சகுந்தலா தேவி

திரை விமர்சனம்

திருமணம் வாயிலாகத் தன் தனித் தன்மையைப் பெண்கள் இழந்து விடக் கூடாது ; தன் குறிக்கோளை அடைய இதன் பொருட்டு சமரசம் செய்வதை விரும்பாத பெண்ணாக அக் காலத்திலேயே பெரும் புரட்சி செய்த பெண்மணியின் வரலாற்றை வெளிப்படுத்தும் படமாக சகுந்தலாதேவி இருக்கிறாள்.


தன் வாழ்நாளில் பெண் அடக்குமுறை, குடும்ப அமைப்பு முறை, ஆண் பெண் சமத்துவம் என்ற பல இன்றைக்கும் விவாதப் பொருளாக இருக்கின்றபோது அக் காலத்திலேயே அவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை செய்த பெண்மணி சகுந்தலாதேவி.
அவர் கடந்து வந்த பாதையை வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அனு மேனன். நடிகை வித்யா பாலன், சானியா மல்ஹோத்ரா ஆகியோரின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ‘சகுந்தலா தேவி’.
கணித மேதை என்றும் மனிதக் கணினி . என்றும் அழைக்கப் பட்ட சகுந்தலாதேவியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.


வாழ்ந்த கதாபாத்திரங்களில் நடிப்பது என்பது சற்றே சவாலான விஷயம். ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாக நடித்தவர் வித்யாபாலன்.
சகுந்தலா தேவியைப் பற்றித் தெரிந்த அளவு அவரது வாழ்க்கை பலருக்கும் தெரியாத நிலையில் அவர் எப்படிப் பேசுவார், எப்படி
நடப்பார் எப்படி சிரிப்பார் என்பதை எல்லாம் அறியாத நமக்கு சகுந்தலாதேவியை அடையாளப் படுத்தும் பணியில் வித்யா வெற்றி பெற்றார் என்றே சொல்லலாம். சற்று உடல் மொழியில் மிகைப்படுத்தி இருக்கிறாரோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. இருப்பினும் இதற்காக அவர் ஹோம் வொர்க் எடுத்திருப்பார் என்பதால் அக் குற்றச் சாட்டு தன் வலுவிழக்கவும் கூடும் என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.


படத்தின் துவக்கமே சகுந்தலாவின் மகள் அனு தன் தாய் மீது வழக்கினைத் தொடுக்கிறார் . பிரபல ஆளுமையின் மீது வழக்கு அதுவும் சொந்த மகள் என்னும் போது எதிர்பார்ப்பு கூடுகிறது.
வெற்றிகளுக்குப் பின்னால் ஓடும் தன் அம்மாவின் மனநிலையைத் தான் தாயாகிய பின்னர்தான் அனுபமா புரிந்துகொள்கிறார். 


புகழ், பெண் மீது பாசம் என்ற இரு நிலைகளில் சகுந்தலா தவிக்கும் காட்சியில் வித்யாவின் நடிப்பு பளிச்.
தன் வாழ்வில் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பெண்கள் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்ற செய்தி படத்தின் அடிநாதமாக உள்ளது. தங்கள் கனவுகளை அடைய சோதனைகள், சறுக்கல்கள் இவற்றைக் கடந்து முன்னேற வேண்டும் என்பதையும் படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
தன் தாயை வெறுக்கும் சகுந்தலாவிற்கு அதே நிலை தன் மகள் மூலமாகவே கிடைக்கும்போது சுய பரிசோதனை செய்து கொள்ளும் நிலையில் வித்யாவின் நடிப்பு அசர வைக்கிறது.

தொடர்புடையவை:  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைய இறைவனை வேண்டுகிறேன்: குஷ்பு டுவிட்

என்னுடைய பள்ளிப் பருவத்தில் அதாவது நான் ஆறாவது படிக்கும்போது எங்கள் பள்ளிக்கு வந்த கணித மேதை சகுந்தலா தேவியின் நினைவு ஓர் ஓரத்தில் இருந்ததை நான் எண்ணிப் பார்க்கிறேன். இன்று திரையில் அப் பாத்திரமாக வித்யா ஏற்று உயிரூட்டிருக்கிறார் என்றே சொல்லலாம்

– முனைவர் ஜெயந்தி நாகராஜன்
ஊரப்பாக்கம்
.

Share this

4 Comments

 • SARADHA K. SANTOSH

  மிகச் சிறப்பான திரைவிமர்சனம்..
  நானும் இத்திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.. தங்களுடைய எழுத்து நடை அருமை.. வாழ்த்துகள் எழுத்தாளர் ஜெயந்தி நாகராஜன் அவர்களே

 • H.Rengaparvathi

  மிக அருமையான நேர்மறையான விமர்சனம்,ஆம் பெண் என்பவள் பல விதங்களில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு பிறவி,ஆனால் அதில் தன் தனித்துவத்தை எந்நாளும் இழக்கக்கூடாது, என்பதற்கு
  சகுந்தலா தேவி உதாரணம் என்பதை உங்களின் எழுத்து நடையால் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள்,வாழ்த்துகள் எழுத்தாளர் ஜெயந்தி மா.

 • முனைவர் ஸ்ரீ ரோகிணி

  சிறப்பான விமர்சனம்.. அருமையான எழுத்து நடை💐 வாழ்த்துகள் 🥰

  அன்புடன்
  முனைவர் ஸ்ரீ ரோகிணி
  துபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *