இராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் : தேடுதல் பணி தீவிரம்!

Estimated read time 0 min read

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கக் கட்டிகள் இராமேஸ்வரம்  அருகே வேதாளை கடல் பகுதியில் வீசப்பட்ட நிலையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ  தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சிப் பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர்.

இராமேஸ்வரத்திலிருந்து மஞ்சள், பீடி உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தங்கம்,  போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தி வரப்படுகிறது.

இந்தியக் கடலோர காவல் படையினரும், கடற்படையினரும் தீவிர ரோந்துப்பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, கடத்தல் முயற்சிகளை தடுத்து வருகின்றனர்.  இருந்தபோதிலும், அவ்வப்போது, கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதனைத் தடுப்பதற்காக இந்தியக் கடலோரக் காவல் படையினர் அதிநவீன படகுகள் மூலம் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனிடையே  இராமேஸ்வரம் அருகே வேதாளை பகுதியில் கடலோர காவல் படையினர் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த மர்ம படகு ஒன்றை பார்த்தனர்.

இதனை அடுத்து, கடலோர காவல்படையினர் அந்த மர்ம படகை விரட்டி சென்றனர். இதை பார்த்த கடத்தல்காரர்கள் சுமார் 10 கிலோ தங்க கட்டிகளை கடலில் வீசி விட்டு, தப்பி செல்ல முயன்றனர்.

அதில், 2 கடத்தல்காரர்களை இந்தியக் கடலோரக் காவல்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கடலில் வீசப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை ஸ்கூபா நீச்சல் பயிற்சிப் பெற்ற இந்திய வீரர்கள் மூலம் கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் தேடி வருகின்றனர். கடலில் வீசப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூபாய் 6 கோடியே 25 இலட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author