கண்ணெதிரே தோன்றினாள்

பொன்வெயில் பட்டு பூக்கள்,
பொலிவுற மஞ்சள் பூசி,
தன்னிதழ் விரித்து தாது,
தன்மணம் பரப்பும் நேரம்!
மின்னிலின் ஒளியில் பூத்த,
மிகைமணம் தாழை யன்னாள்!
நன்மலர் பறித்துக் கொண்டு,
நாரணி கோவில் வந்தாள்!!

அங்கவள் நின்ற கோலம்,
அழகுயிர் சிலையை ஒக்கும்!
பங்கய இதழாம் மேனி,
பளிச்சிடும் அங்கோர் மச்சம்!
சங்குநேர் கழுத்தில் முத்துச்,
சரத்தினில் ஏக்கம் கொண்டு,
மங்கல நாளில் சென்று,
மனதினைத் பெயர்த்து தந்தேன்!!

என்மனங் கவர்ந்த மங்கை,
என்னிழல் ஆக வேண்டி,
அன்புசேர் பார்வை யாலே,
அகத்தினைக் கொள்ளை யிட்டேன்!!
வன்முறை இன்றி நல்லாள்,
வளைகரம் பற்றத் தந்தாள்!
அன்பினில் சேர்ந்தோம் நாங்கள்,
அழியுமோ நினைவு நெஞ்சில்!

சு.வி.லட்சுமி

Share this
தொடர்புடையவை:  ஹைக்கூ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *