பாட்டுக் கோட்டை

Estimated read time 0 min read

Web team

IMG-20240618-WA0023.jpg

பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ! கவிஞர் இரா .இரவி .

பட்டுக்கோட்டையில் பிறந்த பாட்டுக்கோட்டை
பாட்டால் கோட்டை கட்டியவர் கல்யாணசுந்தரம் !

மக்கள் கவிஞர் என்ற பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் இன்றும் என்றும் வாழ்பவர் !

சங்கம் படைத்தான் காடு சிற்றூரில் பிறந்து
சங்கப் பாடல்களெனப் பாடல் வடித்தவர் !

எளிமையும் இனிமையும் தனி முத்திரை
என்றும் அழியாதப் பாடல்கள் தந்தவர் !

அருனாச்சலனார் விசாலாட்சி தம்பதியர்
அன்போடுப் பெற்ற அற்புதக் கவிஞர் !

கௌரவாம்பாள் கரம் பற்றி மனம் முடித்து
கெளரவம் தந்த கர்வமில்லாக் கவிஞர் !

குழந்தை குமரவேல் பிறந்த ஆண்டிலேயே
குவலயத்தை விட்டு விடைப் பெற்றவர் !

இருபத்தொன்பது ஆண்டுகள் கால வாழ்க்கையில்
இரு நூற்றாண்டுகள் பாடல்கள் புனைந்தவர் !

மண்ணில் வாழ்ந்த காலம் மிகவும் கொஞ்சம்
பண்ணில் வாழும் காலம் என்றும் நிரந்தரம் !

பதினேழு தொழில் செய்த அறிந்த வித்தகர்
பாடல் ஆசிரியராக தனி முத்திரைப் பதித்தவர் !

இன்னும் கொஞ்சம் காலம் வாழ்ந்து இருந்தால்
இமயத்திற்கு இணையாய் இருக்கும் பாடல்கள் !

சின்னப் பயலுக்கு சேதி சொல்லி எழுதியவர்
சின்னப் பாப்பாவிற்கு திருடாதே ! அறிவுறுத்தியவர் !

தம்பிப் பையனுக்கு தூங்காதே என விழிக்க வைத்தவர் !
தமிழ் சமுகத்தின் துக்கத்தை களைத்தவர் !

துள்ளாத மனமும் துள்ளும் பாடல் எழுதி
துள்ளாத மனங்களையும் துள்ள வைத்தவர் !

உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடி
நமக்காக எல்லாம் நமக்காக வழங்கியவர்

இன்று நமதுள்ளமே என்று இனிமையாக எழுதி
இனிய உள்ளத்தை பொங்கும் புது வெள்ளமாக்கியவர்

காதல் ரசம் சொட்டச் சொட்டப் பாடியவர்
காதல் தோல்விக்கும் ஆறுதல் வழங்கியவர் !

இரை போடும் மனிதருக்கு இரையாகும் பாடலில்
இனிய தத்துவக் கருத்துக்களை வடித்தவர் !

தை பொறந்தா வழி பொறக்கும் என்ற பாடலில்
தன்னம்பிக்கை விவசாயிகளுக்கு விதைத்தவர் !

கையில வாங்கினேன் என்ற பாடலின் மூலம்
கஷ்டத்தை தொழிலாளர் துயரத்தை பாடியவர் !

பாட்டாளியாக பல தொழில் பார்த்து உணர்ந்து
பாட்டாளியின் பாட்டைப் பாட்டில் வடித்தவர் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமென்று
இனிய பொதுவுடைமை கருத்தை விதைத்தவர் !

எழுதிய ஆண்டுகள் அய்ந்துதான் என்றபோதும்
என்றைக்கும் நிலைக்கும் பாடல் புனைந்தவர் !

நடிகர்கள் புகழ்ப் பெறக் காரணமானவர்
நடிக்கத் தெரியாத குழந்தை உள்ளம் பெற்றவர் !

பட்டுக்கோட்டை என்றவுடன் நினைவிற்கு வருவது
பாட்டுக் கட்டிய கவிஞர் கல்யாணசுந்தரமே !

பாடலாசிரியர்கள் வந்தார்கள் வருகிறார்கள்
பாட்டுக்கோட்டை உன்னிடத்தை நிரப்பவில்லை .

Please follow and like us:

You May Also Like

More From Author