தென்மேற்கு பருவமழை தாமதத்தால் விவசாயிகள் விரக்தி

தென் மேற்கு பருவமழை தாமதமாகி வருவதால் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் கார் பருவ நெல் சாகுபடி ஈடேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கொரோனாவால் முடங்கிய விவசாயிகள் மழையும் பெய்யாததால் விரக்தி அடைந்துள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கார் பருவ நெல் சாகுபடியும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிசான பருவ நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும். அதாவது தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் நெல் சாகுபடியும், வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான நெல் சாகுபடியும் மேற்கொள்ளப்படும்.

நெல்லை மாவட்டத்தில் தான் பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய பாசனத்திற்கு கை கொடுக்கும் முக்கிய அணைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து கிடைக்கும் மழை நீர் தான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்வது வழக்கம். வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் நெல்லை மாவட்டத்திற்கு நல்ல மழை கிடைப்பது வழக்கம். இதன் மூலம் பிசான நெல் சாகுபடி விவசாயம் தங்கு தடையின்றி நடைபெறும். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் அட்வான்ஸ் கார் சாகுபடி எனப்படும் பழந்தொழி சாகுபடியும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 48.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 61.09 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.45 அடியாக உள்ளது. பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1ம் தேதி கார் பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தத் தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் மூலம் வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், கன்னடியன் கால்வாய், நதியுன்னி கால்வாய், கோடகன் கால்வாய், நெல்லை கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய 7 கால்வாய்களுக்கு உட்பட்ட 40 ஆயிரத்து 107 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்லும். ஆனால் பாபநாசம் அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் ஜூன் 1ம் தேதி பாபநாசம் அணை திறக்கப்படவில்லை. தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கியும் இதுவரை மழைக்கான சிறிய அறிகுறி கூட இல்லை. பொதுவாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் அடை மழை பெய்யும். அந்த மழை நீர் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வழிந்து நெல்லை மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு அணைகளில் சேமிக்கப்படும். தற்போது கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை.

இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு போதிய நீர் வரத்து இல்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழை நீர் தான் தற்போது பாபநாசம் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தான் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. எனவே குடிநீர் தேவையின் அவசியம் கருதி மட்டுமே பாபநாசம் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தற்போதயை சூழ்நிலையில் விவசாயத்திற்கு திறக்க வாய்ப்பு இல்லை.

நெல்லை மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 814.8 மிமீ ஆகும். ஆனால் கடந்த ஆண்டு சராசரி மழையளவையும் தாண்டி 1050.10 மிமீ மழை கிடைத்தது. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை சராசரியாக 219.5 மிமீ மழை கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த 5 மாதங்களில் 86.84 மிமீ மழையளவு மட்டுமே கிடைத்துள்ளது. போதிய மழை இல்லாதது தான் அணையின் நீர்மட்டம் குறைவதற்கு காரணம்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, 24 ஆயிரத்து 250 ஏக்கரிலும், தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 750 ஏக்கரிலும் கார் பருவ நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இதுவரை இல்லாததால் நெல்லை மாவட்டத்தில் 125 ஏக்கரிலும், தென்காசி மாவட்டத்தில் 90 ஏக்கரிலும் மட்டுமே நாற்றாங்கால் நடவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் நாற்றாங்கால் மூலம் திருந்திய நெல் சாகுபடி முறையில் 100 ஏக்கரில் நெல் நடவு செய்ய முடியும். வழக்கமான நெல் சாகுபடி முறையில் 10 ஏக்கரில் நெல் நடவு செய்யலாம்.

போதிய மழை இல்லாத நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே கார் பருவ நெல் சாகுபடியை துவக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது கொரோனாவால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், 20 நாட்கள் கடந்தும் தென்மேற்கு பருவமழைக்கான அறிகுறி இல்லாததால் இந்த ஆண்டு கார் பருவ நெல் சாகுபடி நடக்குமா? என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Share this
தொடர்புடையவை:  பயிர் விளைச்சலை அதிகப்படுத்தும் திரவ உயிரி உரங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *