சிந்தனை செய் மனமே

சலசல சத்தம் கேட்டால்,
சடுதியில் மறைந்து கொள்ள,
சிலவளை துளைகள் உண்டு!
‌‌. சிறுமுயல் நாங்கள் வாழ,
நிலத்தடி குளுமை வீட்டில்,
நிலமகள் காவல் நிற்க,
பலவகை கனிகாய்த் தேடி
பதுஙகியே பாய்வோம் நாங்கள்!!

சுவைமிகு கேரட் உண்ண,
சிந்தையில் ஆசை தூண்ட,
அவைகளைத் தேடித் தேடி,
‌அழகியத் தோட்டம் கண்டேன்!
எவைஎவை கேரட் என்று,
எளிதிலே கண்டு கொண்டேன்!!
துவைக்கிற கல்லின் பின்னே,
துணிந்துநான் பதுங்கி நின்றேன்!!

பட்டென செடியைப் பற்றி,
பறித்துநான் உண்ணும் போது,
சட்டென வேட்டை நாயும்
சத்தமாய் குரைத்து வைக்க,
கட்டிய புடவை ஆட
கடுகியே வந்தாள் ஆத்தா!
சிட்டெனப் புதரில் தாவி,
சுத்தமாய் அடங்கிப் போனேன்!!

நல்லதோர் முயலும் தானாய்,
‌நமக்கென வந்த தென்று,
மெல்லவே என்னைக் கவ்வ,
முடுக்கினாள் இல்ல ராணி!
வில்லவன் ராமன் பாணம்,
விரைந்திடல் போல என்னைக்,
கொல்வெறி நாயும் என்மேல்,
குதித்திட முனைந்த தென்ன?

கப்பிய பசியைப் போக்க,
கருதியே வந்தேன் நானே!
இப்படி இங்கோர் துன்பம்,
இருப்பதை எண்ணி வில்லை!
எப்படி தப்பி ஓடி,
என்வளை சேரு வேனோ?
முப்புறம் சுற்றிப் பார்த்து
முந்தினேன் காற்றின் வேகம்!!

முன்பின் ஆரா யாமல்
முழுவதும் தெரிந்தி டாமல்,
தன்மனம் போன போக்கில்,
தான்நடை பயில லாமோ?
என்வழி புத்தி சொன்னேன்!
எவ்வழி நல்ல தென்று!
பொன்மொழி கண்டு வாழ்வில்,
புதுநெறி பற்றி வாழ்க!!

சு.வி.லட்சுமி

Share this
தொடர்புடையவை:  மலர்களின் சதுரங்க விதிகள்

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *