கருட பஞ்சமி; தோஷம் போக்கும் கருடாழ்வார்

கருட பஞ்சமியில் கருடாழ்வாரை வணங்குவோம். தோஷங்கள் அனைத்தும் நீக்கியருள்வார். சந்தோஷத்தைப் பெருக்கித் தருவார். சகல ஐஸ்வரியங்களையும் வழங்கி அருளும் கருட பஞ்சமி நாளில், கருடாழ்வாரை பிரார்த்திப்போம். நாளைய தினம் ஜூலை 25ம் தேதி கருட பஞ்சமி.

பாம்புப் புற்றுக்கு பால் வழங்கி வேண்டுவோம்.

புற்று வலம் வந்து பிரார்த்தனை செய்துகொள்வோம். சிவன் கழுத்தில் பாம்பைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

பிள்ளையார் இடுப்பில் அணிந்துகொண்டிருக்கிறார். அம்பாளின் சிரசில் நாகபீடமென இருந்து சிரசின் மேல் குடையெனத் திகழும் பாம்பைக் காணலாம்.

மகாவிஷ்ணு, பாம்புப்படுக்கையில்தான் படுத்துக்கொண்டு, உலகையே ரட்சிக்கிறார்.

நவக்கிரகங்களிலும் இரண்டு கிரகங்கள் பாம்பு சம்பந்தப்பட்டதாகவே அமைந்திருக்கிறது.

உடலின் மூலாதார சக்தி, குண்டலினி சக்தி என்பதெல்லாமும் ஒரு பாம்பு போல் சுற்றிக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஜாதகத்தில், கால சர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம் இருப்பதுதான் வாழ்க்கைக்கு தடை என்று விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம். அரசமரமும் ஆன்மிகத்தில் விஞ்ஞானத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால்தான் பல ஊர்களில் அரசமரத்தின் கீழே, நாகர் சிலை வழிபாடு அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவிலுக்கு அந்தப் பெயர் அமைவதற்குக் காரணமே நாகநாதர் கோயில் கொண்டிருப்பதுதான்.

நாம் வாழும் உலகம் பூலோகம். பூலோகத்துக்குக் கீழே இருப்பதுதான் நாக லோகம். பூமிக்குக் கீழே இருக்கும் நாகலோகத்திலுள்ள நாகங்களுக்கு பால் விடுவதும் ஆராதிப்பதும் முக்கிய தோஷங்களையெல்லாம் போக்குகிற விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளில் வருவதுதான் நாக சதுர்த்தி. இந்தநாளில், நாகர் வழிபாடு செய்வதும் புற்றுக்கு பாலிடுவதும் ஏழு தலைமுறை தோஷங்களையும் போக்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சதுர்த்திக்கு அடுத்த நாள் பஞ்சமி. ஆடி மாதத்தில் நாக சதுர்த்திக்கு அடுத்தநாள் கருட பஞ்சமி. கருடனை வணங்கும் நாள். அதாவது பூமிக்குக் கீழே உள்ள நாகங்களை வழிபடும் நாள் நாக சதுர்த்தி. வானில் பறக்கக் கூடிய கருடனை வணங்கும் நாள், கருட பஞ்சமி. மிக உன்னதமான நாள் இது.

நடந்து போய்க்கொண்டிருக்கும் போது, கருடன் பறப்பதைப் பார்த்தால், உடனே காலில் செருப்பைக் கழற்றிவிட்டு, அண்ணாந்து கருடப் பறவையைப் பார்த்து, ‘கருடா… கருடா…’ என்று சொல்லி வணங்கிவிட்டு, கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பெரியவர்களைப் பார்க்கலாம்.

கருடன் என்பது சாதாரணப் பறவை அல்ல. மகாவிஷ்ணுவின் வாகனம். திருமாலின் வாயிற்காப்பாளன். கருடனின் பார்வை கிடைத்துவிட்டாலே, நம்மில் பாதி பாவங்கள் தொலைந்துவிடும். தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்று கருடனுக்கு அத்தனை சக்திகளை அருளியிருக்கிறார் மகாவிஷ்ணு. அதனால்தான், கருடனை ஆழ்வார் எனும் திருநாமம் சேர்த்து, (பக்தி Whatsapp) கருடாழ்வார் என்று போற்றுகிறது புராணம். அதனால்தான், எல்லா வைணவக் கோயில்களிலும் பெருமாள் சந்நிதிக்கு எதிரே, தன் தலைவன், லோகநாயகன் பெருமாளை வணங்கி, கைக்கூப்பியபடியே நிற்கும் கருடாழ்வார் சந்நிதி அமைத்திருக்கிறது ஆகமம். விழாக்காலங்களில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருவது கண்கொள்ளாக் காட்சி.

தொடர்புடையவை:  மதுரையில் பஞ்சபூதத் தலங்கள்

கருடன் சக்தி வாய்ந்த பறவை. கருடாழ்வார் அளப்பரிய ஆற்றலும் சக்தியும் வழங்குபவர். அதனால்தான் ஆடி மாதத்தின் வளர்பிற பஞ்சமி, கருட பஞ்சமி என்று போற்றப்படுகிறது. இந்தநாள், கருடாழ்வாருக்கு உகந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.

நாளைய தினம் 25ம் தேதி கருட பஞ்சமி. இந்தநாளில், மகாவிஷ்ணுவின் திருவடிகளையும் அவரின் சந்நிதிக்கு எதிரே காட்சி தரும் கருடாழ்வாரையும் மனதார வணங்குங்கள். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யுங்கள்.

சகல தோஷங்களும் விலகும். சந்தோஷங்கள் பெருகும். திருமணம் முதலான சுப நிகழ்வுகளில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகம், தொழில் முதலானவற்றில் மேன்மை அடையலாம். சகல சுபிட்சங்களையும் அருளிச்செய்வார் கருடாழ்வார்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *