எந்தை (என் தாய் )

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா

அன்பின் வடிவாய் உலவும் உயிரே
ஆசை கொண்டு உருகும் மெழுகே
கண்ணிமைப் போல காத்து நம்மை
கரையது சேர்க்கும் பாய்மர படகே

மனவலி மறைத்து மகிழ்வது ஊட்டும்
மனதிடம் கொண்ட மாபெரும் தகையே
தனதென எதையும் சுயநலம் இன்றி
தாரை வார்க்கும் தயாள உருவே

கண்ணும் கருத்தாய் கவனமாய் பார்த்து
கண்டிப்பு அக்கறை இரண்டும் கலந்து
தடமது மாறா தவிப்புடன் வளர்த்து
தரணியில் தூக்கி உயர்த்திடும் தூணே

ஆசா பாசம் அனைத்தும் விட்டு
ஆதங்கப் பட்டு அனுதினம் உழைத்து
மோச உலகில் வாழும் முறையை
மொட்டவிழ் இதழாய் காட்டிடும் உயிரே

பண்டிகை வந்தால் படபடப் போடு
பயமது இருந்தும் கடனுடன் பெற்று
இன்பம் வாரி இறைக்கும் அவரே
இத்தலை முறையின் எடுத்துக் காட்டே

கவிஞர் லூர்து சேவியர் வில்லியனூர்


நான் கண்டு வியந்து
கையசைத்த
முதல் நாயகனும்
என் சேட்டைகளைக்
கைத்தட்டி ரசித்த
முதல் ரசிகனும்
என் அப்பாவே!

பா.ஜெயகுமார்..


இறைவன் கொடுத்த வரமாய் அப்பா
இரவு பகலாய் கண்ணயராது விழித்து
இலைமறை காயாக அன்பு காட்டி
இன்முகத்துடன் நம்மை வளர்க்கும் அப்பா

தன்னலம் கருதாது குடும்ப நலன் காக்க
தன்னிலக்குகளைக் கனவுகளாகவே கொண்டு
தன் குருதிப் பிறப்புகளின் சின்னச்சின்ன ஆசைகளையும்
உடனுக்குடன் நிறைவேற்றும் அப்பா

முட்பாதைகள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில்
பிள்ளைகளைத் தோளில் சுமந்து
சுமையை சுமையாக ஒருபோதும் எண்ணாது
வலிகளைக் தானே ஏற்று பயணிக்கும் அப்பா

தடுமாறி நடைப் பயிலுகையில்
நடுவிரல் பிடியே வாழ்வின் நங்கூரமாக
ஆடுகளமான வாழ்க்கைக் களத்தில்
குடும்பத்திற்காகப் போராடும் அஞ்சாநெஞ்சர் அப்பா

வாழ்நாளை நமக்காகவே தியாகம் செய்து
வாழ்வின் எல்லையில் நின்று
பிள்ளைக்கென்று ஒன்றுமே செய்யவில்லை எனும் வார்த்தை
துமுக்கியிலிருந்து பாய்ந்த குண்டுகளாய் தாக்குமே

அறிவுக் கண்ணைத் திறக்க வழிக்காட்டி
அறிந்தும் அறியாமலும் நாம் கொடுக்கும் வலிகளை
கடல்நீரில் கரைந்த உப்பாய் கரைத்து
சுனைநீரை நமக்கு தந்திடுவாரே அப்பா

வாழ்க்கைத் தத்துவங்களை எடுத்துக்காட்டியதுடன்
வாழ்வில் நல்வழிக்காட்டும் திசைக்காட்டி
காரிருளில் தான் நின்று நம்
வாழ்வில் ஒளியூட்டும் கலங்கரை விளக்கமே அப்பா

தனலட்சுமி பரமசிவம் திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்


அறிவினை அளித்து
அரவணைத்தென்னை
அறங்களை கற்பித்த
ஆருயிர் என்அப்பா!

நெறிமுறை பிறழாது
நெஞ்சில் உரத்துடன்
நேர்மைப் பண்பினை
நேசித்தவர் என்அப்பா!

சரியென்றால் சரிதான்
சரியிலையேல் தவறே
சரியான செயல்களால்
சரித்திரம் என்அப்பா!

விரிவான் மனத்தர்
வினைகளில் ஒழுங்கு
விளைத்திடும் இனியர்
விஞ்சுபுகழர் என்அப்பா!

நரித்தனம் செய்யார்
நாடியவர்க்குதவுவார்
நன்னெறிப் பற்றாளர்
நல்லவர் என்அப்பா!

சிரிப்பில் இனியர்!
சிந்தையில் உயர்வார்
சிக்கன மனிதர்!
சிறந்தவர் என்அப்பா!

கரிப்புடை உழைப்பர்!
கண்ணியம் காத்தவர்!
கண்ணாய் பேணினார்
காவலர் என்அப்பா!

பரிவினைக் காட்டுவார்!
பண்பினை ஊட்டுவார்!
பரிதவித்து நிற்கிறேன்
பகலவனை இழந்தே!

பாவலர் புதுவை இளங்குயில்


ஒரு மூன்றெழுத்துக் கவிதை..!

ஆளுமையின் விளக்கம் தரும்
அற்புத உருவம்…

உள்ளன்பை உணரச் செய்த
காலக் கண்ணாடி…

என் எழுதுகோல் —
எவரோ தந்த பரிசு…

எண்ணங்கள் எல்லாமே —
என்அப்பா இட்டப் பிச்சை…

அரசியலோ… ஆன்மீகமோ…
இரக்கமோ… இதழியலோ…
இசையோ… அறிவியலோ…
இன்னபிறத் தலைப்புகளோ…

அப்பாவுடன் பேசிப்பேசியே
அறிவை வளர்த்தேன்…

அன்னையின் ஸ்பரிசம் அறிந்தவர் உண்டு…

அப்பாவின் அரவணைப்பில்
உறங்கியதுண்டா..?

சொர்க்கத்தில் துவைத்தெடுத்த சுகமானத் தருணமது..!

அப்பாவின் தோள் மீது
தலைசாய்த்ததுண்டா..?

நாளைக் குறித்த பயங்கள் அற்ற
நம்பிக்கையின் நந்தவனமது..!

அப்பாவின் கைப்பிடித்து
கடைவீதி சென்றதுண்டா..?

உலகையே கேட்டாலும் — அப்பா
இல்லையென்றியம்பியதில்லை…

உண்மையாகச் சொல்லிடுவார் — அப்பா வாங்கி தரேன் “நைனா” வென்று…

அப்பாவைக் கட்டியபடி அழுது புலம்பியதுண்டா..?

அப்போதுப் புரிந்திருக்கும்
அவர் ஒரு அற்புதம் என்று…

அப்பாவோடு அவ்வப்போது
விவாதங்கள் செய்ததுண்டா..?

அவரது உதடுகள்
அவருக்கான நியாயத்தையும்

கண்கள் மட்டும் பாசத்தில்
நமக்கான நியாயத்தையும்
கற்பிக்கும்…

இறக்கும் தருவாயில் கூட
இதழில் புன்னகை பூத்தவர் அப்பா…

அப்பாவாக வாழ்வது
அனைவராலும் இயலும்..

அப்பாவைப் போல் வாழ்வதொன்றும்
அவ்வளவு எளிதல்ல…

எனது சிலுவையையும்
சிரித்தபடி சுமந்து நின்ற
அருபெரும் அன்பின் உச்சம்…
அப்பா…!

இறந்த பின்பு அல்ல..
உறவுகளே!

இருக்கும்போதே போற்றுதலுக்குரியவர்

அப்பா… அப்பா… அப்பா…

தங்க. பாரிவள்ளல்


அப்பா
எங்கள் ஆசரியர்
அப்பா
எங்கள்ஆண்டவன்
அப்பா
எங்கள் வாழ்க்கை
அப்பா
எங்கள் ஆணிவேர்
எத்தனையோ சூறாவளி சுழன்றடித்த போதும்
எள்ளளவும் அசையாமல்
குடும்ப மரம் காத்தவர்

பிள்ளைகள் படிப்பைப் பெரும்பாக்கியமாய்
களைப்பில்லா உழைப்பாளி

கலக்கம் கனவில்கூட காணாத சிங்கம்
கடைக்குட்டி தங்கம்
உடன்பிறப்பின் செல்லம்

கிராமத்தில் மகளைக் கல்லூரி அனுப்பிய
சிற்றூர் சித்தாடி கண்ட பாரதி

பொங்கல் தீபாவளி புத்தாடை யாமணிய
பொங்கும் அவர் கண்களில் மின்னல்

கரும்பை துண்டாக்கி சுவைக்க தரும்
சுகமான நினைவுகள் வளைய வரும்

சுவாமிமலை முருகனைக் காட்ட தோள்மீது
சுமந்த சுத்தமான சுயநலமிலாஅப்பா

பட்ட கடன் ஏராளம் பாசம் மட்டும் தாராளம்

சொல்லில் அடக்க இயலாமல் செல்லமகள்…

சிலமட்டும் சொல்லித்தொழுகிறேன்
அனைத்துமான என அப்பா திருவடிகள்

குடந்தை மாலாமதிவாணன்


என் வாழ்வின்
மிக பெரிய சொத்து

அவரோடு இருந்த வரை எனக்கு வலிகள்
தெரிந்ததில்லை…..

அவரைப் போல் இம்மண்ணில் ஒரு மனிதர் பிறப்பது என்பது அரிது……

யார் சொத்திற்கும் ஆசை படத்தெரியாத
நல்ல மனிதர்

தலைவர் என்ற பொறுப்பில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்வதே அவரின்
சிறப்பான பணி ஆகும்……..

என் கண்கள் முதன்முதலில் கண்ணீர் சிந்தியது
என் தந்தையின் இறப்பில் தான்…

தாய் தந்தை இரண்டுமே எங்கள் அப்பா தான்..

எங்கள் அப்பா சென்றவழி நேர்மை….

எங்களை நல்வழி நடத்தும்
அவரின் நினைவுகள்.

என் தந்தையின் உருவில் இன்று என் கணவர்…

சொ.வெற்றிச்செல்வி


நம்
உயிர்
நிஜம்

நம்
உறவின்
பலம்

நம்
வாழ்வை
சொல்லித் தந்த
ஆசான்

எந்த
நிலையிலும்
முதல்
கரம்
தரும்
அறம்

தவம்
இல்லாமல்
வரம் தரும்
சாமி

தொடர்புடையவை:  கோலங்கள் மூலம் எதிர்ப்பை வெளிப்படுத்திய பெண்கள் கைது:எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

மற்றவர்
பார்வையில்
சாதாரண ஆசாமி

அப்பா……

அப்பா என்ற
வார்த்தைக்கு
நிறைவான அர்த்தம்
அவர் மட்டுமே

பவானி. த.சங்கீதம் சதீஷ் குமார்


அவர்
இறந்தபோது எனக்கு அழுகை வரவில்லை.

ஆனால் அவரை நினைவுபடுத்தும்
சம்பவம் வரும்போதெல்லாம்
குலுங்கி குலுங்கி
பலமுறை அழுதிருக்கிறேன்…
இன்றைக்கும் கூட…

அவர்
எனக்கு நல்ல நண்பர்…
அரசியல்
வரலாறு
தத்துவம்
எல்லாம் பேசுவார் என்னுடன்…

திராவிட சிந்தனையும்
இடதுசாரி சிந்தனையும் அடிக்கடி மோதிக் கொள்ளும்…
விவாதம்
சண்டைவரை செல்லும்…
“அவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்!” என்று அம்மா வந்து அப்பாவை அதட்டி
முடித்து வைப்பார்…

அவர் எனக்கு செய்யாதது எதுவுமில்லை…

அவர் எனக்கு ஆசான்…
தான் செய்த தவறுகளைச் சொல்லி
இதையெல்லாம் வாழ்நாளில் ஒருபோதும் செயதுவிடாதே…
என்ற
போதிமரம் அவர்…

பிரியாணி அவருக்குப் பிடிக்கும்…
ஒருமுறை
ஒரேஒரு பொட்டலம் வாங்கி தந்தேன்…
ஒருவார காலம்…
பத்துக்கும் மேற்பட்ட
அவர் வயதொத்தவர் பலரும்
“பிரியாணி வாங்கி தந்தாயாமே… சொன்னாரு…”
என்றனர்.

என்னை
கண்டித்து பேசியதில்லை…
கடிந்து கொண்டதில்லை…
அறிவுரை சொன்னதில்லை…
அனுபவங்களை நிகழ்வுகளை
கதையைப்போல் சொல்வார்…
அதில் அத்தனையும்
இருக்கும்…

அவர் சொன்னதை
விரும்பியதைத்தான்
நான் வாழ்கிறேன்.,.

சிலமுறை அவரை அதட்டி இருக்கிறேன்
அப்போது எல்லாம் பரிதாபமாக என்னைப் பார்ப்பார்…
அந்த முகம்
என் கண்முன் தெரிகிறது இன்றும்…

அவர் எனக்கு
ரோல் மாடல்!

இப்போதும்
அடிபட்டால்
“அப்பா”
என்று கத்துகிறவன் நான்…

தந்தையை இழந்தவன் ஒருகை இழக்கிறான்…
தாயை
இழந்தவன்
மறு கை இழக்கிறான்…
மனையாள் இழந்தவன்
மொத்தமும் இழக்கிறான்..

நான் ஒருகை இழந்தவன்….

நோய்வாய்ப்பட்டுஇறப்பதற்கு
சில நாட்கள் முன்
எனக்கு மகள் பிறந்தாள்…
அவரிடம் காட்டினேன்…
நோயின் வேதனையிலும்
புன்முறுவல் செய்தார்…
அவரின்
கடைசி சிரிப்பு…

என்னை வளர்க்க அவர் பட்ட
துன்பம் ஏராளம்…
வறுமையை அவர் வைத்துக் கொண்டு வசதியை எனக்கு தந்தவர்…
ஒரு தந்தை
பல அவமானம் சந்தித்து தான் குடும்பத்தை மானத்தோடு வைத்திருக்கிறான்!

எனக்கு
எல்லாமே
எங்க நைனா தான்…

நீலகண்டதமிழன், சென்னை- 600102.


ஏணியாக உயர்த்திட வே
ஏணியாக உழைப்பவனே !
தோணியாக இருந்தே தான்
கரைதன்னில்
சேர்ப்பவனே !
யானையாக முதுகின்மேல்
அழகாகத்
தூக்குவானே!
வாணியாக
அமைந்தே தான்
வளர் கல்வி தருவானே !

பட்ட கடன் தீர்த்திடவே
பலகாலம் உழைப்பானே!
திட்டமிட்டு ச்
செயல்களையே
தேர்ந்தேதான்
செய்வானே !
சுட்டி டுவான்
நல்லதையே
சுறுசுறுப்பை
நல்குவானே!
பட்டறிவால் உலகத்தை ப்
பகிர்ந்தளித்தே
மகிழ்வானே!

பிள்ளைகளின்
முன்னேற்றம்
பொழுதெல்லாம்
எண்ணித்தான்
அல்லல்கள்
தாங்கித்தான்
அன்போடு சிரிப்பானே!
ஒல்லும் வகை
எல்லாமே
உலகத்தில் காணுகின்ற
பல் பொருளும் வாங்கித்தான்
படைப்பானே
தந்தையவன்!
புலவர் இராம வேதநாயகம் வடமாதிமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்


ஒவ்வொரு
குடும்ப விளக்கிலும்
நிரம்பியிருப்பது
எண்ணெய் அல்ல
அப்பாவின் வியர்வைத்துளிகளே…

பா.ஜெயகுமார்.


அகரம் தொடங்கி மகரம் தாங்கி னகரம் வரை நடத்தும் நாயகமே நீ அப்பா! …

உன்னை சிலுவை சுமக்க விட்டது சமுகம்! சிலையாக நிறுத்தி பலர் ஏச்சும் பேச்சுகேட்க

வான் பிறையாக வளரந்த உன்னை வடிவமில்லாத கடவுள் மாற்றிய வாழ்க்கை முறையே நீ அப்பா! ..

உழவை கொண்டு உற்பத்திச் செய்த நீ உணவை தட்டி தந்திட தடமானாய் என் தவப் பயனே தத்துவமே! ..

உன்னை த்தேடியே உலகு சுற்றிவருது உண்ணில் இருந்தே என் விடுயல் பிறப்பு வணக்கங்கள் தந்தையே

வீரகனூர் ஆ,இரவிச்சந்திரன் சேலம்,


தோளில் அமர வைத்து
உலகம் கட்டிய வித்தகரே

எனது நாவசைத்து வியாபார வழி கற்று தந்த ஆசானே

உண்மையை உணர்வாக்கி
நேர்மை வழி காட்டிய
கர்த்தரே

கை பிடித்து உலகை அறிய வைத்த
அறிஞரே

கண் விழித்து என் கனவை மலர வைத்த
மாமன்னரே

உமது வெற்றி பாதையில் என்னை நடை பயில வைத்தீர்

நான் சந்தோஷ வாழ்வு
நேர்மையுடன் வாழ

எனக்கு வாழ்க்கை பாடம் கற்றுத் தந்தீர்

சந்தனமாய்தேய்ந்தீர்
அதன் மணமாய் எனை உயர்த்தினீர்

எனதருமை தந்தையே என்றும் நீர் காட்டிய நல்வழியில்

எமது வாழ்க்கை பயணம் தொடருமப்பா

எனதருமை தாயே
என்னை ஈன்றவளே

இடுப்பிலே அமர வைத்து உறவு காட்டிய உன்னத ரே

உன்வயிற்றில் பிறந்து உலகம் அறிய வைத்த என் உயிரே

மெழுகுவர்த்தியாய் நீ எரிந்து

என் இல்லம் ஒளிர அனைத்தையும் தந்தாய்

உனது செயலே
உலகில் உயரியது

நீ காட்டிய ஒளி வழியில்
என் பயணம் உயருமம்மா

இல்லத்தில் வாழும் என் தந்தைக்கும்

உள்ளத்தில் வாழும் என் தாய்க்கும் சமர்ப்பணம்

கவிஞர் பாலாஜி


சூரியன்
தந்தை தானே
இன்று அவனை
நிழல் மறைத்து
கிரகணத்தில் சிக்கினானே !

வானத்து தந்தை
மீண்டு விடுவான்
சில மணி நேரத்தில்

குடும்பத்து தந்தை
நிழலுக்குள் நிழலாக
இருளாக தெரிகிறான்

தந்தை தினம்
கொண்டாடப் படுகிறது
தந்தை அவன்
கொண்டாடப் படுகிறானா?

தந்தையின் சொல்
யாருடைய செவிகளில் தொடர்ந்து ஒலிக்குமோ
அங்கே ..அங்கே..
நாதமயம் வித்தையாகும்
நன்மை ஒன்றே விருந்தாகும்

கவிஞர் மா ஜீவானந்தம்


அப்பா!
அப்பப்பா!! – இந்த
மந்திரத்தின் மகிமைதான்
என்னப்பா!!!

அம்மா என்றழைக்க
அன்பெனும் ஊற்று
பெருக்கெடுக்கும்.
அப்பா என்றழைக்க
அகிலமே காலடியில்
தவமிருக்கும்

காலில் முள் தைக்க – அதன்
கடுமையால் உடலும் நோக
அம்மா என்றளறி
அப்படியே அமர்ந்திடுவோம் – அந்த முள்ளை தானகற்ற – நம்
உள்ளம் தானுவந்து
அப்பா என்றொரு
நிம்மதி பெருமூச்சை
நிம்மதியாய் விடுவதற்கு
ஆதாரமாய் விளங்கி
அனைத்தையும் தாங்கச் செய்யும்
மந்திர மொழியல்லவோ
அப்பா என்ற மொழி.

தாங்கொன்னா சுமையதனை
தாங்கியே தான் நடந்து
துவண்ட பொழுதில் – அதை
இறக்கி வைத்து இளைப்பாற முனைகையில்
நம்மை அறியாமல்
நாம் அனிச்சையாய்
அப்பா என்று சொல்லும் பொழுது
தோன்றுமே ஒரு ஆயாசம் – அது
அடுத்து சுமை தாங்க வைக்கும்
சுகமான ஆற்றலன்றோ?

தொடர்புடையவை:  இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

நெடுந்தொலைவு பயண களைப்பில்
சேருமிடம் சேர்ந்த பின்னர்
விடுகின்ற பெருமூச்சில்
விளைகின்ற மொழி அப்பா

கடுமையான உடல் நலிவில்
விடுபட்ட பின்னர் வரும்
பெருமூச்சில் பினைந்திருக்கும்
பெருமைமிகு மந்திர மொழி அப்பா

உடல் வலிமையும் உள்ள வலிமையும்
இடர் வருகையில் – அதைக்
களையும் அறிவு வலிமையும்
நமக்குள் தோன்றச்செய்யும்
நல்லதோர் மந்திரச் சொல் அப்பா.

உடலின் உதிரம்
உயிரின் வடிவம்
வாழ்க்கைக் கடலின்
கலங்கரை விளக்கம்
வாட்டம் வருகையில்
தேற்றும் தெய்வம்.

இலந்தை வேந்தன் எல்லார்வி கோவிந்தன். இலந்தக்கோட்டை திண்டுக்கல் மாவட்டம்.


தவம் புரியும் அப்பாவுக்கு
வரம் கேட்கத் தெரியாது
மழை பொழியும் ஆற்றல்
மேகக்கூட்டம் அறியாது!

அம்மா போல அவருக்கு
பாசம் காட்டத் தெரியாது
கல்லுக்குள் ஈரம் போல
நெஞ்சைவிட்டு வாராது!

தாய் சுமந்தாள் பத்து மாதம்
அப்பாவோ மொத்த காலமும்
குடும்பத்தின் சுமைதாங்கி
கடுஞ்சொல்லொன்றறியார்!

சந்தன மரக்கட்டை அவர்
தேய்ந்து மணம் பரப்புவார்
தூளியைவிடவும் அவர்
தோளில் தூங்கியதே அதிகம்!

என்ன பெரும்பாடோ பணம் புரட்ட
புன்னகையில் அதை மறைப்பார்
இல்லையெனும் சொல்லறியா
வள்ளல் பாரி என் அப்பா!

நான் தாத்தாவான பின்னும்
ஏன் அப்பா போல
ஆக முடியவில்லை?
அப்பா அப்பாதான்!

அமிர்தலிங்கம் கங்காதரன்


கடன்காரன் 
வாசல்வந்தபோதும்
தலைமறைவாகாமல் 
துணிச்சலோடு 
எதிர்கொண்ட
தந்தை 
ஓடி ஓளிகிறார் 
மகளோடு விளையாட! 

காதலி சொல்லியும் 
எடுக்காத மீசை
காணாமல் போனது…
“அப்பா குத்துது” 
-எனற மகளின் 
ஒற்றைச் சொல்லில்! 

சுற்றுலா போக 
அடம்பிடித்த மகனிற்காய்
மருத்துவமனை 
செல்வதை 
ஒத்திப்போட்டு 
அவனின் ஆசைக்கு 
மருந்து போட்டு
அழகு பார்க்கும் 
சிறந்த மருத்துவர் 
அப்பா! 

நாத்திகரும் 
நமஸ்கரித்து வழிபடுகிறார் 
செங்கல் வைத்து கட்டி 
மகன் விளையாடும் கோயிலில்! 

திருமணத்தின்போது 
மனைவிக்கு 
மோதிரம் விட்டுத்தராத அப்பாவின் கைகள் 
மகள் முஷ்டியை முறுக்கி
பலம் காட்டும்போதுசட்டென சாய்ந்து–
நிமிர்ந்து நிற்கிறது… 
அப்பாவின் அன்பாய்! 

குழந்தைக்கு சோறூட்டத் 
தெரியாத அப்பா… 
பூச்சாண்டியை காட்டி 
யாரேனும் சோறூட்டும்போது 
தானே பூச்சாண்டியாகவும்  
கோமாளியாகவும் 
வந்துவிடுகிறார்! 

என்றும் கைவிடாத அப்பா 
கைவிட்டார் 
மகன் சைக்கிள் பழகும்போது 
நம்பிக்கை தர! 

மகளை மாப்பிள்ளையிடம் 
ஒப்படைத்து விட்டு 
கண்கலங்காம காப்பாத்துப்பா 
என ஒற்றை கை அழுத்தலில் 
சொல்லிக்  
கண்கலங்கும் உன்னதம்  அப்பா! 

மொத்தத்தில் 
என்றும் நம் 
நினைவுகளிலேயே 
தவழும் இன்னொரு 
குழந்தை
—அப்பா! 

-கோவை. நா.கி.பிரசாத்.


குருதி சுண்ட வேலை செய்வார்

கருத்துடன் நாளும் கடமை முடிப்பார் – அவர்

கண்ணீர்த் துளியையும் வியர்வை என்பார் – என்

கண்ணில் நீர் வந்தால் இதயம் துடிப்பார்

செல்லமாய் எல்லாம் வாங்கித் தரவே

செல்லாக் காசாய் எங்கும் நிற்பார்

தோள் சாயமாட்டார்
நான் சாய– தோள் கொடுப்பார்

எண்(8)திசை சென்றாலும் என்திசை நோக்குவார்

என்னுடன் இருக்கவே எப்போதும் விரும்புவார்.

மகிழ்ச்சியாய் இருப்பதாய் சில நேரம் நடிப்பார்

மகிழ்வுடன் குடும்பம் இருக்கவே நினைப்பார்

அவரின் துயரம் யாரறிவார்?

நெடிந்துயர்ந்த மரம் தெரியும்

பெருத்த கிளை தெரியும்

விரிந்த இலை தெரியும்

மணக்கும் பூ தெரியும்

காய் தெரியும் – இனிக்கும் கனி தெரியும்

இதமளிக்கும் நிழல் தெரியும்

ஆணிவேர் எங்கே? யாருக்குத் தெரியும்?

குடும்பத்தின் ஆணிவேர் படும் துன்பம்

என்ன தெரியும்

கிளைக்கும்’ இலைக்கும்

பழுத்த கனிக்கும்

கனிமுற்றி விதையாகி

விழுந்தபின் தெரியும்…

அப்பா என்றால் பேரன்பு…..

சசி எழில்மணி.


பிள்ளையின் நலனே தன்னலம் என்று பேணிக் காத்து வளர்த்திடுவார்–பலர்
பெருமை யுடன்தன் பிள்ளையைப் போற்ற பேசாது இருந்து சிலிர்த்திடுவார்…
வில்லினைப் போல வளைந்து கொடுத்து அம்பென நாமும்
முன்னேற-பல விதங்களில் துன்பம் விழைந்தவர் ஏற்றுநம்
மேன்மைக் காக உழைத்திடுவார்

நீனா தானா


வெளிவுலகிற்கு வரக்காரணமே வள்ளல் குணம்படைத்தவர்
.. வெள்ளைமனம் கொண்ட நல்லுள்ளம் படைத்தவர்

அறிவினை வளர்த்து
ஆக்கப்பூர்வமாக கற்றுத்தந்து
.. அறநெறியோடு வாழ அறிவுரைகளை
வழங்கியவர்

பயமில்லாதன்மையும் நெஞ்சினில் பாசப்பிணைப்பு ஏற்படுத்தியவர்
… பாரினில் சிறந்த வாழவும் வழிக்காட்டியவர்

மதிப்புறு முனைவர் இரா. இரமணி ஆசிரியை, சேலம்.


வேர்களைஅறிவதில்லை

மரங்களை அறிந்தவர்கள் வேர்களைஅறியவில்லை கடைசிவரை

விதைவிழுந்துமரம்ஆனபின்னே விதைகள்எல்லாம் வேராகிமரத்தைவாழவைப்பது போல

வீட்டிலேதந்தையானவர் விதையாக இருந்துகுடும்பத்தை காப்பாற்றுவதால் தான்

மரமென்னும்தாயும் கனியென்னும் மழலைகள்கூட இந்தமண்ணிலே வாழமுடிகிறது

தந்தையானவர் விதையாகிமரம்ஆனதால்தான் வேர்களை அறியாமல்போனார்கள்

இருக்கும்வரைதந்தையை அறியாதவர்கள் இறந்தபிறகு அறிகிறார்கள்

வாழும்வரைகுடும்பபாரத்தை அறியாதவர்கள் வாழ்வுஇழந்தபிறகு குடும்பபாரத்தை அறிகிறார்கள்

வாழும்வரைதெரிவதில்லை வாழ்வுஇழந்தபிறகு புரிவதில்லை

மண்ணிலேமறைந்துவாழும் வேர்களை கடைசிவரைஅறிவதில்லை

தந்தையைவாழும் வரைபுரிவதில்லை அவர்களின்பாசம் இறக்கும்வரை யாருமேஅறிவதில்லை

கவிஞர் த செல்வராசு ஆசிரியர் இராஜபாளையம்


“அ”ன்பையும்..
எ”ப்”பொழுதும்
நற்”பா”சத்தையும்
வெளிக்காட்டிக்கொள்ளா
தன்னுள்ளே
பூட்டி
வைத்திருக்கும்..
அன்பு பெட்டகம்.

“த”ன்
சி”ந்”தையில்..
எந்”தை”யும்…
தன் குடுபத்திற்கு..
என எண்ணும்…
தந்தையை
தலைவணங்கி
பாதம் தொட்டு
பணிகிறோம்…!

கு. காமராசு. புதுவை.


“தந்தையின் உயிரும், உடலும், உள்ளமும், உழைப்பும் தானே நானும் நீங்களும்”.

கவிஞர் ஜெ.வா.கருப்புசாமி


சிறியதாய் ஒருகவிதை சொல் என்றால்–
அப்பா எனச்சொல்லி இருப்பேன்
அதை கேட்பதே அப்பாவாய் இருந்தால்
நீ என்று ஓர்எழுத்தில் முடித்திருப்பேன்.

இரவில் உறக்கம் வராதப் போது
மார்பில் போட்டு உறங்கவைப்பாய்
இரவல் என்று யாரிடமும் கேட்காமல்
இருப்பதை வைத்தே வளர்த்து வந்தாய்.

விரலைப் பிடித்து நடக்க கற்றுத் தந்தாய்
குரல் வழியே பேசிக் கற்றுத் தந்தாய்
இரு பல்லால் கடிப்பதை பெற்றுக்கொண்டாய்
ஒருசொல் சொல்லாமல் வளர்த்து வந்தாய்.

பள்ளிக்கூடம் தினம் போகும் போது
பசிக்கிறது என்று சொன்னால் போதும்
பண்ணும் பொறையும் வாங்கித் தருவாய்

திண்ணும் அழகை ஏங்கி ரசிப்பாய்.

உண்ணும் உணவுக்காக ஓயாது உழைத்து
கண்ணும் கருத்துமாய் எங்களை பார்த்து
அல்லும் பகலும் அயராது உழைத்து
மின்னும் நட்சத்திரமாய் இருந்த அப்பா…

இன்று எங்களுடன் நீ இருந்திருந்தால்
அன்று உழைத்ததற்கு ஓய்ந்திருப்பாய்
சென்று எங்களை துயரில் ஆழ்த்திவிட்டாயே.

அப்பாவே எங்கள் அப்பாவே !

மாங்காடு இரா.கஜேந்திரன்.


கண்ணிலேகாணாததெய்வம்கோவிலிலே கண்ணிலேகண்டதெய்வம் வீட்டிலே

கண்ணிலேகண்டதெய்வத்தை அறியாமல் கோவிலிலேவாழும்தெய்வத்தை அறிந்துபயனில்லை

ஏற்றிவைத்தமெழுகுவர்த்தி எரியும்வரை இருளைவிலக்குவதுபோல தந்தைகுடும்பத்தை வாழும்வரை வாழவைக்கிறார்

தொடர்புடையவை:  தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்

வருடத்தில்ஒருநாள் மட்டும்தந்தையை நினைப்பதுதந்தைக்கு பெருமையில்லை
வாழும்வரை தந்தையைநினைப்பதுதான் தந்தைக்குபெருமை

இருக்கும்வரைதந்தையை அறியாமல் இறந்தபிறகு வாழ்க்கையைபுரியாமல்

வாழுகின்ற உலகமிதுவாழ்ந்துதான் என்னபயன்அது
வாழும்வரைதந்தையின்பாசத்தைஅறிவதில்லை

வாழ்ந்துமுடிந்தபிறகு தந்தையென்று கூப்பிடயாருமில்லை
படைத்துவைத்த தெய்வத்தின் பாசத்தைபுரியாமல் வாழுகிறோம்

கவிஞர் க கஸ்தூரி ஆசிரியை இராஜபாளையம்


என்தந்தை தமிழ்பித்தன்
எனும் கணபதி என்தெய்வம்
உருவாக்கினார்…

என் தாய்த்தமிழ் பண்பாட்டை
எனக்களித்து கவிஞனாக
என்னை கருவாக்கினாா்!

என் தாய்த்தமிழ் தாலாட்டில்
என்னமுதத் தமிழுட்டினாா்!

தந்தைதான் முதல் தலைவன்!

தாய்மொழி தாய்நாட்டின்…
தன்மானத்துஉணா்வை…
தமிழன்பால் ஊட்டினாா்!

மந்தைகளா வாழ்ந்திடாமல்…
மாத்தமிழுக்கு தொண்டாற்றிடு!
பந்தைப்போல விரைந்திடு!
பறந்துதான்
செயல்படு….

கடமையை கண்ணியத்தை
கட்டுபாட்டை எடுத்துரைத்தாா்!

உடனிருந்து உரிமைதனை
உணா்வுதனை உழைத்துணா்த்தி…
இடமறிந்து பேசசொன்னாா்!

இதயதெய்வம் அண்ணாவின்
இனியநட்பை பெற்றவராம்!

மடமைதனை ஒழித்திடவே
மாத்தமிழ் நாடகம் நடத்தினாா்!

பாட்டனின் சொத்துகளை
பங்கிட்டு பெற்றதில்லை!

பாட்டியின் வீடு வசித்ததில்லை!
பரம்பரை சொத்தைக் கேட்டதில்லை!

பாடுபடச் சொன்னவா்!
பாசமாக வாழ வழி காட்டினாா்!
பாசஅப்பா வணங்குகிறேன்!
பாட்டாளியாக உழைக்கிறேன்!

கவிஞா் தாமரைப்பூவண்ணன் சென்னை


என் தந்தை சுதந்திர போராட்டவீரர்

சுதந்திரமாக என்னை
வளர்த்தவர்,

நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையோடு,
அன்பால் என்னை ஆண்டவர்,

ஆண்டவருக்கு நிகரானவர்,

அவர் ஓர் அமுதகலசம்,

அறிந்தோர் கூறுவர்
பண்பால் உயர்ந்தவர்
பாரினில் உயர்ந்தவர் என்று,

குறளைக் கற்பித்தவர்,
சுடர்ஒளி சுந்தரத் தமிழைப்
போதித்தவர்,

அடர் நிறமென
அஞ்சா ஒளியென
இடர்பல வந்தாலும்,
இமையென எங்களைக்
காத்தவர்,

படர்கொடியென
பாங்காய் குடும்பத்தைப்
போற்றி,
நலம்நாடி நான்வாழ
பலகாலம் உழைத்தவர்,

என்
முதல் கவிதைக்கு
முத்தங்கள் அளித்தவர் அவரே…

வாசுகி–பெங்களூர்


சொல்ல சொல்ல தெகிட்டாத வார்த்தை

எழுத எழுத தெகிட்டாத
கவிதை

வலியோடு இனிமை கொடுத்த உறவே

உழைத்து உழைத்து
உன் சரிதம் நோகுதே

நாங்கள் வாடாமல் வாழ
இரவும்பகலும் உழைக்கும் உயிரே

கண்ணீர் துடைத்த கவியே–நான் என்ன செய்வேன்

உனக்கு என்னுயிரே மீண்டும் உன் மகளாய் பிறக்க மீண்டுமொரு வரம் வேண்டும் கடவுளைக் காணாத கண்களில் கடவுளாய் காத்தாய் தந்தையே…

மு.மாரிராஜம்


அப்பா அப்பா அப்பா நீ பட்ட
துன்பங்கள்
அப்பப்பா !

பாப்பா பிறந்த பின்பு பாராட்டி
சீராட்டி வளர்த்து
பள்ளிக்கூடம் அனுப்பி வைப்பார் !

பத்து வயசு ஆனபின்பு
பொல்லார் கண்களில் படாமல்
தானே கூட்டி வந்து
அழைத்து சென்ற
அன்பு தந்தையே !

கல்வி மட்டுமல்ல
தனது தேவைகளை குறைத்து
சிக்கனம் கடைபிடித்து
செல்வத்தையும்
சேர்பார் !

சீதனம்
செய்ய உணவு
தூக்கம் மறந்து
கூடுதல் நேரம்
உழைத்து குடும்ப பாரம் சுமக்கும் அப்பா !
@
தன் குடும்பத்துக்கு
தன்னையே அர்ப்பணிக்கும்
தந்தை
தெய்வம் !

தரணி போற்றும்
செயல்
தந்தையர் பணி !

காமுகரிடமிருந்து
காப்பாற்றி பெண்ணுக்கு வரன் பார்த்து
திருமணம் முடித்துதிணறி சம்பந்திகளை
சமாளித்து அப்பாடா என்பார்கள் அப்பா !

அத்தனை
செலவுகளையும்
கடன்வாங்கி வட்டி கட்டி மூச்சு விடுவதற்குள்
மூப்பு வந்துவிடும்!

மகனுக்கு வரன் பார்த்து மருமகள் வந்தால் மூலையில்
முடங்கிவிடும்
அப்பாக்கள் ஆயிரம். !

துணைவி இருக்கும் வரை
துயரில்லை
அவள்முன் போனால்
இவர் பாடு திண்டாட்டம். !
காலம் முழுதும்
கடமையாற்றும்
கற்பகத்தரு
அப்பா. !

அப்பாக்கள் தினத்தில் அவர்களை மனம் மகிழ வாழ்த்துவோம் !

இரா. விஜயா


கருத்த தேகத்துல
வெளுப்பான மனசு
சொக்கனுக்கு னு நல்லூரு முச்சூடும் சொல்லையில
நாமட்டும் நம்பவில்ல…

ஆம்பளப் பிள்ளை
பொறந்திருக்கு னு
அம்மாச்சி சொன்ன
அன்னிக்கு
எடுத்த என்னை
ஆயுசுக்கும்
எறக்கலையே…

கல்லூரி நான்போக
கதிரறுத்த பணம்முழுசும்
பல்ஸராக மாத்திப்புட்டு
பஞ்சரான டிவிஎஸ்லயும்
பவுஸாகப் போனவரே…

மனசுக்குப் புடிச்சவள
மாலையோட கூட்டிவர
வெள்ளைத்தோலு வேணாம்னு சாதிசனம் சொல்லிப் போக…

ஒத்த விரலால
ஊரையெல்லாம் அடக்கிட்டு
உள்ள போ னு
சொன்னவரே…

தென்னந்தோப்புக் கிளிக் குஞ்சும்
கம்மாக்கரைக் கருங்குருவியும்
காலையில வருவீக னு
மாலையில அனுப்பிவைக்க…

நெஞ்சு வலிக்குது ணு நீ சொன்னப்ப
என் ஈரக்குலை நடுங்குச்சே
இதயமும்தான் வெடிச்சுச்சே…

கவர்மென்ட் ஆஸ்பத்திரி கதவெல்லாம் நடுநடுங்க
என் உள்ளங்கை நடுவால
சொட்டுக் கண்ணீரோடு
சொத்தையும் விட்டுப் போனவரே…

அப்பா…

நீ இருக்கும் வரை
உன்னை நினைக்கவே நேரமில்லை…

நீ இல்லாத இப்போது
உன்னை நினைக்காத
நேரமே இல்லை…

தந்தையின் நினைவுகளோடு

இனியவன் காளிதாஸ்.


அம்மா செல்லமா
அப்பா செல்லமா…என்று
யாரேனும் கேட்டால்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என்றே
கூறி பழகுவேன்…

ஆரவாரமில்லா ஓர் வித
ஈர்ப்பு நிறைந்த ஓர்
மகத்துவமான அன்பு
அப்பாவினுடையது

கேட்காமலே நாம் நினைத்தது நிறைவேற வேண்டும் என்று தான் அப்பாவை அனுப்பியுள்ளார்
கடவுள் என்று அடிக்கடி நினைக்க தோன்றும்!

நேர்மை உதவும் உள்ளம்
அனைவரிடம் இயல்பாய்
உரிமையுடன் பழகும் தன்மை
கற்று கொடுத்தவர் அவரன்றோ??

என்றும் சர்வாதிகாரியாய்
இந்த பெண்
சாந்தமாய் புன் சிரிப்புடன்
இந்த பெண்ணின் தந்தை

ஸ்ரீப்ரியா சேஷாத்திரி காவேரிப்பாக்கம்


என் அப்பா உன்னை பற்றி
என்ன நான் எழுதிடுவேன்

என் ஞாபக தெருவெல்லாம்
என் அப்பா நீ தெருவிளக்காய்
என்னுடனே நடக்கின்றாய்

எழுத்துக்கூட்டி படித்தவரே
எனை மட்டும் – பட்டம் பல
எதற்கு நீ படிக்க வைத்தீர்

என் வாழ்வில் மட்டும்
எந்த குறையுமின்றி
எதற்கெனை வளர்த்தெடுத்தீர்

என்னை நீ அடித்ததில்லை
எனை அழவைத்து ரசித்ததில்லை
எவரும் அடிக்கவிட்டதில்லை

என் இளைய எழுத்துக்களை
என்முதல் ரசிகராய் ரசித்தவரே
எழுதென்று ஊக்கம் கொடுத்தவரே

என்ன எழுதினாலும் மகிழ்வீரே
எதுவும் புரியவில்லையெனில்
எனைக்கேட்டு குழந்தையாய் நிற்பீரே

எந்த அறிவுரையும் – நீயாக
எனக்கு தரவில்லை – நீ வாழ்ந்து
எனக்கு வாழ்வை புரியவைத்தாய்

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே
எதற்கும் அஞ்சாதவரே
எவருக்கும் ஓடி உதவுபவரே

என் வாழ்வு மலர்வதற்கு
எடுத்துக்காட்டாய் இருந்தவரே
என் துணையாய் இருந்தவரே

எரிமலையாய் வாழ்ந்தாலும்
எதிரிக்கும் நட்பானவரே
எண்ணத்தில் சிறந்தவரே

எப்போது உனைக்காண்பேன்
எவ்விடத்தில் சந்திப்பேன்
என் கதையை நான் சொல்ல

கவிஞர் எம் கே ராஜ்குமார்

Share this

12 Comments

 • நீலகண்ட தமிழன்

  தந்தையர் நாளில் சிந்தையில் போற்றி
  வந்தனம் செய்தோர் வாழ்க வாழ்கவே
  சங்கக் கவிதையில் சிங்கத் தமிழனில்
  தங்கும் அன்பினை தாம் காட்டினரே….

 • Sripriya

  அப்பாக்களுக்கு என்னிக்குமே
  தனித்துவம் உண்டு
  இன்றைய கவிதைகள் அனைத்தும்
  அவர்களுக்கு சூட்டிய மகுடமே

  அனைத்தும் சிறப்பு

 • லூர்து சேவியர்

  மிகச்சிறந்த படைப்புகளை குறிப்பாக தந்தையின் தலைப்பில் அமைந்த கவிதைகளை அழகுற அமைத்த அனைத்து கவிஞர் பெருமக்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்… எண்ணச்சிதறல்கள் எழுத்து வடிவங்கள் அழகு மிளிர்கிறது… கற்பனை ஓட்டம் நெஞ்சில் இன்பம் பாய்ச்சுகிறது… ஒவ்வொரு கவிஞர்களின் கவிதையிலும் சில அரிய தகவல்கள் கற்பனை வளங்கள் மிகுந்து காணப்படுகிறது.. அனைத்து கவிஞர் பெருமக்களுக்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்… அன்புடன்
  லூர்து சேவியர் வில்லியனூர் புதுச்சேரி

 • நீலகண்ட தமிழன்

  வி.தமிழ்செல்வன் புதுவை

  அப்பா

  மகள்களை பெற்ற
  அப்பாக்களுக்கு
  தான் தெரியும்
  முத்தம்
  காமத்தில்
  சேர்ந்ததல்ல !
  உண்மைதான் !

  மகளை
  தாயாக போற்றும்
  மகன் தான்
  அப்பா !

  கரு சுமை தாங்கும்
  தாய்மை போற்றினும்….
  ஆயுள் சுமை தாங்கும்
  உயிர்ப்பு கருவி
  அப்பா !

  உச்சி முகர்ந்து
  கைகோர்த்து
  நடைபயில
  கற்பிக்கும் ஆசான் !
  தான்
  காணா உலகை
  தன் கண்மணி காண
  தன்தோ லேற்றும்
  வழிகாட்டி
  அப்பா !

  மென்மை
  அன்பு
  காட்டா முகம்
  பாச பிணைப்பின்
  மொத்த குத்தகை
  அப்பா !

  அன்பின் அடையாளம்
  பாசபண்பின் பரவசம்
  நட்பின் நம்பிக்கை
  வாழ்வின் ஒளிகாட்டி
  அப்பா !

  உயிர்மெய்யான தமிழுறவை
  இமை விழியாய் காப்போம் !

  தந்தையர்தினம்
  மட்டுமல்ல
  எக்காலமும்
  போற்றி வணங்குவோம்
  தந்தையை !

  வி.தமிழ்செல்வன் புதுவை

 • S. Bala Subramanian

  அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் மிகவும் அருமை. வாழ்த்துக்கள் அனைவருக்கும்,,,, நீலகண்டன் அய்யாவின் செயற்கரிய இச் செயலுக்கு நன்றிகள் பல,,,,

 • படைக்களப் பாவலர் துரை.மூர்த்தி

  பாவலர் தம் தந்தையை பாக்களால் வாழ வைத்துள்ளனர்.மகிழ்கிறேன்.
  அயல் மாநிலம் வாழும் ‘வாசுகி’ அவர்கள் தந்தை விடுதலைப் போராட்ட வீரர் என்பதறிந்து மகிழ்கிறேன். அவர் தம் தமிழுணர்வு மகளுக்கும் வந்துள்ளதில் அகம் மகிழ்கிறேன்…
  பாவலர்கள் அனைவருக்கும் என் அன்பான பாராட்டும் நல் வாழ்த்தும்…
  தங்கள் தமிழன்பன்,
  – படைக்களப் பாவலர்

 • படைக்களப் பாவலர் துரை.மூர்த்தி

  அப்பா

  அன்பைப் பொழிவார் என்அப்பா
  அறிவாய் நடப்பார் என்அப்பா !
  கன்னல் தமிழை என்அப்பா
  கடைந்தே தந்தார் என்அப்பா !

  பரிவாய் நடப்பார் என்அப்பா
  பாப்போல் இனியர் என்அப்பா!
  அரிய அறிவர் என்அப்பா
  ஆற்றல் மிக்கார் என்அப்பா !

  எனக்காய் வாழ்ந்தார் என்அப்பா
  ஏணி போன்றார் என்அப்பா !
  மனத்தில் நிலைத்தார் என்அப்பா
  மாசில் மணியாய் என்அப்பா !

  நினைவில் நீங்கார் என்அப்பா
  நிழலாய்த் தொடர்வார் என்அப்பா !
  பனையாய் உயர்ந்தார் என்அப்பா
  பரிதி எனக்கே என்அப்பா !

  – படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

 • M K Rajkumar

  அப்பப்பா
  அப்பா பற்றி எத்தனை கவிதைகள்
  வாழ்க கவிஞர்கள் வளமுடன்
  – எம் கே ராஜ்குமார்

 • முனைவர் ந.பிரியங்கா

  தந்தையர் கள் பற்றிய கவிதை.ஒவ்ொன்றும் படிக்க படிக்க நினைவுளை மீட்டெடுத்தன

  சங்கத்தமிழ் இலக்கியப் பூங்கா
  ஒருங்ணைப்பாளர் நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் மற்றும் கவிதை படைத்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்
  நன்றியை தெரிவிப்பதில் அகமகிழ்றேன்

 • மா.வேல்முருகன்

  ஆகச் சிறந்த வார்த்தைகளால் வார்த்தனர் தந்தையை . வாழ்த்துக்கள் நண்பர்களே.

 • தனலட்சுமி பரமசிவம்

  எந்தை கீழ் கவிஉறவுகள் அப்பாவிற்காக அன்பையும் நினைவுகளையும் தமிழில் வர்ணித்து கவிதை என்னும் பல்லக்கில் சுமந்து வர, அதை புவியெங்கும ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் மற்றும் புதிய திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.கவிஉறவுகளுக்கு வாழ்த்துக்கள்

 • இரா. விஜயா

  அப்பா வின் அருமைகளை பெருமைகளை அழகாய் எடுத்துரைத்த கவிதைகளை இசை பின்னணியில் இனிதாய் வழங்கிய
  திசைகள் வானொலிக்கு ம் தொகுத்து அளித்த அய்யா நீலகண்ட தமிழன் அவர்களுக்கும் குழுவினருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *