மன்னர் மன்னன் மறைவு !

வைகோ இரங்கல்

புட்சிக் கவிஞர் பாரதிதாசனார் அவர்களின் பாசப் புதல்வரும், தமிழ் அறிஞருமான மன்னர் மன்னன் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு, ஆறாத துயரம் கொண்டேன்.

கவிஞர் மன்னர் மன்னன் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலைக்காக திராவிடர் இயக்கம் நடத்திய செயல்பாடுகளிலும் இணைந்து தொடர்ந்து குரல் கொடுத்தவர்; போராடியவர்.

புரட்சிக் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கருப்புக் குயிலின் நெருப்புக் குரல் என்ற அரிய நூலினை வெளியிட்டு, மகன் தந்தைக்கு ஆற்ற வேண்டிய கடமையினை மிகச் சிறப்பாகச் செய்தவர் மன்னர் மன்னன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய நூல்களை எழுதி, தமிழ்மொழியின் சிறப்புகளை தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை மேதினிக்கு எடுத்து விளக்கிய சீர்மிகு எழுத்தாளர்.

புதுச்சேரி, சென்னை வானொலி நிலையங்களில், ஆசிரியராகப் பணி ஆற்றினார். தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி ஆகிய விருதுகளால் சிறப்பிக்கப்பட்டார்.

கோபதி என்ற பெயருடைய மன்னர் மன்னன் 14 வயது இளைஞராக இருந்தபோது, கவிஞர் தமிழ்ஒளி அவர்களுடன் இணைந்து நடத்திய ‘முரசு’ இதழில் மொழி உணர்வும், இன உணர்வும் ஊட்டக்கூடிய கட்டுரைகளைத் தீட்டினார். அதற்கு அரசு நெருக்கடி தந்து, கைது நடவடிக்கை வரை வந்தவுடன், மன்னர் மன்னன் என்ற புனைப் பெயரில் இவர் தொடர்ந்து எழுதினார். அந்தப் பெயரே அவருக்கு நிலைத்து நின்று நெடிய புகழை அளித்துக்கொண்டு இருக்கின்றது.

கவிஞர் மன்னர் மன்னன் அவர்கள் என் மீது அளவற்ற அன்பு கொண்டவர். சென்னையிலும், புதுடெல்லியிலும் நான் இருந்தபோது இல்லம் தேடி வந்து மகிழ்ச்சியுடன் அளவளாவி பாசத்தை பரிமாறிக் கொண்ட இனிய பண்பாளர்.

அவரது மறைவிற்கு மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அவரது மறைவால் துயருற்று இருக்கக்கூடிய மன்னர் மன்னன் அவர்களின் அன்புச் செல்வங்களாக செல்வம், தென்னவன், பாரதி, அமுதவல்லி ஆகியோருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், தமிழ் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் அன்பான ஆறுதலை இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
‘தாயகம்’
சென்னை -8
07.07.2020

Share this
தொடர்புடையவை:  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *