பாரியும் கபிலரும்


நாடகம்
முனைவர் ஜெயந்தி நாகராஜன்

காட்சி 1
இடம். பாரியின் அரண்மணை
பாத்திரங்கள். கபிலர்..புலவர் பெருமக்கள்


புலவர்1: நம் மன்னர் பாரியைக் கபிலர் பெருமான் புகழ்வதைக் கேட்டு மூவேந்தர்களுக்கும் பாரியின் மீது பொறாமையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கேள்விப்படுகிறோமே
அது உண்மைதானா?


புலவர்:2 ஆம்!இவர்களது பொறாமை எங்கே கொண்டுபோய்விடும் என்பதும்
தெரியவில்லை.அதனால் மன வருத்தமும் அடைகிறோம்


புலவர்3:அதுசரி!நம் புலவர் பெருமான் மன்னன் பாரியை மட்டும் ஏன் அதிகம் புகழ்கிறார் என்று எல்லோர்க்கும் ஏற்படும் ஐயம் எனக்குள்ளும் உண்டு
(கபிலர் வந்து கொண்டே)
என்ன ஐயம்!பாட்டிலே ஐயமா?


புல(1)(தயங்கியவாறு)ஒன்றும் இல்லை பெருமானே!உமக்கும் நம் மன்னன் பாரிக்கும் இடையே உள்ள பிணைப்பை நாங்கள் நன்கறிவோம்


புல2:பாரியைவிட உலகில் சிறந்தவரே கிடையாதா?இதுதான் எங்கள் கேள்வி


புல3:எங்கள் கேள்வி மட்டுமல்ல.
மூவேந்தர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வியும் கூட


கபி:(சிரித்தபடி)நன்று.இவ்வுலகில் பாரியைவிடவும் சிறந்தவன் உண்டு.


புல2:(ஆர்வமாக)அப்படியா!
பாரியைக் காட்டிலும் சிறந்த ஒருவர் உண்டா?அதுவும் தாங்களே இதைக் கூறுவது…


புல1:(இடைமறித்து)அதானே!
அவர் யார்?எங்கே இருக்கிறார்?
எந்த நாட்டு அரசர்?


புல3:அவரை நாங்கள் அறிவோமா கபிலர் பெருமானே!


கபி:அப்பப்பா!எத்தனை வினாக்கள்?பொறுங்கள்.சொல்கிறேன்.அவன் முகம் பார்த்தால் நில மகள் மகிழ்வாள்.
மகிழ்வதோடு அவன் அருளால் அவள் குளிர்ந்து காணப்படுவாள்.
அவன் சற்றே எட்டிப் பார்த்தால் போதும். குழந்தைகள் முதல் முதியோர்வரை குதூகலிப்பர். அவன் தலை தெரிந்தால் போதும்.ஊரே மகிழும்.உலகமே அவன் வரவிற்காக ஆவலாகக் காத்திருக்கும்.அவன் எல்லா நாடுகளையும்தன் வசம் கொண்டவன்.


புல3:அப்பேர்ப்பட்டவனை நாங்கள் பார்த்திருக்கிறோமா?
கபி:ம்.ம் ..பார்த்திருக்கிறோம்.ஆனால் நாம் அவனைப் பார்ப்பதைவிட அவன் நம்மைப் பார்த்தால்தான் நமக்கு நன்மை பயக்கும்.


புல1:கபிலரே!அவர் யார் என்று கூறிவிடுங்களேன்
கபி:சொல்கிறேன். அதுமட்டுமா!இவ்வுலகில் அனைத்து உயிர்களுமே அவனது கருணையினால்தான் வாழ்கிறோம்.


புல2:பெருமானே!எங்களால் ஆவலைத் தாங்க முடியவில்லை.
பாரியைவிட மேலானவன் ஒருவன் உள்ளான் என்பதைத் தங்கள் வாயால் கேட்டபின் எங்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை.யார் அந்த புண்ணியவான்!கூறி
விடுங்களேன்.தங்களுக்குப் புண்ணியமாய்ப்போகும்.


கபி:(நகைத்தபடி)அவனது சிறப்பினை,அவனது பெயரைத் தாங்களே கூறிப் புண்ணியத்தைத் தேடிக் கொண்டுவிட்டீரே!(பாடுதல்)
“பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டீண்டு உலகு புரப்பதுவே”(புறநானூறு107)
மேடு என்றோ,பள்ளம் என்றோ,கடல் என்றோ,நிலம் என்றோ எந்த வேறுபாடு கருதாமல் மேகம் மழையைப் பொழிகின்றது.


மாரியாக மாறிப் பொழிவதைப்போல் நம் பாரியும் பெருமை சிறுமை பாராட்டாது, ஏழை,எளியோர்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என அனைவருக்கும் வாரி வாரி வழங்குகின்றான்.இல்லை என்ற சொல்லே அவன் அகராதியில் இல்லை. அவனுக்கு இணை என்று சொல்ல இந்த மாரி மட்டுமே உண்டு.முந்நூறு ஊர்களையும் பரிசிலர்க்கே அளித்தவன் பாரி.
இப்போது சொல்லுங்கள்.!மூவேந்தரைவிட நம் பாரி உயர்ந்தவன்தானே!

தொடர்புடையவை:  மனங்கட்டி கயிறு-3


புல1:ஆஹா!அற்புதம்!இதில் என்ன ஐயம் பெருமானே!


புல3:பாரியின் வள்ளல் தன்மையை இதைவிடச் சிறப்பாய் எவராலும் சொல்ல முடியாத அருமையான பாடல்.


புல2:புண்ணியவானான வான் சிறப்பை எங்களுக்கு அறிமுகப்படுத்திய நயம் அற்புதம்.


என்னே!உமது புலமை!
நாங்கள் வருகிறோம்!
பாவலனும் காவலனும் நீடு வாழ வாழ்த்துகிறோம்

Share this

One Comment

 • SARADHA K. SANTOSH

  பறம்பு மலை வேள் பாரிக்கு
  நிகர் வஞ்சமில்லா மாரியே..

  அற்புதம் ஜெயந்தி அக்கா..

  தங்களால் கலைச்சோலை பெருமையடைகிறது

  வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *