நான் நீலமாலை பேசுகிறேன் பாகம் 3

சீதையின் ஆருயிர்த் தோழி நான். அவள் மனம் கவர்நதவனைப் பற்றி அவளிடம் நான் பேசப் பேச அவளது அழகிய முகம் இன்னும் அழகு கூடுவதைப் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது எனக்குக் கிட்டி இருக்கிறதே. யான் பெற்ற இன்பம் நீங்கள் பெற வேண்டி நான் இப்பொழுது உங்கள் முன் பேசுகிறேன். என் பேச்சைச் சற்றே கேளுங்கள்.

சுயம்வர மண்டபத்தில் ராமன் தாடகையை வதம் செய்ததையும், தசரத மன்னனின் குலப் பெருமையையும், விசுவாமித்திரர் கூறக் கூற என் மனம் பூரித்தது. என் சீதைக்கு ஏற்றவன் இவனே என என் உள் மனம் குரல் எழுப்பியது.

யானை போன்ற கம்பீர நடையும், நீண்ட கைகளும், கால்களும் கொண்டு, இனிய முறுவலும், கனிவு நிரம்பிய கண்களுமாய், குருவின் உத்தரவை எதிர்பார்த்து பணிவுடன் நின்ற ராமனைப் பார்த்ததும் என் மனம் குதூகலித்தது.

‘இவனே, இவனே என் சீதைக்கு ஏற்றவன்’ என்று உள்ளம் உரக்கக் கூறியது.
இறைவா! இவனே வில்லை உடைக்க வேண்டுமே என்று நான் வேண்டாத தெய்வங்கள் இல்லை தெரியுமா?
இவன் வில்லை உடைத்தால் நான் எத்தனை தேங்காயை இறைவனுக்கு உடைப்பேன் என்பது எனக்கே தெரியாது.
விசுவாமித்திர முனிவர் “ராமா! சென்று வில்லை எடுத்து நாண் ஏற்று” என்று கூறியதும் கம்பீரமாய் நடந்து வந்த ராமன், வில்லை எடுத்ததை மட்டும் தான் மக்கள் கண்டனர். அடுத்து இடிபோல் வில் பலத்த ஒலியுடன் இற்று விழுந்ததை மட்டுமே கண்டனர். எப்பேர்ப்பட்ட அற்புதமான காட்சி அது. அதற்கு எத்தனை பேர் சாட்சி. ராமன் வில்லை எடுத்தது கண்டனர். இற்றது கேட்டனர்.அவ்வளவே.

அதன் பேரொலி அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்தது. தேவர்கள் பூமாரிப் பெய்தனர். மேகங்கள் பொன் மழை பொழிந்தது. முனிவர்களின் வாழ்த்துக்கள் பரவியது. எங்கும் மக்கள் மகிழ்ச்சியினால் கூத்தாடினார்கள்.

அடுத்த நிமிஷம் நான் ஏன் அங்கே நிற்கிறேன்? துள்ளிக் குதித்து
ஓடினேன்.என் சீதை இருக்குமிடத்தை நோக்கிப் பறந்தேன்.

என் சீதை எனக்குத் தலைவி மட்டுமா?அல்ல. என் தோழி. அது மட்டும் தானா? அவள் என் தாய். இல்லை .இல்லை. அவளை நான் தெய்வமாகப் பார்த்தேன். ‘திருமகளே வந்து தோன்றியிருக்கிறாள்’ என்று நம்பிய நான் என் கண்மணியின், கண்ணீரை துடைக்க வேண்டும் என்று விரைந்து ஓடிச் சென்று அவள் உள்ளம் மகிழும் வண்ணம் உரைத்தேன்.. நான் உரைத்த ஒவ்வொன்றும் அவள் செவியில் தேனாய்ப் பாய்ந்தது.
காதலில் விழுந்தவளே! நான் சொல்வது உன் காதில் விழுந்ததா? என்று கத்தினேன்.

தொடர்புடையவை:  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், அரிய தமிழ் நுால்கள் விற்பனை

வழக்கம் போல் சீதையைச் சந்தித்தவுடன் அவளின் திருவடிகளை நான் வணங்கவில்லை. மாறாக ஆடினேன். எல்லையற்ற மகிழ்ச்சியினால் கூத்தாடினேன். ஆரவாரம் செய்து பாடினேன். நிலை கொள்ளாமல் குதித்தேன்.. எனக்கே என் செய்கை புரியவில்ல. அவ்வளவு சந்தோஷம் எனக்கு.

“நீலமாலை! உன்னிடம் ஏன் இன்று இவ்வளவு உற்சாகம்?” சீதை வியப்புடன் வினவினாள். “என்ன செய்தி என்று சொல் நீலமாலை.”

“தேவி, இந்த உலகம் முழுவதும் சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தசரதன் என்ற அரசனின் மகன் ராமன். மன்மதனை விடச் சிறந்த அழகு படைத்தவன். பாம்பணையில் துயில் கொள்ளும் பரந்தாமனைப் போன்ற ஆற்றல் பெற்றவன். தன் தம்பியோடும், விசுவாமித்திர முனிவருடனும் நம் நகருக்கு வந்துள்ளான்.” நான் கூறக் கூற சீதை பரபரப்படைந்தாள். தன் உள்ளம் புகுந்த அழகன்தான் அவனோ ?
அதை என் வாயால் அறிந்து கொள்ள விரும்பிய அவள் மேலும் சொல்லடி சீக்கிரம் என்று செல்லமாய்ச் சிணுங்கினாள்.

நானோ , அவளின் பரபரப்பை ரசனையோடு நோக்கி இதழில் புன்னகையைப் படரவிட்டபடி, அவளை நோக்கி, “தேவி! முனிவர் அவரின் சிறப்புக்களைக் கூறக் கூற, உங்களுக்கு ஏற்றவர் அவர்தான் என்று என் உள்ளம் துள்ளியது. ஆனால் சிவ தனுசை எடுத்து நாண் ஏற்ற வேண்டுமே? பேசாமல் உன் தந்தை உன்னை அவன் கையில் பிடித்துக் கொடுத்து விடக் கூடாதா என்று என் மனம் பதை பதைத்தது. நானே அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உன் எதிரில் நிறுத்த வேண்டும் என்று நினைத்தேனடி. அப்புறம் மன்னவர் முகம் நினைவிற்கு வரவே என்னை அடக்கிக் கொண்டேன்.

“பிறகு?” – இருப்பு கொள்ள முடியாமல் சீதையிடம் இருந்து வெளிவந்தது வார்த்தை.

“தேவி! குருவின் கட்டளைக்குக் காத்து நின்ற ராமன், அவர் கண் அசைத்ததும் கம்பீர நடை நடந்து வந்தார். அடடா! நடையா அது? என்ன நடை? நடையில் உயர்ந்த அந்த நாயகன் நடந்தால் நடை அழகு. தனுசை எடுத்த விதம் அழகோ அழகு.
தனுசை எடுத்தது மட்டும் தான் கண்டோம். ஆகா அது வளைந்தது; ஒடிந்தது. அந்தப் பேரோசையில்
அண்டமெல்லாம் கிடுகிடுத்தது. உலகத்தின் தீமை எல்லாம் அழிந்தது
அது மட்டுமா?. உன் துன்பமும் ஒழிந்தது.”

நான் சொல்ல சொல்லக் கேட்டு பூரிப்படைந்த சீதை சட்டென்று கவலையானாள். ‘நேற்று தான் வீதியில் கண்டவன் தான் இவனோ? இல்லை வேறு யாரோ?’ எனக்கா என் தோழியின் மனம் புரியாது? .

“தேவி! நீங்கள் உத்தம குலத்துப் பெண். சீரிய பண்புகள் நிறைந்தவர். ஓர் ஆசை உங்கள் உள்ளத்தில் உதித்தது என்றால், அதற்குக் காரணம் இல்லாமல் இருக்குமா?. கற்பின் கனலாக விளங்கும் நீங்கள் இது வரை எந்த ஆடவரையும் கண்ணில் கண்டதில்லை; ஆசைப்பட்டதில்லை. இன்று ஒருவரைப் பார்த்த கணத்தில் பிடித்து விட்டது என்றால்,
அவரே உங்களைக் கை பிடிக்கப் போகிறவர் என்று இறைவன் சூசகமாக உங்களுக்கு அறிவித்திருக்கிறார்.” என்று அர்த்தம்.

தொடர்புடையவை:  திறமைதான் நமது செல்வம் !

என் சொல் என் கண்மணி சீதையை நெகிழ வைத்தது.

“நீலமாலை நீ சொல்வது உண்மையாகட்டும். அவர் இல்லை எனில் நான் உயிர் துறப்பேன்.” அவள் கண்களில் மழை .

“அப்படிச் சொல்லாதீர்கள் தேவி. நான் உடனே அவளது பவள இதழை என் கரங்களால் பூட்டினேன்.. “உயிர் துறப்பது என்பது நம் கையில் இல்லை.
நீவீர் இருவரும் வாழ்வில் இணைய வேண்டும் என்பது நடந்தே தீரும். இராமன் உங்கள் கழுத்தில் மூன்று முடிச்சு போடுவார். இது இறைவன் போட்ட முடிச்சு. சிந்தித்துப் பாருங்கள். நேற்று அரச வீதியில் முனிவருடன் சென்றது இரண்டு இளைஞர்கள். இன்று அவர்களே நம் அரண்மனைக்கு வந்தனர். மூத்தவர் வில்லை உடைத்திருக்கிறார். மகாவிஷ்ணுவின் அவதாரம் அவர்.”அதில் உள்ளம் தெளிந்தாள் சீதை.

“செந்தாமரைக் கண்ணனான திருமாலே அவர். அவருக்கெனப் பிறந்த திருமகள் நீங்கள். அவரே நீ. நீயே அவர்.” நெகிழ்வோடு கூறினேன்.
சீதை தன் கழுத்தில் கிடந்த மாலைகளைக் காட்டி இதில் எது உனக்கு வேண்டும் நீலமாலை. எடுத்துக் கொள் என்றாள். பின் அவளே நீலமாலையான எனக்குப் பச்சை வண்ண மாலையை மனம் உவந்து அளித்தாள்..சீதைக்கு நல்லதொரு தோழியாகவே நான் இருந்தேன்.
முற்றும்

– முனைவர் ஜெயந்தி நாகராஜன்

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *