காவல் தெய்வங்களுக்குச் சமர்ப்பணம்

உன்னதக் கருவில் தோன்றி
உரமுடை நெஞ்சம் கொண்டு
தன்சுகம் நினையா தென்றும்
தாயகம் காத்து நின்றாய்.
சன்னிதி இல்லா தெய்வம்
சத்தியம் உணர்வில் பெற்றாய்
தேன்மலர் தேடா வண்டாய்
திருவுளம் உறுதி கொண்டாய்

தன்னுயிர் பணயம் வைத்து
தரணியைக் காக்க வந்தாய்
தேன்கனி சுவைத்தல் இன்றி
தேனிசை இனிமை இன்றி.
அன்புடை மனைவி மக்கள்
ஆசையாய் எண்ணி எண்ணி
என்றுதான் காண்பேன் என்று
ஏங்கிடும் உள்ளம் அன்றோ?

மன்றிலே நடனம் ஆடும்
மன்னவன் காத்தல் போல,
நின்பணி உயர்ந்த தன்றோ!
நிகரென நில்லா தொன்றும்!
பின்பனி காலம் எல்லாம்
பெருந்துயர் கண்ட போதும்
தன்பணி ஒன்றே கண்ணாய்
திண்மனம் கொண்டாய் நீயும்!

கண்மலர் துஞ்சா தாயாய்,
கருத்துடன் காவல் செய்தாய்!
உன்னிழல் தன்னில் நாங்கள்
உறுதுயர் ஏது மின்றி
நன்கலை பயின்றோம் நித்தம்i
நாயகன் உன்னால் இங்கே!
நன்றிகள் சொல்லி உந்தன்
நல்மனம் வாழ்த்தி நின்றோம்

சு.வி.லட்சுமி

Share this
தொடர்புடையவை:  கவிதைக் கீற்றுகள் !

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *