காந்தியின் சுத்தமான பாரதம்

குமரி எஸ். நீலகண்டன்


நில வளம், கலை வளம், கலாச்சாரம், அறிவியல், ஆன்மிகமென எல்லா வளமும் கொண்ட நாடாக எப்போதுமே இருந்திருக்கிறது பாரதம். வளமான இந்தியாவின் உளம் உலகத்தையே உற்று பார்க்க வைத்திருக்கிறது. இந்த புண்ணிய பூமியில் பிறந்த காந்தியின் கனவு உலகார்ந்த உயர்ந்த நோக்கமாக இருந்தது.


எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கம், சுத்தமான பாரதம், அகிம்சை வழி உலக அமைதிக்கான ஒரு உன்னத உதாரண இந்தியாவை உருவாக்குவதே காந்தியின் கனவாக இருந்தது. காந்தி என்ற ஆளுமைக்கு தென் ஆப்ரிக்காவே அடித்த்தளமாக இருந்தது. துப்புரவு பணியை அவர் கற்றுக் கொண்டதும் தென் ஆப்ரிக்காவில்தான். மூன்று வருட தென் ஆப்ரிக்க வாழ்க்கைக்கு பின் குடும்பத்துடன் காந்தி இந்தியா வந்த போது அன்றைய பம்பாய் கடும் பிளேக் நோயால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தது. ஒரே வாரத்திலேயே ஆயிரக் கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்தார்கள். பிளேக் நோயானது ராஜ்காட் உட்பட பல பகுதிகளுக்கும் பரவும் அபாயம் பெரிதாய் இருந்தது. தேங்கி கிடந்த கழிவுநீர்களும் அசுகாதாரமான சூழலுமே பிளேக் பரவ காரணமாக இருந்தது.

கண்ட இடங்களிலெல்லாம் மனித கழிவுகள் கிடந்தன. மக்களுக்கு சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது. இதை உணர்ந்த மகாத்மா உடனடியாக ராஜ்காட்டில் ஒவ்வொரு வீடாகச் சென்று சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார். தானே ஒரு துப்புரவு தொழிலாளியாக மாறி ஒவ்வொரு மக்களுக்கும் துப்புரவு பணியினை கற்றுக் கொடுத்தார். இதனால் உயர் சாதி மக்கள் வாழ்ந்த பகுதியை விட சில ஏழைகளின் குடிசைகள் நிறைந்த பகுதிகள் கூட மிகுந்த சுத்தமானதாக மாறியது.
பீகாரில் சம்பரானில் காந்தி சென்ற போது பல தொண்டர்களிடம் அங்கு பள்ளிகளை தொடங்கி நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தார். ஒருநாள் கஸ்தூர்பாவிடமே கேட்டார். ‘குழந்தைகளுக்காக ஏன் நீயும் ஒரு பள்ளி துவங்க கூடாது?’ என்றார். அதற்கு கஸ்தூர்பா ‘இங்கு ஒரு பள்ளியை துவங்கி நான் என்ன செய்வேன்? நான் அவர்களுக்கு குஜராத்தி கற்றுக் கொடுக்கட்டுமா? எனக்கு அவர்களின் மொழி தெரியாது. எப்படி அவர்களோடு நான் பேச முடியும்?’ என்றார்.


உடனே காந்தி ‘குழந்தைகளுக்கான கல்வியில் முதற் பாடமானது சுத்தம் சார்ந்ததுதான். விவசாயிகளின் குழந்தைகளை கொண்டு வந்து அவர்களின் கண்களையும் பற்களையும் பரிசோதனை செய். அவர்களை குளிப்பாட்டி சுத்தத்தை அவர்களுக்கு கற்பித்து விடு. இந்த கல்வி மிகவும் முக்கியமானது. இன்றே இதைத் துவங்கலாம்’ என்றார்.
கஸ்தூர்பா அவருடைய பள்ளியை அப்போதே துவங்கினார்.
1925 மே மாத த்தில் நவஜீவன் வார இதழில் காந்தி கழிப்பறையை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்புடையவை:  கரோனாவால் மாணவர் இறக்க நேரிட்டால் அதற்கு யார் பொறுப்பு?


‘’ஒரு கழிப்பறையானது வரவேற்பறையைப் போல் சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமென்பதை நான் 35 வருடங்களுக்கு முன்பே கற்றுக் கொண்டேன். இதை நான் மேற்கிலிருந்து கற்றுக் கொண்டேன்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கழிப்பறையின் சுத்த த்தை பொறுத்தே நோய்கள் உருவாகின்றன. அதனால் கழிப்பறை சுத்தமாக இருப்பது மிக முக்கியமானதாக கூறி இருக்கிறார்.
காந்தியிடம் ஒரு செய்தியாளர் ‘’நீங்கள் சர்வாதிகாரியானால் என்ன செய்வீர்கள்’’ என்று கேட்டார்.

அதற்கு அவர் ‘’நான் அந்தப் பொறுப்பை ஒத்துக் கொள்ளவே மாட்டேன். அப்படியே நான் ஒரு சர்வாதிகாரியானால் வைஸ்ராயின் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்கிற துப்புரவு தொழிலாளர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வீட்டுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வேன்’’ என்றார்.

காரணம் வைஸ்ராயின் வீட்டு கழிப்பறைகள் சுத்தமாக இருக்கின்றன. அதை சுத்தம் செய்பவர்களின் வீட்டு கழிப்பறைகள் சுகாதாரமற்று இருக்கின்றன.

வெளியே சுத்தம் செய்கிற போது மனதும் தூய்மையாகிறது. மன அழுக்கும் மறைந்து போகிறது. மனதில் அன்பும் அமைதியும் பிறக்கிறது.
காந்தி இன்னும் சமுதாய அழுக்குகளாக இருக்கும் பலவற்றையும் சுத்தம் செய்ய எண்ணினார்.
காந்தி மது விலக்கை அமல் படுத்த வேண்டுமென்றார்.
குதிரைப் பந்தயம், சூதாட்டம், லாட்டரி, பந்தயம் கட்டுதல் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும்.
அரசு செலவுகளை வெகுவாகக் குறைக்க வேண்டும்.
வருமானத்திற்கு தகுந்தாற் போல் சிக்கனமான வாழ்க்கையுடன் பொருளாதாரத்தை வளமாக்க வேண்டுமென்றார். அரசு அலுவலர்களின் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வது.
அதிகாரத்தை பஞ்சாயத்து, நகராட்சியென அடிமட்ட அளவில் பகிர்ந்து கொள்ளல்.
அடிப்படைக் கல்வியையும் கைத்தொழிலையும் வளர்ப்பது…. இதெல்லாம் அவருடைய கனவாக இருந்தது.

அவரின் பல கனவுகளும் மெய்ப்படாமல் போனது.

நாம் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவற்றையும் பற்றி காந்தி நிறையக் கூறினார். காந்தியின் கருத்துப்படி ஜனநாயகம் என்பது எளிய மனிதனுக்கும் உயர் பதவிக்கு வரத் தகுந்த வாய்ப்பை அளிப்பதேயாகும். ஜனநாயகத்தில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த விரும்பினார். எந்த பேதமுமின்றி சட்டத்தின் முன்பு எல்லா மக்களுமே சமமானவர்களாக கருதினார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததுமே அவர் தன்னை ஒரு எதிர்க்கட்சி தலைவராக ஆக்கிக் கொண்டார். எல்லாத் தவறுகளையும் அரசிற்கு சுட்டிக் காட்டினார். அந்தத் தவறுகளெல்லாம் சரி செய்யப்பட்டு விடுமென நம்பினார்.

காந்தியிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. அவர் மற்றத் தலைவர்களையும் தன்னைப் போல் எண்ணினார். நிறைய ஏமாற்றங்கள் அவரை எதிர் கொண்டன.
காந்தி இறக்கிறபோது அவரிடம் எதுவும் கிடையாது. அவரிடம் இருந்தது ஒரு எளிய துணித் துண்டு. கண்ணாடி, பைபிள், குர்ரான், பகவத் கீதை, எச்சில் துப்புவதற்கு ஒரு கோப்பை, மூன்று குரங்கு பொம்மைகள் இவ்வளவுதான்.

தொடர்புடையவை:  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு!

காந்தி நாட்டிற்காக தன்னையே தியாகம் செய்தார். நாட்டிலுள்ள எல்லா மக்களும் தங்களுக்கு தேவையான எல்லா அடிப்படைத் தேவைகளான நல்ல உணவு, உடை, காற்று, உறைவிடம் இவற்றுடன் அமைதியான கௌரவமான வாழ்க்கை வாழ வேண்டுமென கனவு கண்டார். அதற்காகவே இன்றும் உலகம் அவரைப் போற்றிக் கொண்டிருக்கிறது. அவர் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தார் என்பதற்காக அல்ல.

ஜப்பானில் அணுகுண்டு வெடித்த போது அதனை மிகவும் கண்டித்தார். உலக மக்களனைவரும் உற்றார் உறவினர்கள் போல் நட்புடன் வாழ விரும்பினார். உலகமே அமைதியுடன் வாழ விரும்பினார்

அவரின் நோக்கமானது மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டும். மக்கள் தாங்களாகவே தங்களது வளர்ச்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணினார். அவர்கள் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை சார்ந்து இருக்கக் கூடாதென எண்ணினார். அத்தகைய சுதந்திரமே அவரது இலக்காக இருந்தது. அவரது நோக்கத்தின் படி அரசாங்கமென்பது ஒரு கண்காணிப்பு அமைப்பாகவே இருக்க வேண்டுமென்பதேயாகும். சில மக்கள் இதை தவறாக எடுத்துக் கொண்டார்கள். எந்த அரசாங்கம் தவறுகளை சுதந்திரமாக செய்ய அனுமதிக்கிறதோ அந்த அரசாங்கத்தை நல்ல அரசாங்கமாக எடுத்துக் கொண்டார்கள். காந்தி கூறினார் எல்லா அரசாங்க சொத்துக்களையும் உங்களது சொத்துக்களாக பாவித்து பராமரிக்கச் சொன்னார். சில மக்கள் அரசாங்க சொத்துக்களை தன் சொத்துக்களாக கருதி சுதந்திரமாக சுரண்டிக் கொண்டார்கள். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை பினாமிப் பெயர்களில் வாங்கி குவித்தார்கள். இயற்கை வளங்களை அழித்து அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டினார்கள். வரும் தலைமுறைக்காக நிறைய சொத்துக்களை சேர்த்துக் கொண்டார்கள்.
ஒன்றை மட்டும் அவர்கள் மறந்து விட்டார்கள். இந்த சமுதாயத்தோடுதான் அவர்களது குழந்தைகளும் நாளை வாழப் போகிறார்கள். அவர்கள் எவ்வளவு பணங்களை பதுக்கி வைத்திருந்தாலும் அந்த்ப் பணத்தால் நாளை ஒரு நல்ல சமுதாயத்தையோ அமைதியான சூழலையோ அவர்களால் உருவாக்க இயலாது. அவர்கள் சீரழிக்கும் இன்றைய சமுதாயத்தோடு நாளை அழிந்து போவது அவர்களின் குழந்தைகளும்தான்.

காந்தியுடைய கனவு யாருடைய கண்ணிலும் கண்ணீர் வரக்கூடாதென்பதாகவே இருந்தது.
இன்றும் பொது இடங்களில் மனித கழிவை பார்க்கிறோம். பிளாஸ்டிக் பைகள் காடுகள் , நதிகள், ரயில் பாதைகள் கிணறுகள், கடல்களென எல்லா இடங்களிலும் குவிந்து கிடக்கின்றன. அழுகும் காய்கறிகளோடு மாமிசக் கழிவுகளுக்கும் குறைவில்லை. குறைந்த அகலத்தில் இயற்கை காற்று நுழைய இயலாத அளவில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். சாலையெங்கும் குழிகள் குட்டைகள்.


சுதந்திரம் கிடைத்து 70 வருடங்களான பின்பும் நமது நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கு மேலானவர்கள் இன்னமும் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகளின்றி சுகாதாரமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரயில் நிலையங்களுக்கருகில் சென்று பார்த்தால் பல ஏழை மக்கள் வெயிலிலும் மழையிலும் குப்பைகளோடு உறங்குகிறார்கள். கடிக்கும் கொசுக்களோடு கடினமான வாழ்க்கை நடத்துகிறார்கள்.

தொடர்புடையவை:  இந்தியா தொழில் துறையில் மீண்டும் வளர்ச்சி பெறும். என்னை நம்புங்கள்: மோடி

சமுதாய ஏற்றத் தாழ்வுகளை சீர் செய்வதிலும் வறுமையை ஒழிப்பதிலும் அரசு புதியத் திட்டங்களை அறிமுகப் படுத்தி வருகிறது. இனவாதம் தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிடும் தொலைநோக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது.

அக சுத்தமும் புற சுத்தமும் இருந்தால்தான் நாம் கடவுளின் தன்மையை அணுக இயலும் என்றார் மகாத்மா. அவ்வகையில் ஒவ்வொரு வரும் தனக்கான துப்புரவு தொழிலாளியாக இருக்க வேண்டுமென ஒரு தருணத்தில் சொல்லி இருக்கார் மகாத்மா. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நமது உள்ளம் ஆரோக்கியமாக இருக்க இயலும். உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, நாம் இருக்கும் சுற்றுப் புறம் எல்லாம் தூய்மையானதாக இருக்க வேண்டும். இவை எல்லாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆரோக்கியமான சிந்தனை நம்முள் இருக்கும்.

ஆரோக்கியமான சிந்தையில்தான் அன்பு உதயமாகும். அன்பான உள்ளத்தில்தான் அகிம்சையும் அமைதியும் உருவாகும். ஆரோக்கியமான சமுதாயத்தையும் உருவாக்க இயலும்.
உலகமே பாரதத்தை உற்று நோக்கி தன்னுள் ஒட்டிக் கொண்டிருக்கும் சமுதாய அழுக்குகளையும் சுத்தப் படுத்தி கொள்ளும். உலகம் அமைதி பெறும். காந்தியின் கனவு மெய்ப்படும்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *