ஐவகை நிலம் – சிறுவர் பாடல்

குறிஞ்சி நிலம்

நிலங்கள் ஐந்து தெரியுமா?
நலங்கள் தருமே புரியுமா?
குன்றும் மலையும் காணலாம்
கொடியும் செடியும் பார்க்கலாம்
தேனும் தினையும் உண்ணலாம்
தெவிட்டா நீரைப் பருகலாம்
குரங்கும் மயிலும் ஆடுமாம்
குறிஞ்சி என்றே பாடுமாம்

முல்லை நிலம்

நிலங்கள் ஐந்து தெரியுமா?
நலங்கள் தருமே புரியுமா?
காடுகள் அடர்ந்து இருக்குமாம்
கன்றும் மாடும் மேயுமாம்
பாலும் தயிரும் பெருகுமாம்
ஆயன் ஆட்சி நடக்குமாம்
முல்லைப் பூவும் மணக்குமாம்
முல்லை பெருமை பேசுமாம்

.மருதம் நிலம்

நிலங்கள் ஐந்து தெரியுமா?
நலங்கள் தருமே புரியுமா?
வயல்கள் விரிந்து கிடக்குமாம்
கயல்கள் துள்ளிக் குதிக்குமாம்
கரும்பும் நெல்லும் வளருமாம்
அரும்பும் பூத்து சிரிக்குமாம்
வளமை செறிந்த மருதம் என்றே
வண்டினங்கள் இசைக்குமாம்

நெய்தல்

நிலங்கள் ஐந்து தெரியுமா?
நலங்கள் தருமே புரியுமா?
கடலே இறை எனக் கொள்வோமே
கயலே இரை என உண்போமே
பரதவர் வாழ்வு சிறக்கவே
படகும் கலமும் இருக்குமே
ஆழ்கடல் முத்தும் மிதக்குமே
அழகு நெய்தலைப் போற்றுமே

பாலை நிலம்

நிலங்கள் ஐந்து தெரியுமா?
நலங்கள் தருமே புரியுமா?
களவும் கொலையும் அதிகமாம்
அச்ச உணர்வு கூடுமாம்
பூமி வெடித்து இருக்குமாம்
புல்லும் பொடியாய்ப் போகுமாம்
நீரும் நிழலும் இல்லாத
பாலை வாழ்வு கொடுமையாம்

– முனைவர் ஜெயந்தி நாகராஜன்

Share this
தொடர்புடையவை:  வீரிய விதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *