ஆழாக்கு

நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோயில் ராஜா
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி


‘உருவம் சிறியது,உவப்பு பெரியது.’ அணிந்துரையில் திரு.வசீகரன் அவர்கள் குறிப்பிட்டது போல ஹைக்கூ கவிதைகள் உருவத்தில் சிறியது, கருத்தி;ல் பெரியது. “ஆழாக்கு”என்ற பழைய அளவைக் கருவியை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் விதமாக இப்பெயரைச் சூட்டியதாக நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோயில் இராஜா குறிப்பிட்டுள்ளார். இருபது ரூபாயில் சிந்தனைச் சிதறல், ஹைக்கூ அதிர்வுகள்.

இலக்கிய உலகில் ஓய்வின்றி தொடர்ந்து இயங்கி வரும் இரட்டைக் குழல் துப்பாக்கி திரு.வசீகரன், திரு.கன்னிக்கோயில் இராஜா. கம்பருக்கு சடையப்ப வள்ளல் என்பார்கள், பார்த்தது இல்லை.ஆனால் கன்னிக்கோயில் இராஜா என்ற கம்பருக்கு சடையப்ப வள்ளல் திரு.வசீகரன். பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர் பார்த்து இருக்கிறேன், பழகி இருக்கிறேன். நூல் எழுதிட, வெளியிட இருவருமே தயங்காதவர்கள். மாதந்தோறும் நூல் வெளியிடுகின்றனர்.

நூலின் அட்டைப்படத்தில் கவிஞரின் பாட்டி, அரிசி புடைக்கும் புகைப்படம் மிக நன்று. உயிர்மெய் அகர வரிசையில் வித்தியாசமாக புதிய முயற்சியாக வந்துள்ளது. அகர வரிசையை எழுத்துக்களாக ஹைக்கூ எழுதி இருந்தால் செயற்கையாக இருந்திருக்கும். இரண்டு வருடங்கள் தொடர்ந்து எழுதிய ஹைக்கூ கவிதைகளை அகர வரிசையில் தொகுத்த காரணத்தால் இயல்பாகவும், இனிமையாகவும்,எடுப்பாகவும், துடிப்பாகவும், நுட்பமாகவும் வந்துள்ளது. பாசத்தை , நேசத்தை, ஏழ்மையை படம் பிடிக்கிறார்.

ஆழாக்கு அரிசியில்
பசியாறும் குடும்பம்
வாலாட்டும் நாய்

குடும்பம் பசியாறிட வழி இல்லாத போது வளர்க்கும் நாயும் வாலாட்டும். வறுமையிலும் விலங்கு நேயத்தோடு நாயை பசியாற்றி, தான் பசியோடு வாடும் ஏழ்மைக் குடும்பத்தைக் காட்சிப்படுத்தி விடுகிறார். என் குழந்தைக்கு தமிழ் வராது சொல்லும் பெற்றோர்கள் பெருகி விட்டனர். அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ.

ஓளைவை ஆத்திச்சூடி
முழிக்கும் குழந்தை
ராகமாய் “ரைம்ஸ்”

இன்று நகரங்களிலும் கூழ் விற்கும் காட்சி ஆறுதலான ஒன்று.

கேழ்வரகு கூழ்
சுவையாக்கும் காலை
கிராம நினைவில் நகரம்

உண்மை தான், நகரத்தில் கூழ் குடிக்கும் போது மலரும் நினைவாக கிராமம் வருகின்றது.நல்லவர்கள் அரசியலை விட்டு விலகி விட்டனர். பணத்தாசை பிடித்தவர்கள் அரசியலில் பெருகி விட்டனர்.

சொத்து சேர்க்கும் அமைச்சர்கள்
அதிகரிக்கும் மக்கள் வரி
கடனில் திணரும் நாடு

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? ஏன்று ஒரு திரைப்படப் பாடல் ஒன்று, அவருக்கு பிறந்த பூமி தான் சொர்க்கத்தை விட உயர்வானது. பிறந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்தவர்களுக்கு அந்த வலி, உயிர் உள்ளவரை நீடிக்கும் அதனை உணர்த்திடும் அற்புத ஹைக்கூ.

தாய் மண் வாசைன
நுகர வழியடைப்பு
எதிலியாய் பயணம்

தொடர்புடையவை:  சினிமா பாணியில்திருச்சி பிரபல கொள்ளை!

தரமான ஹைக்கூ நூலில் புணர்ச்சி தரமற்ற பற்றி ஒரு ஹைக்கூவை தவிர்த்து இருக்கலாம். அவரை அறியாமல் அதில் எழுத்துப் பிழையும் உள்ளது. இலங்கையை ஆண்டது, தமிழினம் வந்தேறியாக வந்த சிங்கள இனம், இன்று பெருகி ஆளுமினமாகி தமிழரை அழித்து,ஒழித்து வருகிறது.

பௌத்தத்தின் இனவெறி
ரௌத்திரம் பழகுகின்றன
போராளிக் குழந்தைகள்

சாதி ஒழிய வேண்டும் என்று முழங்குகின்றனர். ஆனால் திருமணம் என்று வரும் போது சாதிக்குள்ளேயே தான் நடத்துகின்றனர்.

மணமகள் தேவை
விளம்பரத்தில்
சாதி தேடும் விழிகள்

இது போன்ற விளம்பரங்களில் சாதியே குறிப்பிடாத நிலை சமூகத்தில் மலர வேண்டும்.

ஹைக்கூ கவிதையின் சிறப்பம்சத்தில் ஒன்று காட்சிப்படுத்துதல். ஆதில் நூல் ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோயில் இராஜா வெற்றி பெற்று உள்ளார்.

மூங்கில் காடு
தீப்பற்றி உரச
கதரும் சில்வண்டுகள்

இந்த ஹைக்கூ படித்த போது எனது காட்சிக்கு வந்தது என்ன தெரியுமா? ஈழத் தமிழர்களின் குடியிருப்பின் மீது சிங்கள இராணுவம் விமானத்திலிருந்து குண்டுகள் வீசிய போது ஓடிய மக்கள் நினைவிற்கு வந்தனர். ஓரு ஹைக்கூ, பல பார்வை

உயிர்மெய் ஹைக்கூ நூல் இது
எழுத்தால் மட்டுமின்றி கருத்தாலும் உயிர்மெய் தான்

உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அம்மா என்ற உறவுக்கு ஈடு இணை கிடையாது. அம்மாவின் மரணம் என்பது மறக்க முடியாத வலியாகும். அதனை உணர்த்திடும் ஹைக்கூ.

மௌனமாய் பறைசாற்றும்
ஓய்வெடுக்கும் ஊதுகுழல்
அம்மாவின் மரணம்

இந்த உலகில் பாசத்திற்கு அடிமையாகாத தந்தை கிடையாது. குறிப்பாக உலகத் தமிழர்களுக்கு பாசம் மிக அதிகம். மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும், மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும்,பரம ஏழையாக இருந்தாலும், அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு குழந்தையுடன் விளையாடுவது குதூகலம் தான்.

யானைச் சவாரி
முதுகில் மகன் ஏற
இறங்கும் மனபாரம்

மாற்றுத் திறனாளிகள் இன்று தன்னம்பிக்கையோடு அளப்பறிய சாதனைகள் நிகழ்த்துகின்றனர். மாற்றுத் திறனாளிகளின் பங்களிப்பில் “மா” என்று திரைப்படம் ஒன்று மதுரையில் தயாராகி வருகின்றது.

ரயில் பயணம்
ஊனமுற்றோர் வியாபாரத்தில்
தன்னம்பிக்கை

மறுபதிப்பில் ஊனமுற்றோர் என்ற சொல்லை நீக்கி விட வேண்டும். பிறந்த மண் பற்று மிக்கவர் கவிஞர் இராஜா. அதனால் தான் பிறந்த இடமான “கன்னிக்கோயில்” என்ற பகுதியை பெயரிலேயே இணைத்துக் கொண்டவர். இந்த நூலின் சிறப்பம்சம் என்னவென்றால், நூலாசிரியரின் கைவண்ணத்தில், வடிவமைப்பில் உருவான நூல். திறமைக்குப் பாராட்டுக்கள்

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *