சுமை

சங்கத்தமிழ் இலக்கியப்பூங்கா

ஒருநாள் வாழ்வை கடந்து போக
ஒவ்வொரு நாளும் துடிக்கின்றோம்
இருவிழி ஓரம் கண்ணீர் சொரிய
இந்நிலை எண்ணி அழுகின்றோம்

குழந்தை பருவம் மறந்து போக
கொதிக்கும் வெயிலில் வதைகின்றோம்
விழுதாய் குடும்ப பாரம் தன்னை
வேலைக்கு சென்று தாங்குகிறோம்

பள்ளிப் படிப்பு பகல்கன வாக
பாழ்மனம் துடிக்கச் சாகின்றோம்
துள்ளிக் குதித்து ஓடும் வயதில்
துயரத் தாலே சிதைகின்றோம்

சபிக்கப் பட்ட இனமாய் ஆகி
சான்மலி வேதனை காண்கின்றோம்
அபயம் தேட இடமும் இன்றி
அந்தகன் நிலையில் வாழ்கின்றோம்

வாழ்வே சோக கீதம் பாட
வசந்தம் வருமா காண்கின்றோம்
ஊழ்வினை உறுத்த உடல்மனம் துடிக்க
ஒழிந்திடா தாஇது ஏங்குகிறோம்

கவிஞர் லூர்து சேவியர் வில்லியனூர்


கழுத்துக்கு
தலை பாரமில்லை
தலைக்கு
செங்கல் பாரமில்லை

உழைப்புக்கு
யாரும் அஞ்சவில்லை
உழைப்புக்கேற்ற
ஊதியம் கிடைப்பதில்லை

வியர்வை ஆற்றில்
செங்கல் கரையக் கூடாதென
தலைக்கு மேலே
சிம்மாடு பாலம் கட்டுகிறோம்

ஊரில் உள்ள வீடு யாவும்
எங்க உழைப்பின் சான்று
எங்க வீட்டில் உள்ள வறுமை
உழைப்பு சுரண்டலின் சான்று

எங்கெங்கு காணிணும்
மகளிர் தலையே- தலைமையே
எங்கோ மறைந்து ஒதுங்குது
உழைத்திடாத ஆடவர் நிலையே!

கவிஞர் மா ஜீவானந்தம்


இல்லாதவனுக்கு என்றுமே வறுமை இருப்பவனுக்கு என்றுமே வளமை

பறவையாகபிறந்து இருந்தால்கூட பறந்து சென்று உணவை உண்டு வாழ்ந்து இருக்கலாம்

மனிதனாக பிறந்து விட்டதால் தான் என்னவோ பறவையைபோல பறந்து செல்ல வழியில்லை

வறுமையின் கொடுமையில் வாழ்க்கை என்னவோ கோரதாண்டவம் ஆடியது

இருப்பவனின் கையிலே தான் என்றுமே இல்லாதவனுக்கு வாழ்க்கை

இல்லாதவனுக்கு வாழ்க்கையோடு வறுமையோடும் போராட்டம்

வற்றாத ஜீவநதி கூட ஒருநாளில் வற்றிவிடும் ஆனால் ஏழைகளின் வாழ்க்கையிலே வறுமையென்னும் ஜீவநதி வற்றாமல்ஒடிக்கொண்டு இருக்கிறது

பள்ளியின் படிப்பை படிக்க முடியாமல் வறுமையின் படிப்பை படித்துக்கொண்டு இருக்கிறார்கள்

கவிஞர் த செல்வராசு ஆசிரியர் இராஜபாளையம்


இளமையில் கல்வி இவர்களுக்கு இல்லாமல்போனது

வாழுகின்ற வாழ்க்கையிலே வறுமைமட்டும் தான் மிச்சம் ஆச்சு

தலைசுமை எப்பொழுது இறங்கும் வாழ்க்கையில் தோன்றிய வறுமை எப்பொழுது நீங்கும்

கேள்விக்கு பதில் இன்றுவரை விடை கிடைக்கவில்லை

படித்தவனுக்கு வேலை கிடைக்காத இந்த உலகில் படிக்காதவனுக்கு உடனே வேலைகிடைத்தது

வறுமையென்னும் படிப்பை படிக்க தொடங்கிய அன்றே ஏழைகளுக்கு வேலை கிடைத்தது

ஊரைவிட்டு உழைக்க வந்தவர்கள் ஊரைவிட்டு பிழைக்கவந்தவர்கள்

தோன்றினால் புகழும் மறையாது அதுபோல தோன்றினால் வறுமையும் நீங்காது

இருப்பவர்கள் வசதியாகவாழுகிறார்கள்இல்லாதவர்கள் வறுமையில் வாழுகிறார்கள்

கவிஞர் க கஸ்தூரி ஆசிரியை இராஜபாளையம்


ஒவ்வொரு நாளும்
ஓய்விலா துழைத்து
ஓட்டுகின்றோம்
ஓரக்கண்ணின் கசிவில்

குழந்தைப் பருவத்தில்
கொதிக்கும் வெயிலில்
குலைந்து போகிறோம்
குடும்ப பாரத்தால்!

கல்வி கற்பதை
கருதிட வழியில்லை!
கதியை நினைத்தால்
கவலைக்குஎல்லையில்லை

பல்வகை கலைகளும்
பயின்றிட ஆசை!
பாவம் என்னசெய்தோம்
பலியானோம் சூலை!

துள்ளிக் குதித்தாடும்
தும்பியாக வில்லை!
துடிக்கிறோம் அனலில்
துவள்கிறோம் புழுவாய்!

முல்லை மலராக
மணம்வீச எண்ணம்!
முடிவிலா துன்பத்தில்
முடிவானது வண்ணம்!

பட்டாம் பூச்சியாக
பறந்திட விருப்பம்!
பார்ப்போமா வாழ்வில்
பாங்கான திருப்பம்?

எங்கள் வாழ்வில்
ஏனிந்த அவலநிலை?
எப்போது தீரும்
எங்கள் துன்பநிலை?

பாவலர் புதுவை இளங்குயில்


கால தேவனின்
வேக ஆட்டத்தில்
காணாமல்
போனவற்றுள்
ஒன்றாகி
திண்டாடி எங்கோ
நிற்கிறது,,,,
விஞ்ஞான விந்தைக்குள்
விளங்காத எத்தனையோவில்
தேவையற்றே
தேய்ந்த கல்,,,,
காவியமும்
ஓவியமும்
காணக்கற்று
கருவிழியாய்
தீட்டி நின்று
அவையெல்லாம்
கனவுகளாய்
கற்பனைகளாய்
காலமெலாம்
நிலைத்திருக்க
நனவொன்றே
போதுமோ???
காலமெலாம்
வேண்டுமே!!!!
ஏக்கத்துடன்
கதை பகரும்
எளிமை சுமைதாங்கி,,,

நா,மலர்விழி திருப்பூர்


உழைப்பவன் பிள்ளை உழைக்கதான் வேண்டும் ஆள்பவன் பிள்ளை ஆளதான் வேண்டும் இது ஆதிக்காரர்கள் எண்ணம்! …

படிப்பே கூடதென குலத்தொழில் செய்ய கொண்டாடும் ஆளுமையே! பாலத் திருமணத்தையும் அடுத்து தருவாயோ! …

மண்ணை மிதித்து மரத்தை வைத்து! அளவுக்கு தடுத்து சூளையில் சுடும் செங்களை செய்த கூட்டமாய்!.. ஏழையின் குழந்தை பணத்துக்கு விற்பனை! …

உருப்படிக்கு இத்தனை! என படிப்பை மறந்து பண்பை மறந்த பாவிகள் உலகு! பணத்தை தேடும் கண்ணீர் வழிய! …

நீட்டின் விலகல் நீட்சியில் கல்வி பணமே பாடம் மென மாற்றியக் கொள்ளை ஏழை க்கு கல்வி எட்டா கணியே! தொழில் கல்வி சூளையில்! மருத்துவ கல்வி துப்புரவும் சுகாதரபணியே!

தொடர்புடையவை:  உண்மை நட்பு..

கண்ணீர் வழிய வயலில் பருத்தியில் நிற்கும்! கனவுக்களாய் கல்வி கதவு அடைத்தது! கண்ணீர் வழிய காலம்ப் போகுது !…

அவசர அவசிய சட்டம்! ஆயிரம் வந்தது வருமை மட்டும் தீரவே யில்லை! ..பள்ளிகள் ஆயிரம் முடப் பட்டது! பாதிக் கல்வி நிறுத்தப்பட்டது! பணமே வாழ்வென தன்நலப் போக்கு வளர்ச்சியை காட்டி மயக்கி நின்றது! …

குழந்தைத் தொழிலாளி! இன்று, ,,,,கூலித் தொழிலாளி நாளை! ஏழைத் தொழிலாளி எதிர்க்காலம் !…இதைதான் விரும்புதோ இன்றைய தலைமுறை! !!!

வீரகனூர் ஆ,இரவிச்சந்திரன் சேலம்,


படிக்கும்
அகவையில்
பாரம்
சுமந்தே
இடுக்கண்ணை
நீக்கி
இனிதாய்க்
குடும்ப
பாரமே
போக்கிடும்
பாலர்
உழைப்பினை
ஈரநெஞ்சி
னர்தாம்
உணர்!

புலவர் இராம.வேதநாயகம், வடமாதிமங்கலம்


தலையில் பாரத்தை சுமந்து பெண்ணினத்தை காத்திட்ட பெண்குலம்
.. தன்னிகரில்லா பெருமையை நிலைநாட்டிடும் பெண்குலம்

படிக்கின்ற வயதில் படிக்காமல்
.. பள்ளிக்குச் செல்லாமல்

குடும்பத்தை காத்திட
.. குன்றாத குலவிளக்காக விளங்கிடும் பெண்களை போற்றிடுவோம்
… புகழ்பாடிடுவோம்
.. பெருமைக் கொள்வோம்

மதிப்புறு முனைவர் இரா. இரமணி ஆசிரியை சேலம்.


இறுதி ஊர்வலம்…
கற்களை எரிக்க,
கனவுகள் சுமக்கும் குழந்தைகள்.

முத்துவேல். இராகி


கற்களை சுட்டு
பக்குவப்படுத்தி
வலிவுகொடுக்கும் வலிவுமிகு கரங்களே
வாழ்க உங்கள்
சேவையே !

உழைக்கும்
வர்க்கம் உம்மை கண்டு உயரவேண்டும்
வாழ்க்கையில் !

உழைக்கும் கைகளே
உருவாக்கும்
கைகளே
பாராட்டும்
உலகமே !

இரா. விஜயா


செங்கல் சூளையில் கேட்குது
இந்திய தேசிய கீதம்

எண்சீர் கற்கள் அடுக்குது
இந்திய கோவண கீதம்

எல்லையில் ராணுவம்
நிற்குது
முந்திய எல்லை நீளம்

சூளையில் ஏழைகள்
சாகுது
எஞ்சிய வாழ்வின் மீதம்

வானில் வண்ணங்கள் தெளிக்குது
சுதந்திரம் தந்த நாளில்

கந்தலில் தூசுகள் பறக்குது
ஒவ்வொரு ஏழைத் தோளில்

ஒப்பந்த வாழ்விலே
எரியும்
புத்தக வாசனை அடுப்பில்

புத்தனும் வந்திங்குப் போனால்
போதியும் எரியும் நெருப்பில்

சத்தியம் செய்வார் சபையில்
சமமாய் வாழ மனிதம்

எத்தனை சத்தியம்
பொய்யில்
இதுவே சாட்சி கையில்

அதனி விழுப்புரம்


குடும்ப பாரம் தாங்க
தலையில் பாரம் தாங்கி
தளிர்கள் நிற்க

கல் சுமந்து
கடமையை ஆற்றிட

காண்பவர் மனம்
கலங்கிடும்

உதவிட நல்ல
உள்ளங்கள்
துடித்திடும்.

விடியும் என்று
நம்பிடு.
வேதனை தீரும்
என வாழ்ந்திடு.

வறுமை கண்டு
பயம் கொள்ளாமல்
வாழும் மலர்களை
வாழ்த்துவோம்

பாவலர் பரகாலன் மங்கை நல்லூர்


கள்ளிப்பாலில் தப்பிப் பிறந்த
நல்ல புள்ளைங்க நாங்கதாங்க

பள்ளிக்கூடம் போகனும்னு
எங்களுக்கும் ஆசை தாங்க

ஆத்தா தாலி அடகு வச்சு
அப்பன் தாகம் தீர்ந்திடுச்சி

இலவச அரிசி அட்டை வித்து
இருப்பதையும் இழந்தாச்சு

இலவசமாக படிக்கலான்னு
எல்லோரும் சொல்றாங்க

பள்ளிக்கூடம் எங்க இருக்கு
படிச்சவங்க சொல்லுங்களேன்

காட்டுக்குள்ள கருவக்காடு
அதுக்குள்ள வாழறோமே

கொத்தடிமை வாழ்க்கையிது
கொன்னா கேட்க நாதியேது

அடகு வைக்க ஒன்னுமில்லேன்னு
அப்பன் எங்களை அடகு வச்சான்

எங்களை மீட்டுப்போக
எந்த சாமி வந்திடுமோ

மேலே வானம் சுடும்
கீழே பூமி சுடும்

வாழ்க்கை நெருப்பாக
வறுமையை வச்சு சுடும்

ஒலைக்குடிசையிலே
ஒடுங்கிகிட்டு வாழ்ந்தாலும்

அச்சு போல கல்லு செஞ்சு
மச்சு கட்ட அனுப்பறோமே

கல்லு வீட்டை எங்களுக்கு
காட்டித் தாருங்களேன்

வாழற வயசுல
எரியிறோமே சூளையில

கல்லு மனசை விட்டு – எங்களுக்கு
கனிவையும் காட்டுங்களேன்

கவிஞர் எம் கே ராஜ்குமார்


பசியாற நினைத்து
தூண்டிலில் மாட்டிய
பிஞ்சுகள்

புத்தகம் சுமக்க வேண்டிய
கைகளில் செங்கற்கள்

பேனா பிடிக்க வேண்டிய
வயதினில் வேதனைகள்
வறுமையின் கரைகள்
கைகளில்

செங்கல் சூளைகளில்
பச்சை மண்ணை குழப்பி
பக்குவமாய் அச்சிலேற்றும்
பிஞ்சுகள்

பகுத்தறிவு பெற்றவன்
பாமரன் ஆகிறான்
மலர்கள் மணம் பரப்ப
தருணம் வேண்டும்

தருணம் வரை வளர்த்திடுவோம்
வளர்ந்த பின் உழைக்க
வைப்போம்

இனியாவது வேலைக்கு
செல்லும் குழந்தை தொழிலாளர்களை
பள்ளிக்கு அனுப்ப முயலுவோம்!!

ஸ்ரீப்ரியா சேஷாத்திரி காவேரிப்பாக்கம்


தலையில் பாரம் தூக்கி நாங்க தரையில் நடக்கிறோம்–அந்த
ஆகாசத்தில் கோட்டை கட்டி ரசித்து இருக்கிறோம்…

வளர்ந்த பூமி பிறந்த பூமி எல்லாம் இங்கதான்–இந்த வறண்ட பூமி எங்களுக்கு சொந்த அண்ணன் தான்…

பள்ளிக்கூட வாசப் பக்கம் போனது இல்லீங்க–இந்த கள்ளிக்காட்ட கடந்து எதையும் பார்க்க வில்லீங்க…

தொடர்புடையவை:  தென்றல் வந்து என்னைத் தொடும்

ஆனா ஈனா எதுவும் நாங்க படிச்ச தில்லீங்க–மனம்
ஆசைப்பட்ட நெல்லுச் சோறு தின்ன தில்லீங்க

நெல்லறுக்கத்
தாத்தன் மாரக் கூட்டி வந்தாங்க–அந்த
நேரம் முதல் கொத்தடிமை என்று சொன்னாங்க…

கல்லறுக்க ஏற்ற மண்ணு இந்த பூமிங்க– எங்க கஷ்டமெல்லாம் அறுப்பதிங்க எந்த சாமிங்க…

அடிமையாகி போனவனின் பொண்ணுநானுங்க–இப்ப ஆளாகி நின்னாலும் அடிமை தானுங்க…

விடியாத வாழ்க்கையிலே இரவு தொடருங்க–ஒரு விடிவெள்ளி வந்துடாதா எங்க கனவுங்க…

நீலகண்ட தமிழன்


வாழ்க்கையுடன்
போராடும் மலர்களே

குருவித் தலை பனங்காயென பிறப்பிலே இத்தனை சுமைகளா

வீரம் செறிந்த தமிழ் மண்ணிலே
பாரம் சுமக்கும் பாலகர்களே

செங்கல் கொண்டு
மங்கள்யான் செய்ய
புறப்பட்ட சித்தர்களே

பூமியில் வாழ இடமில்லாது செவ்வாயில் வீடு கட்ட புறப்பட்டீரோ

வானம் உன் வசப்பட
ஞானம் உண்டு என காணம் செய்

வானம் தொட்டுவிடும் தூரம்தான்
முயன்றால் முடியாததில்லை

துவண்டுவிடாதே தூயவனே

நிலவும் வானும்
நமது சொந்தம்

கதிரவன் உன் சொல் கேட்டே எழுவான்

நாளைய பாரதம் படைத்திடும் சிற்பி

நீயன நடந்து
உலகுக்கு கற்பி

கவிஞர். பாலாஜி, போளூர்


வெறுங்காலில் மிதிபட்டோம்
வெயிலில் காய்ந்தோம்!

விறகடுப்பில் வெந்து பின்னே
வெளியே வந்தோம்!

வண்ணமும் வடிவமும் வகையாய் பெற்றோம்!

வெறுங்கண்ணால் பார்த்தாலே விளங்கிடாது
வீடொன்று அமைவதெல்லாம் எங்களாலே!

முத்து ராஜா ஆசிரியர்


கல்லுக்கும் சொல்லுக்கும்
முதலெழுத்தே வேறுபாடு

உருவமில்லா நற்சொல்லோ
உளத்திற்கு மருந்தாகும்
உருவமுள்ள இக்கல்லோ
பாரமேந்தும் கரமாகும்

ஊரின் எல்லையிலே
உறுதியுடன் நிற்கின்றாய்
காற்றிலும் மழையிலும்
கலங்காமல் இருக்கின்றாய்

விவசாயியின் நெற்கட்டோ
கால்நடையின் புற்கட்டோ
வியாபாரியின் பொருட்சுமையோ
நெடுந்தொலைவுப் பயணியின்
தலைச்சுமையோ

மாற்றிமாற்றித் தாங்கிநிற்க
மறுப்பேதும் சொல்வதில்லை
அனைவருக்கும் உதவிசெய்ய
அலுப்பேதும் கொள்வதில்லை

நீ!!
பொறுப்பில்லாமல் தகப்பனீன்ற
பொறுப்பான பிள்ளையோ
குடிகாரக் கணவனின்
குலம் காக்கும் பெண்மணியோ
கனிவினை உள்வைத்த
கரடுமுரடான தந்தையோ
நோயில் படுத்திருக்கும்
தாயைக் காக்கும் தனயனோ

உடலிலும் உள்ளத்திலும்
உனைப்போல வலிமை கொண்டால்
வலியினால் கசந்துபோன
வாழ்வெமக்கு வசந்தமாகும்

வழிப்போக்கர் சுமைகளை
தினம்(வா)ங்கும் பெருங்கல்லே
மனச்சுமையை இறக்கி வைக்க
மார்க்கமுண்டா இயம்பிடுவாய்?

ஜோதி பெருமாள், புதுடெல்லி


ஊருவிட்டு ஊருவந்து
உழைக்கிற கூட்டமிது!

தாருசாலை போடவும்!
தயங்காம வருவாங்க!
ஊருக்குள்ள வீடுகட்ட
ஓடோடி வருவாங்க!
பாருங்க செங்கல்லை
பாவையா்கள் சுமக்குறாங்க!

வடநாட்டு மக்களெல்லாம்
தென்நாடு நோக்கிவந்து
அடவேலை அங்கில்லைன்னு
இங்குவந்து உழைக்கிறாங்க!

இடமில்லை தங்கிடவே
இரவுஅச்சமே இப்படிவாழ்வு…
மடமைதனை ஒழித்திடவே
மாதா்கள் உழைப்பாளிகள்!

கவிஞா் தாமரைப்பூவண்ணன்


உழைப்பின் மகத்துவம்
தலைச்சுமை

உழைப்பின் பயனை எல்லோரும் அறிய செங்கல் சுமை

உழவுத் தொழில் முதன்மையானது..

கல்விப் பயிலும் சிறார்கள் செங்கல் சூளையின் உரிமையர் எதிர்காலம் சிறக்க உழைப்பு

உழைப்பின் பயனை அடைந்தாலும் ஊதியம் குறைவு

உழைப்பின் வியர்வை அறிய வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பம் சூழலே

சிம்மாடு கட்டிச் செங்கல் சுமக்கும் சிறார்களின் நிலைப்பாடே இன்றைய சூழல் வெளிச்சம்

ஊருக்கு உபதேசம் செய்வது எளிது

இவர்களின் மனச்சுமையை அறிவீர்களா??

பெண்ணின் தலைச்சுமை பெருஞ்சுமை; ஓடியாடட்டும்
செல்வங்கள்
நிலை மாறிடுமே..
வறுமையின் பிடியில் இளமை புதுமை காணும் போது அனைத்துச் சுமையும் சுகமே..

புவனகிரி கடலரசி


மிதித்து அறுத்து வெயிலில் காயவைத்து
சுட்டபின் செங்கல்லாய்
ஆவது மண்ணே!

விதியை நினைத்துத் தினமும் உழைத்து
வீட்டின் கண்களாய் திகழ்வது பெண்ணே!

சுட்டச்
செங்கற்களால் செய்த கட்டிடங்கள்
அத்தனையும் தன்மீது தாங்குவது மண்ணே!

கட்டியவன் சொற்களால் சுட்டு– நடுத்தெருவில்
விட்டாலும் பாரத்தைத் தாங்குவது பெண்ணே!

உலகில் உயிர்கள் உருவாய் திருவாய்
வளர்ந்து களித்திட ஆதாரம் மண்ணே!
உலக மனிதர்கள் ஒவ்வொரு வருக்கும்
உணர்வில் மகிழ்வு தருவதும் பெண்ணே!

தன்னுழைப்பில் குடும்பம் நடத்தும் மாது
மண்ணைப் போலவே தன்னை வழங்கும்
தன்னலம் இல்லாத் தியாகி தான்…
மண்ணும் பெண்ணும் ஒன்றென ஆகுமே!

கவிஞர் ஜெ வா கருப்புசாமி, சென்னை.


துள்ளித் திரியும் வயதினிலே–
பள்ளிக் கனவுகள் இமையோடு!

விலகிச் சென்ற விதியோடு
பழகத் தெரிந்தோம் சுமையோடு!

ஏழைகளாகப் பிறந்ததிலே
எமது குற்றம் ஏதுமில்லை!
பொழுதெல்லாம் இளமேனியில்
புழுதி படரச் செய்தது யாராம்?

சும்மாடு அம்மா மாதிரி!
பாதி கனம் அதுதாங்கும்!
அடுக்கி வைக்கும் கற்களுக்கு
இடுப்புவலி தெரிவதில்லை!

தொடர்புடையவை:  உறங்கப் பிடிக்காத நள்ளிரவு

குழந்தைத் தொழிலாளர் சட்டம்
புழங்குதாம் நாட்டுக்குள்ளே!
ஏட்டில் இருந்தென்ன?
எமக்கு
எட்டிக்காய் பழுத்தென்ன?

அமிர்தலிங்கம் கங்காதரன்


தூக்கங்கள் இல்லை
கனவுகள் இல்லை
வாழ்க்கை வழிதேடி
பல வலிகளால் தொல்லை

இவர்கள் யாவரும்
வறுமையில் வசதியாகவும்
வசதியில் வறுமையாகவும்
வாழ்கிறார்கள்

முகத்தில் மங்களம்
தலையில் செங்கல்கணம்
படிப்பு வாசல் தொட இவர்களால் முடியவில்லை
சூளை படிகள்
ஏறாமல் இருக்க

வரும் நாளிலாவது
இவர்கள் கண்கள் தூங்கட்டும்

இவர்கள் கனவு பலிக்கட்டும்

வாழ்வு
இவர்கள் வசம் சேரட்டும்!

பவானி த.சங்கீதம் சதீஸ்


வறுமையின் உழைப்பு இங்கே
வளமாய் வாழ்க்கை வாழ வேண்டி இளமையும் முதுமையும் இணைந்து
களத்தில் இறங்கி உழைக்கின்றது.

காலை முதல் மாலை வரை தினமும்
கஷ்டப்படும் உழைப்பாளி இவர்கள்
இஷ்டப்படி நடக்க முடியாமல் ஒருவரின் கஷ்டடியில் வாழ்கின்ற மக்கள்.

பச்சை மண்ணை பதப்படுத்தியே
அச்சுக் கல்லை உருவாக்கி அதை
வச்சி சூளையில் மூட்டம் போட்டு
மெச்சி வாழும் குடும்பம் இது.

வீட்டை கட்ட கல்லைக் கொடுப்பார்கள்–ஆனால்
வீட்டுக் குள்ளே இல்லை இவர்கள்
ஆட்டம் பாட்டம்

இந்நாட்டில் வாழும் மன்னர் இவர்கள்.

மாங்காடு இரா.கஜேந்திரன்.


தளர்ந்துவிட்ட நம்பிக்கை யை
தூக்கி நிறுத்துமா தலைச்சுமை!

இழந்து விட்ட பொன்பொருளைக்
கொணர்ந்து தருமா பசிச்சுமை!

களைந்து விட்டகனவுகளாய்
கசங்கி பிழிந்ததுணி ஆனோமே!

விளைந்து தொடரும் இன்னல்கள்
வந்துவந்தே வாட்டுதே!

கனிந்த இதயம் எங்கு உண்டு!
கடலும் வானும் கேட்கிறோம்,
நலிந்து நாங்களும் வாடுகிறோம்!
நாளும் இயற்கை மாறுமா என்று,
பனித்துளி மீண்டும்
வான்சேருமா?
பாவங்கள் சுமந்து கரைகாணுமா!
தனித்து நிதம் நாங்கள் வாழ
நல்ல காலம் பொறக்குமா?

வாசுகி.. பெங்களூர்.


செங்கல் பாராய்.. செங்கல் பாராய்.. சிறுமலர் தலையில் செங்கல் பாராய்.!
தங்கள் பெண்கள் தலையில் செங்கல்.. எங்கே சென்றனர் இவரகளைப் பெற்றோர்.?
பங்கம் அறியாப் பாலகர் கையில்.. கந்தகப் பூக்கள்.. பட்டாசு பாரீர்…..!
கருகிய கனவில் உருகிய நெஞ்சம்.. சிறுவர்கள் பிஞ்சுக் கரங்களில் தஞ்சம்!

பள்ளியைப் பார்க்க ஏங்கிடும் கண்கள்.. புத்தகம் புரட்டிட.. யுத்தமா செய்யும்.?
கூலியும் கொஞ்சம்.. வேலையும் அதிகம்.. நாளைய விடியல்.. கானலாய் தெரியும்.!

சிறுகை கூழினை சிறுமலர் காம்பினை.. முறித்தே அழிப்பதா.. இளந்தளிர் சுமப்பதா.!

வே.கல்யாணகுமார். பெங்களூரூ.


ஏழ்மைக்கு இரையளிக்கும்
இனியத் தொழில்கள்

இன்னல்கள் இருந்திடினும்
இருக்காதே
பசிக்கொடுமை

கயமைகள் சிலர்மட்டும்
கஞ்சராகி இருப்பவர்தாம்

அடிமைகளாய் எழையரை
ஆளுகின்றார்
அறிவிழந்தே,

விதிவிலக்காய் சிலமனிதர்
சீரழிக்கும்
ஏழ்மை தன்னால்

உளம்சிறந்த
நல்லோர்க்கும்
உடனிறங்கும்
சிறப்புக்களும்,

தங்க இடமளித்துத்
தங்கமென தயைக்காட்டி,

பொங்கி வாழ
பொருள் அளிக்கும்

பொன் மனங்களும்
பூமியில் உண்டு,

ஏழையர்க்கு வாழ்வளிக்கும்
இதயங்கள்
இறைக்குச் சமம்.

மைசூர் இரா.கர்ணன்


இந்த நிலை மாறும்நாள் வெகுதொலைவில் இல்லை
வெந்தமனம் சேருமோர்நாள் தொல்லைகளின் எல்லை

சுமக்கின்றார் தலையினிலே வாழ்க்கை எனும் கல்லை…

பிடுங்கிடுவோம் முதலாளி நச்சரவப் பல்லை…

(வேறு)
படிப்பறை செல்லும் வயதினிலே இவர் பட்டறை சென்றிடலாமா
செடியில் பூத்த மலர்களும் பட்டறை நெருப்பில் வெந்திடலாமா?

ஒருமுறைதான் வாழ்வினிலே மலரும் பூந்தோட்டமே! கருகுவதா? வதங்குவதா? வந்திடு மா?மாற்றமே..,

(வேறு) விடியும்போது விடியட்டும்– அறிவு
விளக்கை ஏந்தி நடைபோடு…
அடிமை நிலைகள் உடையட்டும்–ஓர்
அணியாய் சேர்ந்து களமாடு

முடிவு எதற்கும் உண்டென்று–நீ முயன்று நின்று போராடு..

விடியல் சூரியன் நீ என்று–புவி
வியந்து போற்றும் சதிராடு…. ஊருக்கெல்லாம் வீடு கட்ட செங்கல் சுமக்கிறாய்–உன் கூரைப் போத்தல் ஒழுக ஒழுக நனைந்து தவிக்கிறாய்…

யாரும் இங்கே உதவவில்லை வாடி கிடக்கிறாய்–ஒரு
போரின் மூலம் புதிய பூமி படைக்க நினைக்கிறாய்…

நீனாதானா


புதுமைப் பெண்கள் வேண்டும் என்றாய்–
பழமைத் தீயில் இன்றும் மீளாமல்…

புரட்சி பெண்கள் வேண்டும் என்றாய்–
வறட்சிப் பாதைகள் இன்றும் மாறாமல்…

பெண்களின் வளர்ச்சி வேண்டும் என்றாய்–
கண்களில் காமங்கள் மாறா உலகத்திலே…

குழந்தைத் தொழிலாளர் வேண்டாம் என்றாய்–
குறுகிய மனங்கள் சூழ்ந்திட்ட உலகத்திலே

பெருமை தேசமாய் மாறும் என்றீர்–
வறுமை கோட்டை ஓர்நாளும் மாற்றாமல்
கொடுமை எல்லாம் போக்கவே சொன்னீர்
வன்கொடுமை எண்ணிக்கை உயர்த்திக் கொண்டே…

பெண்களின் பாதங்கள் பொன்னாய் இருந்திடுமே
தேய்பிறை நிலவாய் ஆனதே
பெண்களின் கரங்கள்

இளம்தளிர் பூக்களாய்
மலர்ந்திடும் காலங்கள் இனியாவது மலரட்டும்

மீஞ்சூர் கி.சீனிவாசன்


Share this

12 Comments

 • alourdesxavier

  கவிஞர் பெருமக்களின் பல்வேறுவகையான கோணங்கள் பிரமிப்பு அடைய செய்கிறது குறிப்பாக ராஜேந்திரன் ஐயா மற்றும் நமது வழிநடத்தி ஐயா திருநீலகண்டன் அவர்களது கவிதைகளும் இளம் குயில் அவர்களது கவிதைகளும் என் மனதைக் கவர்ந்தது.. ஒரு படத்திற்கு தான் எத்தனை விதமான கற்பனைத்திறன்..
  எவரும் ஒரே வகையாக சிந்திக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்… நிழற்படம் ஒன்று பார்வையும் எண்ணங்களும் வெவ்வேறு….ஊக்கப்படுத்தும் ஐயா திருநீலகண்டன் தமிழன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.. என்றும் அன்புடன் கவிஞர் லூர்து சேவியர்

 • அ. கங்காதரன்

  அனைத்து கவிஞர்களின் படைப்புக்களையும் ஒருங்கே
  படித்து மகிழும் வாய்ப்பினை
  நல்குகின்ற நமது திசைகள் வானொலிக்கு நன்றியும் பாராட்டுகளும். 🌹

  அமிர்தலிங்கம் கங்காதரன்

  • தனலட்சுமி பரமசிவம்

   சுகமான சுமையாய் கவிதைகளைச் சுமந்து வந்த சுமை கவிதைத் தொகுப்பினை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த புதிய திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.

 • Sripriya

  அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் அருமை
  புதிய திசைகள் வானொலிக்கு
  நன்றி

 • K. Parakalan

  நமது குழுவின் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் புதிய திசைகள் பொறுப்பாளர்
  அவர்களுக்கும்
  வணக்கம். இணையத்தில் என் கவிதையை வாசித்தேன்.
  மகிழ்ச்சி அடைகிறேன்.
  மிகவும் நன்றி.
  பரகாலன் மங்கை நல்லூர்

 • மா ஜீவானந்தம்

  பெண்களை மதிப்போம் அவர்களின் கண்ணீர் சுமைகளை துடைப்போம்.

 • மா ஜீவானந்தம்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் புதிய திசைகள் பொறுப்பாளர்
  அவர்களுக்கும்
  வணக்கம். இணையத்தில் என் கவிதையை வாசித்தேன்.
  மகிழ்ச்சி அடைகிறேன்.
  மிகவும் நன்றி.

 • மைதிலிபாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டம்

  அனைத்துக் கவிஞர்களின் கவிதையும் அருமை. முதல் முறையாக இத்தகைய வாய்ப்பு
  கிடைத்தமைக்கு நன்றி.
  கவிஞர் பெருமக்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த பாராட்டுகள்.

 • Muthu Raja

  அருமையான கவிதை தொகுப்பு. புதிய திசைகள் வலைத்தளத்திற்கும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா விற்கும் எனது உளமார்ந்த நன்றி

 • இரா. விஜயா

  கல் சுமக்கும் உள்ளங்களின்
  எல்லையில்லா துயரங்களை
  வார்த்தைகளில் வடித்திட்ட
  கவிகளுக்கும் கவிமலர்களை சரமாய் தொடுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் அய்யா
  அவர்களுக்கும் மற்றும் குழுவினருக்கும் கவிசரத்தை
  இசை மலர்களுடன் இணைத்து
  நறுமணத்துடன் வழங்கிட்ட திசைகள் வானொலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 • மா.வேல்முருகன்

  அருமையான கவிதைகள்,
  ஆர்வமூட்டும் ஒருங்கிணைப்பாளர்
  ஐயா அவர்கள்,அங்கீகரித்த வலைதளத்தார்.அனைவரையும் நன்றியுடன் ‌தலைவணங்குகிறேன்.

 • மா.வேல்முருகன்

  சுமை தலைக்கு மேலே
  சுகமான நினைவு தலைக்கு உள்ளே
  இரண்டும் இடம் மாறினால்?

  சிறப்பான சிந்தனைகள்
  சிந்திய‌கவிதைகள்.

  ஒருங்கிணைப்பாளர் ஐயா அவர்களின் சீரிய முயற்சியில்

  வகைபடுத்திய வலைதளத்தார்
  அனைவருக்கும் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *