இந்த பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை

Estimated read time 0 min read

பால், பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், மருந்து பொருட்கள் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 பொருட்களுக்கு தடை விதித்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், உணவுப்பொருட்களை அடைத்து விற்கும் கவர்களுக்கு 2020ல் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை விதித்து உறுதி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வின் முன் நடைபெற்றது. இந்த நிலையில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் 2020 ஆம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை மூலம் திரும்பப் பெறப்பட்டது.

இதனை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் கவரில் பேக்கிங் செய்வதை தடை செய்வது சாத்தியமில்லை என்றும், சிறு தொழில் துறையில் இது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் பால், பால் பொருட்கள், எண்ணெய், பிஸ்கட்டுகள், மருந்து பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்கப்படுவதால் உணவுப் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க விலக்களிக்க மறுத்து 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால் தடை உத்தரவை  மாற்றி அமைக்க திட்டமிட்டதாகவும், அதற்கு அனுமதி கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பதற்கு தடை செய்வது சாத்தியமில்லை என்பதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டதை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் இதற்கும் தடை விதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அன்றாட உணவுகளை பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு, பின்னர் அதை திரும்ப பெறப்பட்ட அரசாணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

இதன் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்டுகள் எண்ணெய், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பதற்கு தடை இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் ஒருமுறை பயன்படுத்தும் 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தமிழக அரசின் தடை தொடர்கிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author