சிறுதுளி (ஹைக்கூக்கள்)


நூல் ஆசிரியர் : நல. ஞானபண்டிதன்
வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,
சென்னை-600 018.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
பக்கங்கள் : 80, விலை : ரூ.50

நூலாசிரியர் கவிஞர் நல. ஞானபண்டிதன் அவர்களின் அய்ந்தாவது நூல் இது. முதல் ஹைக்கூ கவிதை நூல்.  இவரது படைப்புகளை பல்வேறு சிற்றிதழ்களில் படித்து இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததில் மகிழ்ச்சி. இவரது ஹைக்கூ கவிதைகளை வெளியிட்ட சிற்றிதழ் ஆசிரியர்களின் புகைப்படங்களை நூலின் அட்டையில் பிரசுரம் செய்து புதுமையாக நன்றி செலுத்தி உள்ளார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தாலும் பட்டறிவின் காரணமாக புதுக்கவிதை பயண நூல் ஹைக்கூ கவிதை என எழுதி வருகிறார்.

ஆடிய மனிதனை
      அடிபணிய வைக்கும்
      ஆறடி நிலம்!

      ‘தான்’ என்ற அகந்தையில் ஆடிய மனிதனை இறந்ததும் ஆறடியில் அடக்கி விடும் இயற்கையின் நிலையை நன்கு உணர்த்தி உள்ளார். புதைத்தால் தான் ஆறடி. எரித்தால் அதுவும் இல்லை.

      இருளை விரட்டிய
      குண்டு விளக்கு
      வெண்ணிலா!

      நிலா ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு விதமாக பார்ப்பது வழக்கம். பந்தாக, தோசையாக,  வடையாக – இப்படி பலரும் பலவிதமாகப் பாராட்டி இருந்தாலும் நூலாசிரியர் கவிஞர் நல. ஞானபண்டிதன் நிலவை குண்டுவிளக்காய் பார்த்தது புதிய பார்வை.

      மலையரசியின்
      வளைந்த கூந்தல்
      அருவி!

      மலையிலிருந்து விழும் அருவியை கவிஞர்கள் பலரும் பலவிதமாக வர்ணிப்பது உண்டு.  இவர் வளைந்த கூந்தல் என்று வர்ணித்து உள்ளார். கூந்தல் கருப்பாக இருக்கும். அருவியோ வெள்ளையாகத் தெரியும். வெள்ளை முடி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

      அழகாய கட்டிய வீடு
      இடித்திட மனமில்லை
      சிலந்தி வலை!

      கவிஞர்கள் ரசனை மிக்கவர்கள். சிலந்தி பூச்சியைப் பிடிப்பதற்காக கட்டிய வலை வீடு அழகாக இருப்பதால் இடிக்க மனமில்லை என்கிறார். நல்ல ரசனை தான். எதனையும் உற்றுநோக்கும் போதுதான் படைப்புகள் உருவாகும்.

      குடிசையினுள்
      எத்தனை விளக்குகள்
      நட்சத்திரங்கள்!

      குடிசையில் ஓட்டைகள் இருப்பதால் அதன்வழி நட்சத்திரங்கள் தெரிகின்றன. வறுமையையும் செம்மையாகச் சிந்தித்து நட்சத்திரங்களை விளக்குகள் என்று சொல்லும் கற்பனை நன்று.

      கொஞ்சும் தமிழ்
      செவியில் அமுதம்
      பேசும் மழலை!

      குழந்தைகளின் பேச்சை உற்றுநோக்கி ரசித்து காதில் விழும் அமுதம் என்று உவமையாக வடித்த்து சிறப்பு.

      குளத்தின் மேல்
      வெள்ளைப் பூக்கள்
      கொக்குகள்!

தொடர்புடையவை:  புத்தகம் ! கவிஞர் இரா .இரவி !

      குளத்தின் மீது அமர்ந்திருக்கும் கொக்குகளை வெள்ளை மலர்களாக பார்த்த கவிப்பார்வை நன்று. பறக்கும் வெள்ளை மலர்கள் கொக்கு என உணர்த்திய கற்பனை நன்று.

      சேமிப்பின்
      சிகரம்
      தேனீ!

      சுறுசுறுப்பின் அடையாளம் தேனீ. சுறுசுறுப்பான மனிதர்களையும் தேனீ என்று அழைப்பது வழக்கம். அவ்வகையில் ஓய்வின்றி உழைக்கும் நேரம் தேனீ சேமிப்பின் சிகரம் என்கிறார். தேனீ சேர்த்து வைக்கும் தேனை ஒரு நாள் கூட்டில் கை வைத்து தேனை அபகரித்து விடுகிறான் மனிதன்.

      அடிமையானது
      வாக்குரிமை
      பணபலம்!

      வாக்குகளை பணம் கொடுத்து வாங்கி விடும் தைரியம் அரசியல்வாதிகளுக்கு வந்துவிட்டது.  அதனால் தான் வாக்காளனை மதிப்பது இல்லை. பணம் கொடுத்து வாங்குவதால் வாக்காளனை அடிமையாகவே நினைக்கும் மனப்பக்குவம் வந்து விடுகிறது அரசியல்வாதிகளுக்கு. வாக்களிக்க பணம் பெறும் அவலத்திற்கு முடிவு கட்டினால் தான் உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாட்டின் மதிப்பு காப்பாற்றப்படும்.

      சாதிக்கப் பிறந்த மனிதன்
      சாதிக்காகப் போராடுகிறான்
      சாதீய வெறி!

      சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மோதி வீழ்வது மடமை. சாதிக்க வேண்டியவர்கள் சாதிக்காக சண்டையிடுவது முறையோ, தகுமோ என முறையிடுகின்றார். சாதிவெறி தீய வெறி என்கிறார் உண்மை தான்.

      எழுத்தாளனின் உணர்வில்
      உதிர்ந்த முத்துக்கள்
      புத்தகம்!

      முத்தான கருத்துக்கள் யாவும் எழுத்தாளனின் உள்ளத்து உணர்வுகள் புத்தகம் என்பது உதிர்ந்த முத்துக்கள் என்று சொன்ன உவமை நன்று.

      ஆடம்பர பொருட்கள்
      பேராசையில் மனம்
      தள்ளாடும் குடும்பம்!

      மாதாந்திரத் தவணையில் தருகிறார்கள் என்று கடனில் அலைபேசி உள்பட பல ஆடம்பரப் பொருள்களை கடனில் வாங்கிவிட்டு பின்னர் மாதாந்திர தவணை கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்கள் ஏராளம் உண்டு.  பேராசை பெரு நட்டம் என்ற பொன்மொழிக்கு ஏற்ப ஆசைகளைக் குறைத்து ஆடம்பரம் தவிர்த்தால் அல்லல்படாமல் வாழலாம் என்பதை ஹைக்கூவின் மூலம் உணர்த்திய கவிஞர் நல. ஞானபண்டிதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  மின்னல் கலைக்கூடம் பொருத்தமான புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளது.  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *