பெரு வெள்ளப் பிரார்த்தனையில் உள்ளங்கள் உருகட்டும்….: ஒரு நொடியில் விடியும் உலகம்!

துன்பங்கள், கஷ்டங்கள், மனச்சங்கடங்கள், என எது வந்தாலும் மனிதனுக்கு மனிதன் கைகொடுத்து உதவுகிறானோ இல்லையோ.. நாம் எல்லோரும் நமக்குப் பிடித்த கடவுளின் பெயரைச் சொல்லி ஆறுதல் தேடுவது என்பதுதான் ஒரே தீர்வு என காலம் காலமாக நம்பி வருகிறோம். நாம் ஒவ்வொருவரும் பக்தி மார்க்கத்தில் திளைத்து, பிறவிக் கடலின் பாவங்களை போக்கிக் கொள்கிறோமோ இல்லையோ, அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன தைரியத்தைப் பெற்று விடுகிறோம்.

எதிர்பார்த்து காத்திருந்த சொந்த உறவுகளே ஏமாற்றி விட்டு போனாலும் திடீர் என எங்கிருந்தோ வந்து யாரோ நமக்கு உதவி செய்து துன்பத்தில் இருந்து விடுவித்து விடும் போது நல்ல வேளையா கடவுள் மாதிரி வந்து காப்பாத்தினீங்க.. இந்த உதவிய நான் உயிர் உள்ள வரைக்கும் மறக்கவே மாட்டேன்.. என்று எதோ ஒரு சூழலில் நாம் யாரிடமோ சொல்லி இருப்போம். அல்லது யாராவது நம்மிடம் சொல்லக் கேட்டிருப்போம். அந்த வகையில் மனம் உருகி வேண்டி, அவனே கதி என தாள் பணிந்தவர்களுக்கு, கடவுள் அவரவர உள்ளத்தில் நம்பிக்கையின் ஞான ஒளியாய் வெளிச்சம் காட்டி இருப்பார். அனுபத்தில் உணர்ந்த யாரும்… ஆண்டவனை விளக்கி சொல்ல முடியாது..

தேடிய கண்களுக்கு தென்படும் தீபச் சுடராய் தெரியும் அவன் தேடாத கண்களுக்கும் காற்றாய் திரிந்து எல்லா உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கின்றான். கடவுளை நம்பினார் கெடுவதில்லை. பண நஷ்டம், மனக்கஷ்டம் என எதுவந்தாலும் ஆலயம் சென்று அடிபணிந்த நாம் இந்நாளில் ஆலயம் கூட செல்ல முடியாமல் பெருந்துன்பத்தை அனுபவித்து வருகிறோமே. சுயநலாமாய் எத்தனையோ வேண்டுதல்களை கடவுளிடம் வைத்து பலன் பெற்றோம்.. உலகையே உலுக்கி வரும் கொரோனாவின்பிடியில் நாம் எல்லோரும் சிக்கி உள்ள இந்த நேரத்தில் பொதுநலமாய் ஒரு வேண்டுதல் வைப்போம் இறைவனிடம்.

நம்ம உறவுக்காரங்க யாருக்காவது உடல் நலம் சரி இல்லையின்னாலோ, நமக்கு பிடித்த நடிகர்கள் முதல் தலைவர்கள் உயிருக்கு ஆபத்துனாலோ எல்லோரும் குடும்பமாகவோ.. கூட்டம் கூட்டமாகவோ பிரார்த்தனை செய்கிறோம்..

எம்.ஜி.ஆரை மூன்று முறை உயிர் பிழைக்க வைத்தது பிரார்த்தனைதான் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.

மருந்தை தேடி அறிவியல் ஆய்வு செய்யும் அதே வேளையில் நோய் நமக்கு கற்றுத்தந்த பாடத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. விலகி இருங்கள், தனித்து இருங்கள், விழித்திருங்கள்.. கரோனா இன்று நமக்கு சொல்கிறது.. நம் ஆன்மிக குரு விவேகானந்தர் அன்றே நமக்கு சொன்னது என்ன பசித்திரு, தனித்திரு, விழித்திரு.. எத்தனையோ ஞானிகள், மத குருக்கள், சித்தர்கள் என பலரும் நமக்கு ஏராளமான பாடங்களை புகட்டிவிட்டுச் சென்றார்கள்.. ஆனால் இன்று நாம் சுயநலத்தின் பிடியில் முழுமையாக சிக்கிக் கொண்டோம்..

தொடர்புடையவை:  சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி

எத்தனையோ பேரழிவுகளை இந்த உலகம் இதற்கு முன் பார்த்திருக்கிறது.. ஆனால் நாம் அவற்றை எல்லாம் உணர்ந்தோம் இல்லை. இன்று கொரோனாவின் கொடூரம் நம் கண்முன்னே.. இப்போதும் நம் பக்கத்து வீட்டில் அதன் பேயாட்டத்தை பார்க்காதவரை அதுபற்றிய விழிப்புணர்வோ,பயமோ இல்லாமல் சுற்றித் திரிவதுதான் வேதனையான ஒன்றாக இருக்கிறது.

திரையங்குகள், பூட்டப்பட்டன, வீட்டுக்குள் திரையரங்கை கொண்டு வந்துவிட்டோம். சந்தை, பெரிய மால்கள் பூட்டப்பட்டன, அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை வீட்டு வாசலுக்கு கொண்டு வந்துவிட்டோம்.. பள்ளிகள் பூட்டப்பட்டன.. வகுப்புகள் இப்போது உங்கள் வரவேற்பறைக்கே வந்துவிட்டது.. கொஞ்சம் யோசியுங்கள்..

கோயில்கள் பூட்டப்பட்டுள்ளன.. ஆலயங்கள் மசூதிகள் மூடப்பட்டுள்ளன.. உங்கள் விருப்பத்திற்குரிய கடவுள்களை உடனடியாக உங்கள் வீட்டுக்குள் வரவழையுங்கள்.. பூட்டப்பட்ட அனைத்துக் கதவுகளும் திறக்கும்.. மருந்துகளும் மாத்திரைகளும் மட்டுமே நோய்களை தீர்ப்பதில்லை.. நம்பிக்கையும் தான் நம்மை காக்கும்.

உங்கள் நம்பிக்கைக்குரிய கடவுள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்பிக்கையோடு கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அவரவர் வீட்டில் இருந்தபடி.. ஒரே நாளில் ஒரே நேரத்தில்… உலகமே.. ஒன்று கூடி அழைத்தால்.. ஒருநொடியில் கொரோனா மடியும் இந்த உலகம் விடியும்…

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *