பொது முடக்கத்தையே நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது

பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவக் குழுவினருடன் சென்னையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர் ராமசுப்ரமணியன் கூறுகையில், முதல் விஷயம், கரோனா பாதித்தவர்கள் அச்சப்பட வேண்டாம். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் அச்சப்பட வேண்டாம்.

அறிகுறி தென்பட்டதும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசோதனைக்கும், முடிவுகள் வரவும் காலம் ஆனாலும் அதுவரை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடந்த இரண்டு வாரத்தில் மருத்துவத்துறையில் சிகிச்சை முறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, அவற்றை தொகுத்து, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்படும். பொது மக்கள் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் கரோனா தொற்றை ஒழிக்க முடியும்.கரோனாவைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தையே தொடர முடியாது.

இன்னும் ஆறு மாத காலத்துக்கு பொது முடக்கத்தை நீட்டிக்க முடியாது. பொது முடக்கம் என்பது மிகப்பெரிய ஆயுதம். உதாரணமாக பொது முடக்கத்தால் கரோனாவை ஒழிப்பது என்பது கோடாரியைக் கொண்டு கொசுவை அடிப்பதற்கு ஒப்பாகும்.

எனவே பொது முடக்கத்தையே நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது. பொது மக்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  அடடா இது என்ன கொடுமை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *