்கள்

என் தேசம் !என் சுவாசம் ! என்று உணர்வோம்
இனியாவது விழிப்போம் கொள்ளையரை விரட்டிடுவோம்
.——————————————————————————

தொலைந்து போன கடிதம் ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாட்டு மீனவர்கள் மீன் பிடிக்க
கடலுக்குள் செல்லும்போதெல்லாம் !

இலங்கை இராணுவம் உடனே வந்து
இரக்கமின்றி சுடும் ! கைது செய்யும் !

கடலில் ஆதிக்கம் செலுத்தும்
கண்டபடி சுட்டுத் தள்ளும் !

படகுகளைப் பறிமுதல் செய்யும்
பாவம் வலைகளையும் அறுக்கும் !

மீன்களையும் பறிமுதல் செய்யும்
மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் !

இலங்கை சிறையில் அடைக்கும்
இன்னும் சித்திரவைதைகள் செய்யும் !

தானம் தந்த கச்சத் தீவில் தமிழர்களின்
தலை தெரிந்தால் சுட்டு விடும் !

வலை உலர்த்த அனுமதி இருந்தும்
வளைத்து கைது செய்து மகிழும் !

அப்பாவி மீனவர்கள் மீது அவர்கள்
ஆயுதம் கடத்துவதாய் வழக்குப் போடும் !

இழந்த உயிர்கள் கணக்கில் அடங்காது
இன்னும் மீனவர் வாழ்க்கை விடியவில்லை !

தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர்
தட்டிக் கேட்க நாதியே இல்லை !

முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்
இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார் !

வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்
தொலைந்து போன கடிதம் ஆகும் !

———————————————————————————————
இனி ஒரு விதி செய்வோம் ! கவிஞர் இரா .இரவி !

வாக்களிக்கப் பணம் வாங்குவதில்லை என்று
வாக்காளர்கள் இனி ஒரு விதி செய்வோம் !

குளித்து விட்டு வந்து யானை தன் தலையில்
தானே மண்ணை அள்ளிப் போடுமாம் !

வாக்காளர்களும் வாக்களிக்க பணம் பெறும்
வழக்கத்திற்கு முடிவு கட்டுவோம் !

புழுவிற்கு ஆசைப்பட்டு தூண்டிலில்
விழுந்த மீனாய் துடிப்பதை நிறுத்துவோம் !

வாக்களிக்க வாங்கும் பணம் ஒரு நாள் இன்பம்
ஐந்து வருடங்கள் பெரும் துன்பம் தரும் !

வேறு மாநிலங்களால் நடக்கவில்லை
வேதனை தரும் இந்த அவலம் !

தமிழகத்தில் மட்டுமே அரங்கேறி
தலைக்குனிவைத் தருகின்றது !

கைநீட்டிப் பணம் பெற்ற காரணத்தால்
கேள்வி அவர்களை கேட்க முடியவில்லை !

கேவலமாக பார்க்கிறார்கள் வாக்காளர்களை
கௌரவமாக வாழ பணம் வாங்காதிருப்போம் !

நடந்தவைகள் போகட்டும் இனி
நடப்பவைகள் நல்லவையாகட்டும் !
————————————————————————————————

இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி !

இன்று புதிதாய் பிறந்தோம் நாம் !
இனி நடப்பவை நல்லவையாகட்டும் !

பழைய கவலைகளை மறந்திடுவோம் !
பழைய வலிகளை மறந்திடுவோம் !

வேற்றுமைகளை விடுத்து இணைவோம் !
வேதனைகளை மறந்து மகிழ்ந்திடுவோம் !

பிறந்த குழந்தை சூதுவாது அறியாது !
பிறந்த குழந்தையின் மனம் பெற்றிடுவோம் !

குழந்தைக்கு சாதிமத பேதம் தெரியாது !
குழந்தையின் குணத்தைப் பெற்றிடுவோம் !

பொய் பேசத் தெரியாது குழந்தைக்கு !
பொய் பேசாமல் மெய்யே பேசிடுவோம் !

குழந்தை கூடஇருந்து குழி பறிக்காது !
கூடஇருந்து குழி பறிக்காது இருப்போம் !

நீரை விடுத்து பாலை அருந்தும் அன்னம் !
நல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம் !

காந்தியடிகளின் போதனைக் குரங்குகள் என
கண் காது வாயை தீங்கிற்கு பயன்படுத்தாதிருப்போம் !

பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திடுவோம் !
பிறப்பை அர்த்தம் உள்ளதாக்கிடுவோம் !

மனிதநேயத்தை மனதினில் ஏற்றிடுவோம் !
மதவெறியை மனதினில் அகற்றிடுவோம் !

எண்ணங்கள் யாவும் இனிதாகட்டும் !
எண்ணிய யாவும் இனி வசமாகட்டும் !
————————————————————————————————-

புதியதோர் உலகு செய்தோம் ! கவிஞர் இரா .இரவி !

புதியதோர் உலகு செய்தோம் அதில் !
புதுமைகள் பல செய்தோம் !

உண்ணும் உணவில் புதுமை செய்தோம் !
துரித உணவு துரித சாவு என்றானது !

தோசை போய் பீசா புதுமை வந்தது !
தோன்றியது புதிய புதிய நோய்கள் !

இடியாப்பம் போய் நூடுல்ஷ் புதுமை வந்தது
இடி விழுந்தது உடல் நலத்தில் !

ஆடைகளில் புதுமை செய்தோம் !
அலங்கோலம் அரங்கேற்றமானது !

மாடிக்கு மேல் மாடிகள் கட்டி புதுமை செய்தோம் !
மண்ணுக்குள் புதைந்தன மாடி வீடுகள் !

இருக்கும் வீட்டில் புதுமை செய்தோம் !
இடிந்து தலையில் விழுந்தது !

ஓடி விளையாடிய குழந்தைகளை !
ஓரிடித்தில் அமர்த்தி விளையாட வைத்தோம் !

வெள்ளைக்காரனை விரட்டினோம் ஆனால் !
வெள்ளையன் கற்பித்த மதுவை விரட்டவில்லை !

மாணவன் பள்ளி சீருடையோடு சென்று !
மது அருந்தும் அவலம் தொடர்கின்றது !

உலகமயம் என்று புதுமை செய்தோம் !
உயிர்களுக்கு உலை வைத்தது !

தாராளமயம் என்று புதுமை செய்தோம் !
தள்ளாட்டமானது பொருளாதாரம் !

புதியதோர் உலகு செய்தோம் !
புதிது புதிதாய் தீமைகள் செய்தோம் !

———————————————————————————————–
யாசகம் ! கவிஞர் இரா .இரவி !

யாசகம் கேட்பது இழிவு என்றாலும்
யாசகம் இல்லை எனல் அதினினும் இழிவு !

அன்றே உரைத்தார் நமது திருவள்ளுவர்
அதனை மனதில் கொள்வோம் !

வசதி படைத்தவர்கள் வளங்கெ வேண்டும்
வாடியோருக்கு வழங்கும் மனம் வேண்டும் !

ஏழ்மையினால் கேட்க நேரிட்டால்
இல்லை என்று சொல்லாது வழங்குக !

கொடுத்துச் சிவந்த கரங்கள் இங்கு உண்டு
இறந்தபின்னும் வாழ்வு அவர்களுக்கு உண்டு !

கர்ணன் அளவிற்கு கொடுக்காவிட்டாலும்
கையால் முடிந்ததைக் கொடுக்க வேண்டும் !

ஈகை குணம் மனிதனுக்கு அழகு தரும்
இரக்க மனம் மனிதனுக்கு மேன்மை தரும் !

பெற்றவர் பெரும் மகிழ்ச்சியை
பார்ப்பதும் மனதிற்கு இன்பம் தரும் !

தருமம் தலை காக்கும் என்றனர்
தருமம் தலையாய கடமையாக்கட்டும் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால்
எவரும் எவரிடமும் கேட்க வேண்டாம் !

ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமுதாயம்
இனிதே படைப்போம் வாருங்கள் !

யாசகம் யாரும் கேட்கவும் வேண்டாம்
யாசகம் யாரும் தரவும் வேண்டாம் !
.———————————————————————————————
பெய்யென பெய்த மழை!
கவிஞர் இரா. இரவி !

வறட்சியின் போது வேண்டினோம் பெய்தாய்!
வெள்ளத்தின் போதும் பெய்வது முறையோ?

தண்ணீர் இன்றி வாடியது துன்பம் என்றால்
தண்ணீரில் மூழ்கி வாடியது பெருந்துன்பம்!

பெய்யும் மழை உயிர்த்துளி என்றோம்!
பெய்த மழைக்கு உயிர்கள் இரையானது!

ஆற்றில் தண்ணீர் ஓட மழை வேண்டினோம்
ஆனால் சாலையில் படகில் செல்லும்படியானது!

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல
அடைமழையும் நஞ்சுதான் உணர்ந்தோம்.

மொட்டை மாடியில் மூன்று நாள் தவித்தனர்
மறுபடியும் முதலில் இருந்து பெய்வது சரியா?

கழுதைக்கு கல்யாணம் செய்வித்தது தவறு தான்
கண்மூடித்தனமாக செய்ததற்கு வருந்துகின்றோம்

பெய்யென பெய்த மழையே இனி நாங்கள்
போதும் என்கிறோம் நின்று விடு! வாழ விடு!

மூன்று மாதத்து மழையை ஒரு நாளில் பொழிந்தாய்
மூழ்கி தத்தளிக்கும்படி ஆனது வாழ்க்கை!

அழைத்த போதும் வந்தாய் சரி இப்போது
அழையா விருந்தாளியாய் வருவது ஏனோ?

குடை மழைக்கு காட்டும் கருப்புக்கொடி என்றார்
குடை பிடிக்கிறோம் மழையே போய்விடு!

இரமணன் சொன்ன போது வரவில்லை சில நாள்
இரமணன் சொல்லாத போதும் வருவது ஏனோ?

சாரல் மழையில் நனைந்து மகிழ்ந்ததுண்டு
சாடும் மழையாக நீ ஆனது ஏனோ?

விடுமுறை என்றதும் மாணவர்கள் மகிழலாம்
விடுமுறையில் தொழிலாளிக்கு கூலி கிடைப்பதில்லை!

வெளியேற முடியாமல் தவித்தனர் பலர்
வீடு மூழ்கி வேதனையில் வீழ்ந்தனர் சிலர்!

சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள் ஆனால்
பெருதுளி மாபெரும் வெள்ளமாகி வாட்டியது

வெயிலே வா! வா! மழையே போ! போ!
வேதனையில் பாடும்படி ஆனது இன்றோ!

ஆங்கிலப்பள்ளியில் பயிலும் குழந்தைகள்
அடிக்கடி பாடினர் மழையே போ! என்று

இப்போது தான் அந்தப்பாட்டு பொருளுடையதானது
இப்போதைக்கு மழையே வராதே போ! போ!

ஏரி குளம் கண்மாய் கால்வாய்களில் தேக்கலாம்
எல்லாவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டோம்
பெய்யென பெய்த மழையே இனிமேல்
பெய்யென வேண்டும் போது மட்டும் வா!.
————————————————————————
மழை ! கவிஞர் இரா .இரவி !

மழைக்காக வேண்டிய காலம் போய்
மழை நிற்க வேண்டும் காலம் வந்தது !

வானிலை அறிவிப்பில் இன்னும் மழை என்று
வாய் திறக்கும்போது நெஞ்சம் பதறுகின்றது !

வானிலிருந்து வரும் அமுதம் என்றனர்
வான்அமுதே பலரின் உயிர் பறித்தது !

சேமிக்க இடமில்லாக் காரணத்தால்
சென்றன வீணாகக் கலக்க கடலுக்கு !

அளவோடு பெய்திருந்தால் நன்று
அளவுக்கு அதிகமாக பெய்தது நன்றன்று !

வறட்சி வெள்ளம் மாறி மாறி வந்து வந்து
வேதனையில் வாட்டுகிறது விவசாயிகளை !

நதிகளை இணைப்போம் என்பார்கள்
நாதி இல்லை நல்ல மனமும் இல்லை !

நிவாரணங்கள் ரணங்களை ஆற்றாது
நிவாரணத்தில் கை வைத்தல் அநீதி !

நிரந்தரத் தீர்வுக்கு வழி வகுப்போம்
நீர் நிலைகளை நன்கு பராமரிப்ப்போம் !

இனியாவது கவனமாக இருப்போம்
ஏரி குளம் கண்மாய் நன்கு காப்போம் !

பெய்த மழையை வீணாக்கி விட்டோம்
பெய்யும் மழையை இனியாவது காப்போம் !

தூர் வாருவதைக் கடமையாக்கிடுவோம்
துயரங்கள் இனியாவது வராமல் காப்போம் !

எந்த மழை வந்தாலும் ஏற்கும் வண்ணம்
ஏரிகளை புதிதாக வடிவமைப்போம்
.—————————————————————————–

இயற்கை வளம் காப்போம் ! கவிஞர் இரா .இரவி !

இயற்கையை மனிதன் சிதைக்கச் சிதைக்க
இயற்கை மனிதைச் சிதைக்கும் உணர்க !

ஏரி குளம் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு
எங்கு செல்லும் மழை நீர் சிந்திப்பீர் !

குளம் புதிதாக வெட்டாவிட்டாலும்
குளத்தைத் தூர் வாரி புதுப்பிக்கலாமே !

ஏரி புதிதாக கட்டாவிட்டாலும்
ஏரியின் கரை உயர்த்தி இருக்கலாமே !

விளைநிலங்களை வீட்டடி மனையாக்கும்
விபரீத எண்ணங்களுக்கு முடிவு கட்டுக !

நீர் வழிகளின் ஆக்கிரமிப்பு உயிருக்கு உலை வைப்பு
நீர் இனியாவது உணர்ந்து நடந்தால் சிறப்பு !

பணத்தாசையால் இயற்கை அழித்தல் கேடு
பண்பாக நடந்து இயற்கை வளம் காப்போம் !
————————————————————————–
சகிப்புத்தன்மை ! ( பொறுமை ) கவிஞர் இரா .இரவி !

சகிப்புத்தன்மை என்பதையே மறந்து வருகின்றனர்
சகிப்புத்தன்மையை எல்லோரும் இழந்து வருகின்றனர் !

பொறுமை என்றால் என்னவென்று தெரியவில்லை
பொறாமை என்பதை பலரும் கொள்கின்றனர் !

மனிதனை மனிதன் நேசிக்கும் நல்ல
மனிதாபிமானத்தை அறியவில்லை !

விலங்கிலிருந்து வந்த மனிதன் விலங்கு ஆவதேன்
விலங்குகள் கூட கூடி அன்பாக வாழ்கின்றன !

ஒரு கன்னம் அடித்தால் மறுகன்னம் காட்டாவிடினும்
உடனே திருப்பி அடிக்காமல் இருக்கலாமே !

என் சாதி பெரிது உன்சாதி சிறிது என்ற
இழிவான சண்டைகளுக்கு முடிவு கட்டுங்கள் !

என் மதம் உயர்வு உன் மதம் தாழ்வு என்ற
இனிமையற்ற மோதலுக்கு முடிவு கட்டுங்கள் !

எங்கு வளர்ந்தாலும் மணம் மாறாக் கருவேப்பிலை
எங்கு வாழ்ந்தபோதும் மனிதனாக வாழுங்கள் !

பெரும்பான்மையை என்பதால் அகந்தை வேண்டாம்
சிறுபான்மை என்பதால் அஞ்சவும் வேண்டாம் !

மிதித்தவருக்கும் காலணி தந்தார் காந்தியடிகள்
உமிழ்ந்தவரையும் மன்னித்தார் அன்னை தெரசா !

தீயவரை வெறுக்காமல் அன்பு செய்தார் புத்தர்
தவறுகளைத் திருத்திட வாய்ப்பு வழங்குவோம் !

பழிக்குப்பழி வாங்குவது மிருககுணம்
பண்போடு மன்னிப்பதே மனிதகுணம் !

Please follow and like us:

You May Also Like

More From Author