திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! – அண்ணாமலை

Estimated read time 0 min read

தமிழகத்தில், திமுகவோ, அதிமுகவோ சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

சிங்காரச் சென்னை என்று கூறி, இத்தனை ஆண்டுகளில் சென்னையை மூழ்கும் சென்னையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். வடசென்னையில், பால் கனகராஜை தேர்ந்தெடுத்து, பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வடசென்னையை முழுவதுமாக முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வோம். சென்னையின் ஒரு பகுதி கூட வெள்ளத்தில் மூழ்காதவாறு நடவடிக்கைகள் எடுப்போம்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பத்து ஆண்டு கால ஆட்சியில், அடித்தட்டு மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்திவிட்டு, மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டு மக்களைச் சந்திக்கிறோம்.

நமது பிரதமர் அவர்கள், மூன்றாவது முறையாக, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, அதில் நமது வடசென்னை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக, பால் கனகராஜ் அவர்களும் இருக்க வேண்டும் என்பதற்காக, அடுத்த இருபது நாட்களும் நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.

நமது பாரதப் பிரதமர் ஆட்சியில், பொருளாதாரம் உயர்ந்திருக்கிறது. நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. அண்ணாமலை, இடஒதுக்கீடுக்கு எதிரானவன் என்கிறார்கள் திமுகவினர். ஆம். அண்ணாமலை, அரசியலில் வாரிசு இடஒதுக்கீடுக்கு எதிரானவன். வடசென்னை திமுக வேட்பாளர், திமுக தலைவர் ஆற்காடு வீராசாமி அவர்களின் மகன் கலாநிதி. இந்த வாரிசு அரசியலுக்கு நான் எதிரானவன் தான்.

மத்தியில், மீண்டும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமர் பொறுப்பேற்கப் போகிறார் என்ற முடிவை நன்கு தெரிந்த தேர்தல் இது. இது நாட்டிற்கான தேர்தல். நாட்டின் வளர்ச்சிக்கான தேர்தல்.

பாஜகவின் அரசியல், அடித்தட்டு மக்களை உயர்த்துவதற்கான அரசியல். நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல். இதனைப் புரிந்து கொண்ட நம் மக்கள், நமது பாரதப் பிரதமர் பக்கம் முழுவதுமாக இருக்கிறார்கள்.

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தனது சொத்து மதிப்பாக, தேர்தல் பத்திரத்தில், ரூ.31 கோடி என குறிப்பிட்டுள்ளார். தமிழக பாஜக வெளியிட்ட திமுக ஃபைல்ஸில், கலாநிதி வீராசாமி குடும்பத்தின் சொத்து மதிப்பு, ரூ.2,923 கோடி. சமீபத்தில், சென்னை கோயம்பேடு அருகே, கலாநிதி வீராசாமி ஆக்கிரமித்து வைத்திருந்த அரசுக்குச் சொந்தமான 62.93 சதுர மீட்டர் கிராம நத்தம் இடத்தை, திரும்பிக் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்குத்தான் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்கிறது பாஜக.

மத்திய அரசு, நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்களின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக நிதி கொடுக்கிறது. ஆனால், திமுக மத்திய அரசின் நிதியில் இருந்து கமிஷன் அடிக்க முடியாமல், நமது பிரதமர் அவர்கள் தமிழகத்துக்கு நிதி கொடுப்பதில்லை என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது.

மீனவச் சொந்தங்களுக்கு, தனி அமைச்சரவை வழங்கியது நமது பிரதமர் மோடி அவர்கள். தமிழக மீனவர்கள் பாதுகாப்பினை உறுதி செய்து, இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நமது தமிழக மீனவர்களை உயிருடன் மீட்டுக் கொண்டு வந்தவர் நமது பிரதமர் மோடி.

தமிழகத்தில், திமுகவோ, அதிமுகவோ சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், வடசென்னையின் வேட்பாளர் அண்ணன் பால் கனகராஜ் அவர்களுக்கு, பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது.

சிறுபான்மையினரை, வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பார்க்காமல், அவர்கள் திறமைக்கு மதிப்பும், அங்கீகாரமும் கொடுப்பது பாஜக மட்டுமே. வரும் பாராளுமன்றத் தேர்தலில், பிரதமர் யார் என்பதே தெரியாத கூட்டணியாக இருக்கும் இந்தி கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணித்து, உலக அரங்கில் நமது நாட்டை வலிமையான நாடாக மாற்றியிருக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 400க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, வடசென்னையின் முன்னேற்றத்தைச் செயல்படுத்த, பால் கனகராஜ் அவர்களுக்கு, தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வோம் எனத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author