மன வானில் உலா வரும் ஹைக்கூ …

வாழ்த்துரை – அஜித்குமார்

ஒரு கவிஞன் என்பவன் தன்னுடைய வரிகளை வலிகளாக மாற்றம் செய்ய வேண்டும். கவிதை மூலம் கண்ணீரைச் சிந்த வேண்டும். கற்பனையைக் காட்சிப்படுத்த வேண்டும். மொத்தமாய் அவன் சமூக நதியில் இரை தேட வேண்டும்.

அண்ணன் இரா. இரவி, கவிதையில் சமூக மேம்பாட்டை அள்ளித் தெளிப்பவர் என்பது தான் நான் அறிந்த ஒன்று. ஒரு சமூகத்தின் உயர்வை, சீர்கேட்டை, விழிப்புணர்வை தனக்கே உரிய நடையில் உயர்த்திப்பிடித்து வாழும் அண்ணன் இரா. இரவி நிச்சயம் ஒரு நாள் சமூகத்தால் கொண்டாடுபவர் என்பது என் நழுவாத நம்பிக்கை.

அண்ணன் எழுதிய “ஹைக்கூ உலா” என்னும் நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. உண்மையில் படிக்க படிக்க கவிதைகள் அனைத்தும் எனக்குள் சிறகு முளைத்து உலா வரத் தொடங்கிவிட்டன. நூலை நுட்பமாக படைத்தற்கு எனது சார்பாக வாழ்த்துக்களையும் என் அன்பில் பூத்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிதை நூலைப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எழுதியிருந்த ஹைக்கூ என் விரல் பிடித்து உள்ளே நுழைத்துச் சென்றது.

“பிறருக்கு வழங்கினால்
      நமக்கு வளரும்
      தன்னம்பிக்கை”

என்னும் வரிகளுக்கு ஏற்ப நூலின் அனைத்துப் பகுதிகளையும் நம்பிக்கை வரிகளை வாரியெடுத்துக் கொடுத்திருக்கிறார்.

      இவர் தமிழுக்காக குரல் கொடுப்பதற்கு, எனது சார்பாக ஒரு கோடி நன்றியை உரிதாக்கிக் கொள்கிறேன்.

      “தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி
      பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று
      பிதற்றுகின்றனர் கோமாளிகள்”

இதைவிட, வேறு யாரால் தெளிவாக புரிய வைக்க முடியும். தனது மொழிக்காக ஒலியெழுப்பும் இவரின் கவிதையை வணங்குகிறேன்.

      மரங்கள், பறவைகள், மலர்கள், இயற்கை என இவற்றிற்கு ஆதரவாகவும், அவற்றின் வேதனைகளையும் பதிவு செய்துகொள்ள கவிதைகள் தனிக் கவனத்தைப் பெறுகின்றன.

      “பாதுகாப்பு என்றால்
      பாரத்திற்கு வருந்தவில்லை
      ஆமை”

      “போராடியதால்
      கம்பளிப் பூச்சி
      வண்ணத்துப் பூச்சி”

இந்த கவிதைகள் மூலம்

  1. அந்த உயிரினத்தின் குணத்தையும், 2. அது சொல்லும் பாடங் – களையும் நுட்பமாக உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளது. கவனத்தை ஈர்த்து கைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன்.

காதல், என்னவள், முத்தம் – இந்த மூன்று தலைப்புகளில் வரிசையாய் நிற்கும் கவிதைகள் உள்ளத்தின் கதவு திறந்து ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சுகின்றன. அவை தான் கவிதை என்பதை மறந்து உணர்ச்சிகளை வாரி வழங்குகின்றன.

“அவிழ்ந்து விட்ட கூந்தலில்
      முடிந்து விட்டாள்
      மனதை!”

“இதழ்கள் எழுதும்
      இனிய கவிதை
      முத்தம்!”

தொடர்புடையவை:  விருப்புக் குறியீடுகளில்
விளைந்து நிற்கும் சொற்கள்!

இவை சான்றுகளாக நான் குறிப்பிட்டு உள்ளேன். எனது முடிவை ஹைக்கூவாக தர விரும்புகிறேன்.

      வட்ட நிலா
      நெஞ்சினில் நீங்காமல் இருக்கும்
      ஹைக்கூ உலா

அண்ணன் இரா. இரவி அவருடைய தூய்மையான எண்ணங்களுக்கு ஏற்ப சிகரத்தின் உச்சியைத் தொட்டு சமூகத்தைக் காக்க வேண்டும் என மனதில் பூத்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வானதி பதிப்பகம் வெளியீடு

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *