ஆளக்கண்ட சமுத்திரம்

– கார்த்திக் திலகன்

கட்டிய கணவன்தானே ஒரு வார்த்தை பொறுத்துக் கொண்டிருந்தால் என்ன?
என்ன இருந்தாலும் நமக்கு இவ்வளவு கோபம் இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள் ரம்யா. மூன்று மாதம் ஓடிவிட்டது அவள் கணவன் அமுதனோடு பேசி. அவன் அலுவல் விஷயமாக பெங்களூர் கிளம்பி போன அன்று நடந்த சிறு பிரச்சனைதான். மூன்று மாதம் கடந்து இன்று அவன் வீடு திரும்பும் நாள் வரை அவள் பேசவே இல்லை.


எவ்வளவோ முறை அவன் தொலைபேசியில் பேச முயன்றும் நாசுக்காக பிள்ளைகளிடம் கொடுத்து பேசச் சொல்லிவிடுவாள்.
அவன் ஆசையாக பிள்ளைகளிடம் விசாரிப்பான் அம்மா நல்லா இருக்காளாடா – வேளைக்கு சாப்பிடுகிறாளா என்றெல்லாம். சின்னவன் ரொம்ப துடுக்கு ஒரு நாள் கைபேசியில் அப்பாவிடம் கிசுகிசுத்து விட்டான். முந்தாள் காலையில அம்மா உன் சட்டையை போட்டுக்கிட்டு தூங்கிட்டு இருந்ததை பார்த்தேன்பா என்று சொல்லி விட்டான். அமுதனிடம் இருந்து வார்த்தை ஒன்றும் வரவில்லை.

பையன் ஹலோ.. ஹலோ .. என்று இறைந்து விட்டு கைபேசியை அணைத்துவிட்டான்.
மறுநாள் அமுதன் பேசியபோது பெரியவள் எடுத்தாள். அப்பா இன்றைக்கு மதியம் வீட்டுக்கு வரேன்னு அம்மா கிட்ட சொல்லிடு பாப்பா என்றான். ரம்யாவுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. காதலிக்கும் போது எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டானே என்று மனதுக்குள் பொறிந்தாள்.


ஆளரவமற்ற மதிய சாலையில் அவனது கார் விரைந்து வருவதை பால்கனியில் இருந்து பார்த்துவிட்டு ஓட்டமும் நடையுமாக இறங்கி வந்து கதவை திறந்து விட்டாள். கூடத்தில் மாட்டி இருந்த சாமிப்படங்களின் சந்தனமாலைகளை சரிசெய்வது போல் திரும்பி நின்று கொண்டாள். அமுதன் கூடத்தில் வந்து நின்று தொண்டையை செறுமியதும் கண்களில் நீர்துளிர்க்க திரும்பியவள் என்ன நினைத்தாலோ ஒடிச்சென்று அவனை இறுக தழுவிக்கொண்டாள்.
எல்லாம் முடிந்து தளர்ந்து படுத்திருந்தவளைப் பார்த்து அவன் சொன்னான்.

எங்க ஊர் திருநெல்வேலி பக்கம் ஒரு வசனம் உண்டு ” ஆளக்கண்ட சமுத்திரம் கோஷிக்கறது” அப்படின்று என்றான். ஆளரவமற்ற கடல் ஆட்களை கண்டதும் ஓடிவந்து ஆசையாய் ஆர்ப்பரித்து அலைகளால் அவர்களை தழுவிக்கொள்ளுமாம் என்றான் வியர்வை வழிய. சந்திரப் பிறை போன்ற மெல்லிய புன்னகைக் கீற்றொன்று தோன்றி மறைந்தது அவள் இதழ்களில்… சமுத்திரம் போல் அலை அடித்தது அவள் கண்களில்……

Share this
தொடர்புடையவை:  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு - 4 கலர்...கலராய்...உடைஞ்ச வளையல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *