ரஜினி கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்கப் போவதில்லை – தமிழருவி மணியன்

ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை தனக்கு இல்லை என்றும், தனக்கான வரையறை எது? தனக்கான வரம்பு எது? என தான் அறிந்தே உள்ளதாகவும் தமிழருவி மணியன் விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடன் நெருக்கமாக உள்ள தமிழருவி மணியன், இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் ரஜினிகாந்த் உடன் இணைய நிறைய கட்சிகள் காத்திருப்பதாகவும், குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் இருவர் ரஜினி கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பல கட்சிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தமிழருவி மணியன் கூறியிருந்தார்.

மேலும், அமமுக உடன் இணைந்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினி அஞ்சுவதாகவும், எனவே டிடிவி தினகரனுடன் கைகோர்க்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பாஜகவுடன் கூட்டணி சேர்வதா என்பது குறித்து ரஜினியே முடிவெடுப்பார் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பின் கட்சி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார்.

தமிழருவி மணியன் கருத்துக்கு பதிலளித்த அமமுக நிர்வாகி வெற்றிவேல், கூட்டணிக்காக ரஜினி வீட்டு வாசலில் தாங்கள் காத்துக் கிடக்கவில்லை என்றார்.

இதுகுறித்து பேட்டியளித்த அவர், தமிழருவி மணியன் ரஜினிகாந்தின் செய்தித்தொடர்பாளரா என கேள்வி எழுப்பினார்.

தமிழருவி மணியன் பேட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, ரஜினியுடன் கூட்டணி அமைப்பதாக வெளியான கருத்து முழுக்க முழுக்க கற்பனையே என கூறினார். அதிமுக கூட்டணியிலேயே பாமக தொடர்வதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதனிடையே, ரஜினிகாந்த் மே அல்லது ஜூன் மாதத்தில் கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் கூறினார்.

அதிமுக, திமுகவினரும் ரஜினிகாந்தை ஆதரிப்பார்கள் என்றும் கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த பேட்டி வெளியான பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றி தமிழருவி மணியன் பேட்டியளித்துள்ளார்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் என்ன செய்வார் என சொல்லும் உரிமை தனக்கு இல்லை என்றும், தனக்கான வரையறை எது? தனக்கான வரம்பு எது? என தான் அறிந்தே உள்ளதாகவும் தமிழருவி மணியன் விளக்கமளித்துள்ளார்.

கட்சி தொடங்குவது, மாநாடு அறிவிப்பு என அனைத்தையும் ரஜினியே முடிவு செய்து அறிவிப்பார் என்றும், தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  திருமழிசை காய்கறி சந்தையில் இன்று விற்பனை தொடங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *