உயர்தர வளர்ச்சியை நோக்கியப் பாதையில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்!


பொதுவாக ஒரு பேரிடர் வரும் போது அதில் இருந்து எவ்வளவு விரைவாக மீள முடியுமா அவ்வளவு விரைவாக மீட்பு நடவடிக்கைகளை எடுத்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பது என்பது அரசின் கடமையாக இருக்கிறது. ஆனால் இந்த கொரோனா விசயத்தில் உலக நாடுகள் அனைத்தும் எவ்வளவு முயன்றும் 8 மாதங்கள் கடந்த பின்னும் கூட இன்னும் இன்னல்களில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியபாடு இல்லை. மக்களின் உயர் பாதுகாப்பு கருதி பல்வேறு கட்டுபாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் மக்களின் உயிர் பாதுகாப்புக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை நாட்டின் பொருளாதார நிலையைக் காப்பதிலும் கொடுக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கங்களுக்கு இருக்கிறது.

அந்த வகையில் சீன அரசு கோவிட்-19 நோய் தொற்றில் இருந்து தன் நாட்டு மக்களை விரைவாக காத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளிலும் தற்போது துரிதமாக ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா போன்ற சில நாடுகள் சீனாவின் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் கரோனா தொற்று நோய் பரவலை காரணமாக வைத்து அரசியல் செய்து வரும் நிலையில் சீனா உள்நாட்டு சந்தையையும் வெளிநாட்டு வர்த்தக தொடர்பையும் வலுப்படுத்தி வருகிறது.
கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உலகளாவிய வர்த்தகத்தின் அளவு 18.5 சதவிகிதம் குறையும் என்று உலக வர்த்தக அமைப்பு (WTO) மதிப்பீடு செய்துள்ளது.

இந்நிலையில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் சமீபத்திய மாதங்களில் சந்தை எதிர்பார்ப்புகளை தாண்டியுள்ளது. மொத்த வெளிநாட்டு வர்த்தக அளவு ஜூலை மாதத்தில் ஆண்டுக்கு 6.5 சதவீதம் உயர்ந்தது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முறையே 10.4 சதவீதம் மற்றும் 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகளாவிய வர்த்தக சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் சீனாவின் சர்வதேச வர்த்தகம் பெரிதாக வளர்ந்து வருகிறது, இது வர்த்தகத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதோடு கடுமையான இந்தசூழலை எதிர்கொள்ளும் திறனை அளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


முதல் நான்கு மாதங்களில், உலக சந்தையில் சீனாவின் ஏற்றுமதியின் பங்கு 0.1 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால், பங்கு சதவீதம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் கரோனா பரவல் இவ்வளவு எளிமையாக எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டது என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கும் நிலையில் தற்போது பொருளாதாரத்திலும் விரைவாக மீண்டு எழும் சீனாவைப் பார்த்து பல நாடுகள் ஆச்சரியப்படுகின்றன என்று சொன்னால் மிகையில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீனா நிறுவனங்களுக்கான சேவைகளை மேம்படுத்தியுள்ளது மற்றும் ஏற்றுமதி வரி தள்ளுபடியை அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் மீதான நிதி அழுத்தத்தை போக்க இந்த ஆண்டின் முதல் பாதியில் சீனா 812.8 பில்லியன் யுவான் (சுமார் 116.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புள்ள ஏற்றுமதி வரி தள்ளுபடி செய்துள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையவை:  தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்


இதற்கிடையில், வெளிநாட்டு வர்த்தக வணிகங்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்கள், புதுமையான திட்டங்களுக்கு அதிக செலவு செய்து வருகின்றன, அது அந்த துறையின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
ஆண்டின் பிற்பகுதியில், ஜிஏசி அனுமதி நடைமுறைகளை மேலும் எளிதாக்கவும், துறைமுகங்களில் வணிகச் சூழலை மேம்படுத்த தளவாட செலவீனங்களை குறைக்க்கவும் திட்டமிட்டுள்ளது.

தெற்கு தீவு மாகாணமான ஹைனானை உயர் மட்ட சுதந்திர வர்த்தக துறைமுகமாக கட்டியெழுப்புவதற்கும், நாட்டின் விரிவான பிணைக்கப்பட்ட மண்டலங்களில் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டை உறுதிப்படுத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கவும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் எல்லை தாண்டிய மின்னணு வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் உயர்தர வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும் போது நிச்சயம் சீனா பெரும் வளர்ச்சி அடைந்து உலகிற்கு முன்னுதாரணமாக திகழும் என்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *