திருவள்ளுவர்

Estimated read time 0 min read

Web team

thumbnail_rrk2.jpg

திருவள்ளுவர் ! கவிஞர் இரா .இரவி !

புலவர்களின் புலவர்
கவிஞர்களின் கவிஞர்
திருவள்ளுவர் !

உலகப்பொதுமறைப் படைத்த
உலகப்பெரும் புலவர்
திருவள்ளுவர் !
பெயரிலேயே திருவைப் பெற்ற
திருவாளர்
திருவள்ளுவர் !
அறநெறிப் போதிக்கும்
அற்புத இலக்கியம் வடித்தவர்
திருவள்ளுவர் !
அவ்வையின் உதவியால்
அரங்கேற்றம் ஆனவர்
திருவள்ளுவர் !
அழைத்ததும் ஓடிவரும்
அன்பு மனைவியைப் பெற்றவர்
திருவள்ளுவர் !
உலகில் அதிக மனிதர்கள்
வாசித்த இலக்கியம் படைத்தவர்
திருவள்ளுவர் !

ஈராயிரம் வயது கடந்தும்
இளமையாக இருப்பவர்
திருவள்ளுவர் !
மரபு அன்று என்றவர்களையும்
ஏற்க வைத்தவர்
திருவள்ளுவர் !
வாசுகியின் கணவர்
வாசகர்களின் கண் அவர்
திருவள்ளுவர் !

வாழ்விக்க வந்த வள்ளுவம் ! கவிஞர் இரா .இரவி !
கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் வள்ளுவம் !
கலங்கி நிற்கையில் திசை காட்டும் வள்ளுவம் !
மனச்சோர்வு நீக்கி தன்னம்பிக்கைத் தரும் வள்ளுவம் !
மனிதநெறி மனிதனுக்குக் கற்பிக்கும் வள்ளுவம் !
வாழ்க்கைப் படகை செலுத்தத் துடுப்பாகும் வள்ளுவம் !
வாழ்வின் அர்த்தம் உணர்த்திடும் வள்ளுவம் !
ஒப்பற்ற உயர்ந்த இனிய இலக்கியம் வள்ளுவம் !
ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக இயம்பிய வள்ளுவம் !
மனஇருளை நீக்கி அறிவு ஒளி தரும் வள்ளுவம் !
மனக்கவலை போக்கும் மருந்தாகும் வள்ளுவம் !
மனிதனை சிறந்த மனிதனாக்கும் வள்ளுவம் !
மனிதநேயம் மனதிற்குப் பயிற்றுவிக்கும் வள்ளுவம் !
வாசித்தவருக்கு வாழ்வியல் நெறி புகட்டும் வள்ளுவம் !
வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும் வள்ளுவம் !
அகிம்சை தத்துவம் போதிக்கும் வள்ளுவம் !
அன்பின் வலிமை உணர்த்திடும் வள்ளுவம் !
நன்றியை மறக்காதீர் கற்பிக்கும் வள்ளுவம் !
நல்ல செயல்கள் செய்ய வைக்கும் வள்ளுவம் !
கல்வியின் சிறப்பை சித்தரிக்கும் வள்ளுவம் !
கற்றவரின் மேன்மையைக் காட்டிடும் வள்ளுவம் !
தாயே பசித்திருந்தாலும் தவறு செய்யாதே வள்ளுவம் !
தன்னிகரில்லா அறம் போதிக்கும் அற்புதம் வள்ளுவம் !
விலங்கு குணம் அறவே அகற்றிடும் வள்ளுவம் !
விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் வள்ளுவம் !
ஈடு இணையற்ற உலகப் பொதுமறை வள்ளுவம் !
எல்லோரும் போற்றிடும் பெட்டகம் வள்ளுவம் !
தமிழை அறியாதவரும் அறிந்தது வள்ளுவம் !
தமிழுக்கு மகுடமாக விளங்குவது வள்ளுவம் !

திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !
பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !

மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் !
மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !

வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !
வசந்தம் அடையும் ரகசியம் கூறும் நூல் !

தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !
தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.

தமிழென்ற சொல்லின்றி பெருமை சேர்த்த நூல் !
தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் !

நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க எனும் நூல் !
நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க எனும் நூல் !

ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !
ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !

பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !
பயனுற வாழ்க்கை வாழ்ந்திட வழி சொல்லும் நூல் !

வானிலிருந்து வரும் மழை அமிர்தம் எனும் நூல் !
வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் !

இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !
இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !

கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும் எனும் நூல் !
கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக எனும் நூல் !

முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற நூல் !

மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !
மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !

விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !
பறவையில் தேசியப் பறவை மயில் உள்ளது !

தேசிய மரம் மலர் விலங்கு பறவை உள்ளன !
தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?

உலகப்பொது மறையை தேசிய நூலாக்க !
உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?

திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !
தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !
திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !

Please follow and like us:

You May Also Like

More From Author