சுதந்தரக் காற்று

விடுதலை எழுவதற்கே

விடுதலைப்போரின் முதல் மார்க்சியவாதி

பன்னிரு வயதில் ஜாலியன் வாலாபாக் ரத்த சரித்திரம் சுமந்தவன்

விடுதலை வேண்டும் திருமணம் வேண்டாமென்ற தியாக மறுவுரு…

மீண்டும் பிறப்போம் எண்ணற்ற உருவில் என தூக்குமேடை சென்ற இருபத்தி நான்கு வயது பாலகன் எங்கள் பகத்சிங்….

இறப்பிலும் விடுதலை வேட்கை இயங்க செய்தவன்
சைமனே போ என போராடி எமனோடு போன லாலாலஜபதிராய்…

அடி உதை படுவேன் அன்னியர் கொடி பணிய மாட்டேனென்ற சுகதேவ்

குடி நலன் காக்க சிறைப்புறம் இருபதாண்டு காத்த சாம்பல்பூர் இளவரசர்

கணவரை நாடு கடத்திய பின்னும் போராடிய பேகம்

கப்பல் விடும் நிதி இருந்தும் விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல் வஉசி

ரத்தம் கரைந்து ஓடியபோதும் சித்தம் கலையாமல் கொடி காப்பதில் கொள்கை வகுத்த திருப்பூர் குமரன்

இவர்கள் இன்னுயிர் ஈந்தது எதற்காக?

இனிப்புகள் வழங்கி இருண்ட வரலாறு பேசி இழிந்து திரிவதற்கா?

இல்லை நிலைத்த பாரதம் செழித்து கொழித்து நிமிர்ந்து எழுவதற்கா?

வெல்க இந்தியா…

மா.வேல்முருகன்…தேனீ, திருத்தங்கல்


உண்மையினைச் சொல்லுவோம்..

அதையுமே

உரக்கச் சொல்லிடுவோம்…

அடிமைப்பட்டிருந்த
இந்தியர்களை வாழ்வித்திட

ஆங்கிலேயர்களுடன்அன்புடனே
அகிம்சையாகவுமே
போராடியே…

இன்னுயிரைப் பணயம் வைத்து வாங்கியது தானே
சுதந்திரக்
காற்று..

சண்டை சச்சரவின்றி
கால்கடுக்கக் காத்திருந்து

வரிசையில் நின்று வாங்கியதா இந்த சுதந்திரம்…

சமத்துவமும் சகோதரத்துவமும்
எங்கே போனதோ…
குடியரசில் சிறந்த உரிமை வாக்குரிமை
அதையே விற்கும் நிலையில் மக்கள் இதுதானா நாட்டுரிமை?

குடியிருக்க வீடுமின்றி
கும்பிட கோவிலுமின்றி..

மெய்ஞானத்தைத் தாண்டிய
விஞ்ஞான வளர்ச்சிதானோ…

கண்ணீராலும் செந்நீராலும் பெற்றெடுத்த எம் சுதந்திரமே…

நீதிக்கும் போராட்டம்
நீருக்கும் போராட்டம்
சுதந்திர தேசமென்று
தோள்கொட்டி ஓய்ந்திட்டோம்….
வானம் பெய்யும் மழை நீர் கூட ஆறுகள் மூலம் அடைந்திட வழி இல்லை

வரியை மட்டும் வாங்கிக் கொள்பவர்கள்
தண்ணீர் கிடைக்க வழியை செய்யவில்லை

வேற்றுமையில் ஒற்றுமையை போற்றுவதே நம் பெருமை…

இதைச் சொல்லிச் சொல்லி தான் நம்மை பிரித்து வைத்தார்கள்

எல்லோரும் சுற்றமென நாம் ஒன்றுபட்டால் உயர்ந்திடுமே நம்நாட்டின் நிலைமை….

அயலவரை நம்பாமல் தற்சார்பில் முன்னேறு

இந்தியாவின் பாதுகாப்பு
இது ஒன்றே சுதந்திரததின் உயிர்த்துடிப்பு.

மணிமொழிசெல்வன் .. பெருங்குளம் …


சுதந்திரம்

ஆழியை நீந்தி இங்கே வந்தது
வாணிபம் செய்யும் வஞ்சகர் கூட்டம்

ஆங்கிலம் பேசும் ஆண்கிழ நாடு

வார்த்தையில் நஞ்சை வாகாய் செலுத்தி
வாணிபம் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்தான்

அடிமை ஆனது அறியாமல் நாமும்

அவன்மொழிக் கெல்லாம் தலைகளை யசைத்தோம்

வளங்கள் சுரண்டிய வெள்ளையன் அட்டைகள்
குருதி குடிக்க விழித்துக் கொண்டோம்

அடிமை இல்லை என்பதை உணர்த்த
வேலூர் கோட்டையில் சிப்பாய் கலகம்

போரின் வேகம் கண்டு நடுங்கி விழிகள் பிதுங்கி
சில விலக்குகள் தந்தான்

திசைக்கு ஒன்றாய் தலைவர் தோன்ற

எழுச்சி பெற்றது விடுதலை இயக்கம்

அண்ணல் என்னும் அகிம்சை தலைவன்
அறப்போர் என்னும் ஆயுதம் கொண்டார்

ஆயுதம் கொண்ட மன்னர் போரை
தோட்டா கொண்டு துளைத்து எடுத்தான்

அண்ணல் செய்யும் அஹிம்சைப் போரில்
அமைதி தவிர்த்து ஆயுதம் இல்லை

அதனால் ஆண்கிழன் சீற்றம் கொண்டு
வாங்கிய உயிர்கள் கொஞ்சமா? நஞ்சமா?

அன்னியத் துணியை நெப்பில் எரித்து
ஒத்துழை யாமை உணர்வு புரட்சி

சுங்கம் தவிர்க்க தண்டி புரட்சி

நமக்காய் பொருளை நாமே செய்தோம்

அறப்போர் வெற்றி மெல்ல நெருங்க
அணியை திரட்டி ராணுவம் செய்தார் நேதாஜி

தூக்குக் கயிற்றிலும் துவளாத
பகத்சிங்

தோல்விமேல் தோல்வி வெள்ளைத் தோலுக்கு

மிரண்டு போயவன் சுதந்திரம் தந்தான்

ஆங்கிலம் பேசும் அறிவிலி மாந்தன்

முன்னோர் தியாகம்
இன்றைய சுதந்திரம்

நன்றி சொல்வோம்
நாளும் பணிவோம்
தேசத்தை காத்தவர் தியாகம் போற்றுவோம்

முத்துவேல் இராகி, கல்குறிச்சி, விருதுநகர்


இளைய பாரதமே விழித்தெழுக!!

இரண்டு நூற்றாண்டுகள் அடிமைசெய்து – அன்னியர் நம்மை ஆட்டுவித்தார்!

வணிக வளர்ச்சிக்கு திட்டமிட்டு ஆங்கிலேயர் நம்மை ஆக்கிரமித்தார்!

கிழக்கிந்திய கம்பெனிக்கெதிராய் கிளர்ந்தெழுந்தன பல உரிமை குரல்கள்

பற்பல கலகங்கள் கலவரங்கள்
போராட்டங்கள் புரட்சிகள் வெடித்தது!

உதித்தது இங்கே விடுதலைப்போர்!

பரங்கித்தலைகள் வெளியேறிடவும் பாரததேசம் விடுதலை பெறவும்

பலலட்சம்பேர் தடியடி பட்டு சிறைசென்று ரத்தம் சிந்தியும் உயிர் நீத்தார்!

இம்மென்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் சொல்லவொன்னா துயரங்கள் சொல்லி மாளாது உயிர்ப்பலிகள்!

அகிம்சையென்னும் அறவழியில் ஆயுதமில்லாப் போராட்டம்

அண்ணல் காந்தியார் அறைகூவல் அனைவரும் திரண்டார் ஓரணியில்……

தினம் தினம் புதுப்புது போராட்டம் திகைத்துப் போனார் அன்னியரும்

கிளர்ச்சியும் எழுச்சியும் ஒருங்கிணைந்தே சுதந்திர கீதம் இசைத்திட வழிவகுத்தார்!

சும்மா வரவில்லை சுதந்திரமும் பலர் இன்னுயிர் ஈந்து ஈட்டியதாம்

பெற்ற சுதந்திரம் பெருமையறியா பேதையாய் நாளும் வாழ்கின்றோம்!

இளைஞர் படையே விழித்தெழுக !

இந்தியாவை புணர் அமைத்திடுவோமா! பாரதி விரும்பிய பாரதத்தை பகுத்தறிவோடு படைத்திடுவோம்!!

கவிஞர் தெ.வி.விஐயகுமார், கோயம்புத்தூர்


விடுதலை போராட்டம்!..

சின்ன தீப்பொறி

வாணிபம் என்ற பெயரில்

படையெடுத்து வந்தது கப்பலில்….

இந்தியா என்ற வீட்டிற்குள் விட்டோம்……

பெரும் தீம்பிழம்பை எழுப்பியது…

தீ விபத்தை அணைத்து வீட்டை காப்பாற்றுவதற்குள்

ஏற்பட்ட உயிர்சேதம் ஏராளம்…

நிலையில்லாத இவ்வுலகில்
அடிமைத் தனமும் நிரந்தரம் இல்லை…

அஞ்சாது அடுத்த அடி வைத்திட அகிலத்தில் அமைதி நிலவியது…

என்று தணியும் எனத் தெரியாது

எத்தனை இழப்புகள்
எத்தனை தியாகங்கள்

எதிர்கால விடிவெள்ளிக்காக…

விலைமதிப்பற்ற சுதந்திர உணர்வுக்காக

விடுதலையை காப்பதே நம் கடமை

போராட்டத்தின் முற்றுப்புள்ளியல்ல சுதந்திரம்…..

சுதந்திர உணர்வு தோன்றும் போதெல்லாம்
போராட்டங்கள் இன்றும்..

அதற்காகப் போராடியவர்களையும்
இன்றும் அதை காக்க போராடுபவர்களையும்

நாம் கொடிகளை ஏற்றி
மலர்களை தூவி பரிசளிப்போம்..

பூக்களைக் கொண்ட நந்தவனங்களே

கை கோர்த்திடுங்கள்..

மூவண்ண முழக்கம் எழுப்புவோம்…

வணக்கம் இந்தியா!..
வளர்க இந்தியா!..
வெல்க இந்தியா !..

– பொ.சியாமளா,பொள்ளாச்சி


விடுதலைப் போராட்டம்

வெள்ளையனிடமிருந்து
வெகு எளிதில்
பெறப்பட்டதா நமது இந்திய விடுதலை?

துன்பப்பட்டு,வேதனைப்பட்டு
அடிபட்டு உதைப்பட்டு

அனுதினமும் இரத்தம் சிந்தி தத்தம் வீடிழந்து
சொந்தம் இழந்து பந்தமனைத்தையுமிழந்து

தன்னையே தம்
இந்தியத் தாய்த்திருநாட்டிற்காக இழந்து

1947 ஆகஸ்டு 15-ஆம் நாள் காலை சூரியன் எழுந்தபோது
கரங்களை நீட்டி நம் கண்ணீரைத் துடைத்தான்..

நம் இனிய இந்தியச் சுதந்திரம்!

எழுபத்தி நான்காவது முறையாக
கொண்டாடுகிறோம்

முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்ற
டாக்டர்.பாபு இராஜேந்திரப் பிரசாத் செய்த மகத்தான சேவை என்னவென்று தெரியுமா?

காசநோய் வந்தும் உடல்நலம் நலிந்தும் கவலைப்படாமல்
வெள்ளையனே வெளியேறு என்று குரல் கொடுத்தார்… சிறை சென்றார்!

இவரைப் போன்று பாரதியார்,
அரவிந்தர்,
காந்திஜி சிறைப்பட்டு போராடினர்

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு
திருப்பூர் குமரன் போன்றோர்
உயிர் விட்டு போராடினர்

தத்தம் வழியில்
வாழ்வையும் உயிரையும் விலையாய் தந்து
பெற்றுத் தந்தார்கள் விடுதலை!

விடுதலை வீரரை உள்ளத்தால் போற்றுவோம்
விடுதலை தேசத்தை உயிராய் போற்றுவோம்

வழக்குரைஞர்.க.ஜெகதீஸ்வரன் பெரம்பூர், சென்னை-


விடுதலை பெற்றோமா?

இரக்கமிலா
வெள்ளை பரங்கியை
துரத்தி பிடித்த
தூய விடுதலை
இரவிலே வாங்கினோம்

உரமேறிய உள்ளம்
கரத்தில்
மூவண்ணக்கொடி
மண்டை உடைந்தே
குருதி கொப்பளிக்க
மாண்பை இழக்காத
திருப்பூர்க் குமரன்

தங்கநிற அங்கம்
நோயால் நொந்தே
வந்த சுப்பிரமணிய
சிவா
கண்ட
வ.உ.சி கதறிட
நெருங்க விடவில்லை

முதுகில் உதைத்த
முட்டாளை மன்னித்து
முழுஆடை அரையாக
அணிந்தே அயராதே
உழைத்த அண்ணல்
காந்தி அடிகள்

வழக்க றிஞராய்
வளமான செல்வம்
கப்பல் வாங்கி
சொத்தை இழந்த
வஉசிதம்பரனார்

கடைசியில் பட்ட
துயர் கதை
வரலாறு அறியும்

சுதந்திரம் எனது
பிறப்புரிமை என்ற
பால கங்காதர திலகர்

தொடர்புடையவை:  கொரோனா வைரசு !

பயமறியா வேலுநாச்சி
கட்டபொம்மன்
பூலித்தேவன்
தீரன்சின்னமலை
வீரர்களின் எண்ணிக்கை
ஏராளம் ஏராளம்

கைகால் இழந்து
மானம் இழந்து
பொய்யர் சிறையில்
உயிரையும் விட்டே
பெற்ற சுதந்திரமிது…

பேணிக் காத்தோமா?

உற்ற மொழியைக்

கூடகாக்க
முயற்சியில்லை

நாடும் மொழியும்
நமதிரு கண்ணே

நம்கையால்
நம்கண்ணை
நலிவுறச் செய்தல்
கண்ட பின்னே

சிலிர்த் தெழவேண்
டாமோ? செயல்படுவீர்…

சோம்பிக் கிடப்பவரே
சோர்ந்து விழுந்தவரே
சும்மா இருப்பவரே
சுதந்திரத்திருநாள் என்பது விடுமுறை தினம்அல்ல
விடுதலை தினம்

குடந்தை மாலாமதிவாணன்


சுதந்திர சுவாசம்

உதிரத்தின் முத்துக்களை உதிராமல் கோர்த்து மாலையாக்குவோம்.

இந்தியத் தாயின் மடியில் சுகமாய் உறங்கும் இதயமுள்ள குழந்தைகள் நாம்.

வீரமுமுழக்கமிட்ட உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கைத்தியாகம் நாம் பெற்ற சுதந்திரம்.

கண்ணின் மணியென காப்போம் நம் பாரதத்தை
கழனிகள் செழிக்க கரையெடுப்போம்

கனிகள் கொடுக்கும் பாரதத்தாயை
பரந்த தேசமதில் பார்போற்றும்
பண்பாட்டைநிலைநாட்டி.

ஆற்றல் மிக்க அறிவுக்களஞ்சியங்கள்
அள்ளிக் கொடுக்கும் அன்னைத் தமிழில்
அழியாக்காப்பியம் படைப்போம்!

நாசாவில் மின்னும் தங்கத்தாரகைகள்
நம் நாட்டின் அறிவியல்
களஞ்சியங்கள்!

பண்டைத்தமிழகத்தின் விருந்தோம்பல் தலைசிறந்து விளங்கிடுவோம்!

அழியாஇலக்கணங்களும் கலைப்பொருட்களும்
சிப்பிக்குள் முத்துக்கள்
சிறகடித்து பறக்கும் தேச வீரர்கள்
அழிவதில்லை!
நம்முள் இன்னும் ஆற்றல் கொண்டு

எழுட்சியுடன் விண்வெளி பூக்களாய்
அழியா மணத்துடன் என்றும் நம் சுவாச முச்சில்
கலந்துள்ள ஆக்ஸிஜன்

நாம் பெற்ற சுதந்திரம்
சுகமான அனுபவங்கள்
சுதந்திர வரலாறு என்றும்
புத்துணர்ச்சியுடன் நேசிக்கவும் வாசிக்கவும்
படவேண்டும் !

ச.சுகந்தி., துறையூர்.


மீண்டும் வருமா?

போராடி வாங்கிய சுதந்திரம்
இன்று பொய்யாகி கிடக்கிறது

பெற்ற சுதந்திரம் நித்தமும் துடித்து
பிதற்றலில் அழுகின்றது

புலியிடம் தப்பி
ஓநாய் கூட்டத்தில் சிக்கியது

இதயம் இல்லா இயந்திரம் கூட்டம்
எம்மையும் ஆள்கிறது

அடிமையானதை அறிந்திட
மக்கள் கூட்டம்
அவதியில் வாழ்கிறது

ஆளுமை வர்க்கத்தின்
அடாவடி ஆட்டங்கள்
அன்றாடம் நடக்கிறது

எம் மக்களோ

சில்லறை ஆசைக்கு
சீரழியும் கூட்டங்களாய்
சிக்கிய கிடக்கிறது

இலவசம் என்றாலே எதையும் இறந்துவிடும் இழிநிலை கூட்டங்களாய்

எல்லாம் இங்கிருந்தும்
எதுவுமில்லா
வெறுமையாய்
வாழும் மானிட மந்தைகள்
என்பதால்

இருப்பதை காத்திடவே
மீண்டும் வேண்டுமோர் சுதந்திரப்போர்

லஞ்சம் பெறா ஊழியன் வேண்டும்

ஓட்டுக்கு பணம் வாங்க
வாக்காளன் வேண்டும்

அயோக்கிய மற்ற
அரசியல் வேண்டும்

ஆளுமை நிறைந்த
அதிகாரம் வேண்டும்

ஒற்றை முறையில் இலவச
கல்வியும் வேண்டும்

விவசாயம் காக்கும்
கொள்கைகள் வேண்டும்

வீட்டில் ஒருவருக்கு அரசு
வேலையும் வேண்டும்

சாதி மதம் இல்லா சமுதாயம் வேண்டும்

சமத்துவம் பார்க்கும் மனிதமும் வேண்டும்

பெண்ணியம் காக்கும்
பண்பினர் வேண்டும்

தனிமனித சுதந்திரம்
தடையின்றி வேண்டும்

என்றைக்கும் சரிந்திடா
பொருளாதாரமும் வேண்டும்

அடித்து சுருட்டி அயல்நாடு சென்றிடா
முதலாளிகள் வேண்டும்

ஓடிய கூட்டத்தை உடன் கொணர்ந்து தூக்கேற்ற வேண்டும்

உள்நாட்டு உற்பத்தி
தழைத்தோங்க வேண்டும்

பொதுநலம் கொண்ட
அமைச்சர்கள் வேண்டும்

அக்கறை கொள்ளும்
அதிகாரிகள் வேண்டும்

சட்டங்கள் காத்திடும்
காவலர் வேண்டும்

அறமும் அன்புமாய்
ஆசிரியர் வேண்டும்

ஆபத்துகள் இன்றிடா
சாலைகள் வேண்டும்

உண்மையை சொல்லிட யாவர்க்கும்
தைரியம் வேண்டும்

இதற்கெல்லாம் இன்றிங்கு
வேண்டும் வேண்டும்
மீண்டுமோர் சுதந்திரப்போர்

என்றே வேண்டிடும் உங்கள்

வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்


சுதந்திர தினம்

ஒற்றுமை குலைந்ததால் பெற்றதோர் தண்டனை
வேற்றுமை வளர்ந்ததால் கற்றதோர் படிப்பினை
உற்றாரை வெறுத்ததால் அடைந்ததோர் நிந்தனை
அடிமையாய் ஆனபின் வந்தது சிந்தனை.

அடிமையாய் வாழ்கின்ற வாழ்க்கையும் வாழ்க்கையா
அன்னியன் ஆள்கின்ற ஆட்சியும் தேவையா
நம் தேசம் ஆண்டிட நம்மவர் இல்லையா ஏன் இங்கு பரங்கியன் அனைவருக்கும் தொல்லையாய்.

கொதித்தே எழுந்தது தேசத்தின் தன்மானம்
துச்சமென மதித்தது அன்னியரை அதன் மானம்
நெஞ்சை நிமிர்த்திட வைத்தது புது ஞானம்
சிறைச் சாலை அறச்சாலை என்றது தீர்மானம்.

பீரங்கிக் குண்டுக்காய் நிமிர்ந்தது பலர் நெஞ்சம்
தன்னையே வருத்துவோர் சந்தித்தார் அவன் வஞ்சம்
இறுதியில் இறங்கினார் பரங்கியர் கீழ் கொஞ்சம்
சுதந்திரம் கிடைத்தபின் குளிர்ந்தனர் பலர் நெஞ்சம்.

தெரிந்தவரோ ஆயிரம் தெரியாதோர் லட்சத்தில்
அறியாதோர் பழிக்கின்றார் சுதந்திரத்தை உச்சத்தில்
அறிந்தவரோ தேசமக்கள் நிலை கண்டு அச்சத்தில்
சுதந்திர தினம் விதைக்கட்டும் தியாகத்தை உள்ளத்தில்
பறக்கட்டும் தேசியக்கொடி பெருமையுடன் உயரத்தில்
உரிமையுடன் உயரத்தில்.

கிராத்தூரான் சுலீ. அனில் குமார், கும்மிடிப்பூண்டி


விடுதலையை போற்றுவோம்

வேதனை பல தாண்டி வெற்றிபெற்ற சாதனை சரித்திரம் படைத்த சுதந்திரம் வந்தடைந்த அத்துணை மானிடரும் வாழ நிந்தனை இன்றி நிலம் தந்த பூமியிது

வியாபாரம் செய்ய வந்து நாட்டை விலை இன்றி அபகரித்தான் விலையில்லா உரிமையினை விடுதலையை பறித்தெடுத்த வெள்ளை கொள்ளையர் கொடுமைபல செய்திட்டான் கொத்தடிமை ஆக்கிட்டான் தடை இட்டான் சிறை இட்டான் உயிர் பறித்தான் விழி பறித்து எறிந்த போதும்
விட்டுவிடாமல் விடுதலையே குறிக்கோளாய் வாழ்ந்த வீரர்கள் அழிந்தாலும் கவலையின்றி எதிர்த்து நின்றார் அடி பல பெற்றாலும் அயல் நின்றார்
பழியஞ்சாப்
பாதகனாம் ஆங்கிலேயன் படைகொண்டு தாக்கிட்டான்
அண்ணல் காந்தி கழியிருந்தும் அஹிம்சை வழி நடக்கலானார் காந்தியடிகள் பின்னாலே மக்கள் நின்றார் அன்பு வழி அறவழி அஹிம்சை பாதையில் அனைவருமே சென்றார்கள் அதனால்தானே அன்றிருந்த ஆங்கிலேயன் அலறினனே அண்ணல் வழி அஹிம்சை வழி அதனைப் பார்த்து அகிலமெல்லாம் மிரண்ட தைய்ய
அஹிம்சை பாதை
வென்றதையா
ஆங்கிலேய கூட்டத்தாரும் வெள்ளையனே வெளியேறு என்றபோது இந்தியாவில் விடுதலையும் மலர்ந்ததைய்யா

இன்றுவரை சுதந்திரமாய் வாழுகின்றோம் அடைந்தோம் அன்று சுதந்திரம் காப்போம் விடுதலை நாமும் விழைந்து

திண்டுக்கல் கவிஞர் பி மீராபாய்


இந்திய சுதந்திரத்தின் இன்றைய நிலை

73 ஆண்டுகள் முன்னே இதே தேதியில்
சுதந்திர சூரியன் நள்ளிரவில் உதித்தது..
இந்தியாவில்…

இருநூறு ஆண்டுகளாய் ஆங்கிலேயர் பிடியில்
இந்தியர்களும் அடிமைகளாய் திணற,

தூத்துக்குடியின் வ உ சி முதலாய்
லட்சக்கணக்கினர் இன்னல்பட்டும்
இன்னுயிர் தந்தும் பெற்று தந்ததே
இந்த சுதந்திரம்…

பேணிக் காத்தோமா?

தியாகச் சுடர்கள் பெற்ற தந்த சுதந்திரமோ
கயவர்களிடம் இன்று கண்ணீர் மல்கி நிற்கிறதே!

சிந்தை தெளிந்த பயங்கரவாதம் தலைவிரித்தாட
மாந்தர்களிடை மானுடம் வறட்சி காணுதே !

பாரதமாதா என்று பெண்மை போற்றிய இந்த மண்ணில்

இன்று
பெண்ணிற்கு எங்கே பாதுகாப்பு?
நிருபையா தொடங்கி பொள்ளாச்சி வரையில்…

யாருக்காக உடன்கட்டை ஏறியது பெண்கள் சுதந்திரம்

மலிந்து போன பணக் கொள்ளையில் இன்று
நலிந்து போனதே விளைநிலங்களின் சுதந்திரம்!

கால மாற்றத்தால் இயற்கையைக் காக்க மறந்தோம்..
தடுக்கி விழுந்தால் மிடுக்குடன் எழுந்துள்ள
அடுக்குமாடிகள்
தேசம் எங்கிலும் கான்கிரீட் காடுகள்..
வெட்டப்பட்டது மரங்களின் சுதந்திரம் !

இரவில் பெற்றதாலோ சுதந்திரம்
இருள் சூழ்ந்த கருவளையத்துள் இன்றும்!

ஊழலும் லஞ்சமும் பெருகிப் போனதால்
தன்னிலையில் மாசுபட்டதே காற்றின் சுதந்திரம் !

பக்கத்தில் நடக்கும் அநியாயம் பார்த்துக் கொண்டிருப்பதற்கா
உனக்குப் பெற்றுத் தந்தார்கள் சுதந்திரம்?

இனியேனும் விழித்தெழுவோம்
பெற்ற சுதந்திரத்தைப் போற்றி காக்க
இந்திய விடுதலை நாளில் சபதம் ஏற்போம்!

தனலட்சுமி பரமசிவம், திருப்பதிசாரம், கன்னியாகுமரி மாவட்டம்


தியாகிகளுக்கு வீரவணக்கம்

தேசம் விடுதலை பெற
வீரமரணம் எய்தியோர்
ஏராளம்

அவர்கள் சிந்திய குருதியாலே
மூவர்ணக்கொடி
கம்பிரமாய் பட்டொளி வீசிப் பறக்கிறது

தியாகிகள் விட்ட மூச்சு
இந்த
காற்றோடு கலந்து
மூவர்ணக் கொடியை
முத்தமிடுகிறது

வாங்கிய தடியடிகள்
எத்தனை ?
அத்தனையும் விழுப்புண்களாயின…

தன்னுடலுக்கு எரியூட்டி
வெள்ளையர்களின்
ஆயுதக்கடங்கை எரித்தாள் ஒருத்தி…
வெற்றிக்கொடி நிலைநாட்டினாள் குயிலி எனும் மறத்தி…

அகிம்சை வாளைக் கையிலெடுத்து
ஆங்கிலேயரை தோற்கடித்தார் மகாத்மா…

தேசத்திற்காக போராடி
இன்னல்களை சவாலாக ஏற்று இளவயதில்
தூக்குக் கயிறை முத்தமிட்டார் பகத்சிங்

தொடர்புடையவை:  உலக சிறுநீரக தினம் !

கணவனை இழந்த பின்னும் வெள்ளையரை எதிர்க்க கிளர்ச்சியுடன் கிளம்பினாள் வீரமங்கை வேலுநாச்சியார் -கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப போராடிய முதல்பெண்

தியாகங்களும் ஏராளம்
தியாகிகளின் வரலாறும் ஏராளம்

உயிர் சிந்தி பெற்ற சுதந்திரம்;
பிற உயிர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாது உயிர்ப்புடன் பெற்ற சுதந்திரத்தை பேணுவோம்; முழுமையான சுதந்திரத்தை எப்போது காணுவோம்?

வாழ்க சுதந்திரம்
வாழ்க பாரதம்
வாழ்க நிரந்தரம்

முனைவர் ந.பிரியங்கா தருமபுரி


வீரத்தோடும் வெற்றி முழக்கத்தோடும்
தாய் மண்ணிற்காகப் போராடி சிறைவதைப்பட்டு

இறுதி சுவாசத்தில் இந்த
மூவண்ண கொடியேற்றினர் அன்றைய தலைவர்கள்
நம் முன்னோர்….

கொடிகளை ஏற்றி கோடிகளை அள்ளி
தொப்பையும்தள்ள
சாதிக்கிறார் நம் இன்றைய தலைவர்கள்.

காலணியில் அடிபட்டும்
லத்தியில் உதைப்பட்டும்
காலனி ஆட்சியை காலால் மிதித்தனர் அன்று

குண்டு துளைத்த
உண்மை நிகழ்வுகள்
பல உண்டு

விடுதலை
என்பது பாடுபட்டு கிடைத்த பயிரடா-எங்கள் தியாகிகளின் உயிரடா

பயிர் காக்க வேண்டாமா
பயிர் செய்வதுபோல்
பாசாங்கு செய்தால்
நாளைய பசிக்கு பணத்தை தின்னுவையோ? அன்றி
பிணம் தின்னுவையோ?

மானுடம் காவாது
மக்களை வஞ்சிப்பவன்
மன்னன் ஆகுவனோ?

குருதி சிந்தியதால்
கிடைத்த மாணிக்கம் இந்த சுதந்திரம்…

விழுங்கி விடாதே
மலைப்பாம்புகளே.

உ. புஷ்பலதா, சென்னை


இந்திய விடுதலைப் போராட்டம்

போராடி விடுதலையும் பெற்றிட்டோம தோழா
புரியாமல் கிடக்கின்றாய் ஏனின்னும் தோழா

தீராத தியாகத்தால் தந்தனரே வெற்றி
தன்னலமே இல்லாத தேசத்தின் பற்று

பாராட்டு பதவிகளை எதிர்பார்க்க வில்லை
பாரதத்தின் புதல்வர்களாய் வாழ்ந்தார்கள் அன்றோ

சீராட்டும் பெரும்வெற்றி செயல்செய்த வீரர்
சுதந்திரத்தின் சுவாசத்தை நாடுகாத்த சூரர்

வித்திட்டான் விடுதலைக்கு சின்னமலை தீரன்
வீழ்ந்திட்டான் போரினிலே நாடுகாத்த வீரன்

சொத்தாக கொடிகாத்த திருப்பூரின் குமரன்
சுயநலமே இல்லாத தூயமனத் தொண்டன்

செத்தாலும் கட்டபொம்மன் சாதித்து வாழ்ந்தான்
கூட்டாக எதிர்த்திட்டான் படைதிரட்டிக் காட்டி

எத்தனைபேர் உதிரத்தால் எழுந்ததிந்த தேசம்
என்பாட்டி வீரமங்கை வேலுநாச்சி நேசம்

தயங்காது காந்தியுடன் தண்டிவரைச் சென்று
தன்னலமே இல்லாமல் விடுதலைப்போர் வென்று

செயல்வீரர் செங்குருதி காவிநிறம் காட்டும்
செவ்வழியில் சென்றதிந்த செம்மறவர் கூட்டம்

அயலவரின் அதிகாரம் அடியோடு சாய்த்தார்
அவர்பாதை போற்றிடுவோம் மறவர்வழி காப்போம்

இயற்றிடுவோம் இந்தியாவை இளவல்களைக் கொண்டு
இணைந்திருப்போம் வேற்றுமையில் ஒற்றுமையும் உண்டு.

கலைநிலா, கோவை


விடுதலைப் போராட்டம்

குண்டுகள் துளைத்து குற்றுயிர் ஆனதும்
குடும்பங்கள் தொலைந்து அனாதைகள் ஆனதும்
தூய நற்றுணை தனிமையில் விட்டதும்
தொண்டு செய்ய வந்து தொல்லைகள் ஏற்றதும்
நாட்டை

மீட்டிட வந்து வாழ்வில் மீளாமல் போனதும்

எங்கள் வீரர்கள் தாம்.

ஒற்றை மகவாய் பிறந்திருந்தாலும்
மற்றைக் கருமங்கள் மறந்திட்டு
பற்றையெல்லாம் துறந்திட்டு
உற்ற நாட்டுக்கு உழைத்தனரே.

இன்னும் பற்பலர்
சொத்தையும் சுகத்தையும

பொன்னையும் பொருளையும்
மண்ணே பெரிதென இறந்தும் வழங்கியும் தியாகம் புரிந்தனர்

தாயென கொண்ட நாட்டிலே
நாயென நாமும் வாழ்ந்திடுதல்
சீயென சிற்றம் தாம் கொண்டு
தீயென கிளம்பி
தீரமாய் நின்றனரே

சொத்தை விற்று அந்நியனுக்கெதிராய் கப்பல் கட்டிய வ.உ.சியும்

அகிம்சை வழியிலே அறப்போர் தந்திட்ட காந்தியும்

நேர்மை நெறியிலே

போர்முறை வழியிலே இந்திய தேசிய படையைக் கட்டிய
நேதாஜியும்

பாட்டின் மூலம் உணர்வைத் தூண்டிய பாரதியும்

சீறிய விதமும், சிந்திய வீரமும்
சிற்றளவேனும்
நம் சிந்தையில் நிறுத்தி
வாங்கிய சுதந்திரத்தை

வாழையடி வாழையாய் காத்திடல்தான்
புண்ணிய மாவீரர்களுக்கு கண்ணியமாக செலுத்தும் தன்னிகரற்ற மரியாதை ஆகிடுமாம்.

கா.மாரியம்மாள், அகஸ்தியர்பட்டி, திருநெல்வேலி


சுதந்திர தினவிழா கவிதை

முன்னூறு வருடமாய்
முற்றுகையிட்ட நாட்டை
… முடிந்தது யென்று
முழங்கி நின்றநாளே!

அந்நிய யிருட்டின்
அரக்கக் கூத்து
… அடாவடித்தனமாக களமிறங்கி ஆட்கொண்ட அந்நியர்களையே!

அடித்துவிரட்டி ஆக்கிரமித்த கொடியவர்களை
கூண்டோடு
… ஆவேசமாக வெளியேற்றிடவே சுதந்திரம் பெற்றோம்.

உதிரங்களை உரமாக்கி
உரித்தசரித்திரம் நம்சுதந்திரம்
… உரிமைகளை கேட்கும்நாம் சனநாயக
கடமையை???

பலபுரட்சிகளும் கிளர்ச்சிகளும் கொண்ட நாட்டினில்
… பாதைகளை கடந்துவந்து போராடிப்பெற்ற சுதந்திரம்.

அகிம்சை போராட்டத்தில்
கல்லடிப்பட்ட மகாத்மாவும்
…ஆக்ரோசமாகவந்த துப்பாக்கித்தோட்டாக்களை
எதிர்த்த சுபாசுசந்திரரும்!

கண்டங்கள்கடந்து உரிமைக்காய் போராடிய கப்பலோட்டியதமிழனும்
… கம்பீரமாய் மூவர்ணக்கொடியில்
காட்சியளிப்பதுப்போல
தோற்றமே!

கொடிக்காத்த குமரனின் தியாகத்திற்கு ஈடில்லை???
… கொள்கையோடு வாழ்ந்த தியாகிகளுக்கு மரணமேயில்லை???

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் தலைவிரித்தாட
… அமைதியான முறையில் போராடி என்னப்பயன்???

வெள்ளைக்காரன் தந்தசுதந்திரத்தை
வீணாய்போன
… வேடிக்கை ஊழல்காரர்கள் நாசம்செய்து சீரழிக்கின்றனரே???

மாந்தர்களுக்கான ஆட்சியில் மடையர்கள் செய்திடும்
… மட்டமான முறையில் செய்திடும்செயல் தலைவிரித்தாடுகின்றதே???

சட்டங்கள் நம்மை காத்திடவே உருவாக்கப்பட்டது
… சாக்கடையாக்கி ஓட்டைப்போடு அதில் நீராடுகிறார்களே???

நாட்டில் ஊழலும் லஞ்சமும் பெருகியுள்ளது
… நலனில் அக்கறைக்கொள்ள மாந்தர்கள் எவருண்டோ???

நடு இரவில் வாங்கிய சுதந்திரம்
… நல் விடியலுக்கு எப்போ வருமோ???

நல்லதோர் வாழ்வு என்று கிடைக்குமோ???
… நலமான சூல்நிலை எப்போது பெறுவோமோ???

மதிப்புறு முனைவர் இரா. இரமணி ஆசிரியை, MA. BED . சேலம் .


சுதந்திரம்

கத்தியின்றி
ரத்தமின்றி
யுத்தமொன்று
நடந்தது….

அமைதி
வழியில்
போரிட
நல்ல
தலைவர்
கிடைத்தனர்…

உதிரம்
உறக்கம்
உடல்நலம்
மூன்றும்
இழந்து
உழைத்தனர்…..

பதவி
வேண்டாம்
என்றனர்…
எங்கேனும்
பார்த்துண்டா
இக்கதை….

அமைதி
வழியில்
வென்றதால்
மக்கள்
ஆனார்
மன்னரே…

உப்பெடுத்து
விடுதலை
வேள்வி
செய்த
தலைவரை…

உப்பெனவே
தினம்
தினம்

மனதில்
இருத்தி
வைத்திடு…

இனி….

கல்வி
மருத்துவம்
இலவசம்
என்ற
நிலை
வேண்டுவேன்..

அரசியல்
ஆளும்
நிலை
மாறி…

ஜனநாயக
அறிவியல்
நம்மை
ஆள்
என்பேன்…

பசி ப சிவராமன் சிட்லபாக்கம்


விடுதலைத் திருநாள்

இன்னல்கள் ஏதுமின்றி
நாம் வாழ பலகோடி
இன்னல்களை
அனுபவித்த
விடுதலைப் போராட்ட
வீரர்களுக்கு
இதய அஞ்சலி செலுத்தும் ‌நாளே எம் சுதந்திர தின விழா!

முன்னூறு வருடங்களாய்‌ நம்மை‌ முற்றுகையிட்டு
ஆண்ட ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைப் பெற்ற
நாளே எம் சுதந்திர தினவிழா!

அந்நிய அரக்கனின் அனைத்துக்
கதைகளும் முடிந்தது
என்று முழங்கி நின்ற
நாளே எம் சுதந்திர தினவிழா!

நாம் சுதந்திர காற்றைச் சுவாசிக்க
அன்றே ஆங்கிலேய கார்பனை வடிகட்டிய தாவரங்கள் எங்கள் தலைவர்கள்!

அன்னை பாரத மாதாவிடம் அடிமை விலங்கொடிக்க
தா வரங்கள் என்று கேட்க அவள் தந்த வரங்கள் இந்தத் தலைவர்கள்…

அந்நியரின் தந்திரத்தை
அடியோடு அழித்து
அகிம்சை வழியில் விடுதலைப் பெற்ற
நாளே எம் சுதந்திர தினவிழா!

கொட்டும் செங்குருதியோடு, ஈரக்குலை நடுங்க,
உறவுகளைப் பிரிந்தும்,
உயிரைத் தியாகம் செய்த
தெய்வங்களுக்கு வீர வணக்கம் செலுத்தும்
நாளே எம் சுதந்திர தினவிழா!

அந்நிய ரின் சூழ்ச்சிக்கு அடிப்பணியாமலும்,
கலகக் காரர்களின் காலடியில் விழாமலும்
நம்மைப் பிரிக்க நினைக்கும் சூழ்ச்சிக்காரர்களின்
சதிக்கு ஆளாகாமலும்
பெற்ற சுதந்திரத்தைப் பேணி காப்போம்.

நன்றி வணக்கம்.

த.சரஸ்வதி சந்தானம் செய்யாறு தி.மலை மாவட்டம்.


மீண்டுமொரு சுதந்திரம் வேண்டுகிறேன்

தலைமுறை தலைமுறையாய் தவமிருந்து பிறந்தோமடா

இந்தியா என் தாய் நாடென்று இறுமாந்து இருந்தோமடா

கலாச்சாரம் பல உண்டு
கற்கும் மொழி வேறு வேறு

உடுத்தும் உடையில் மாறுபாடு உணவில் கூட மாற்றம் தானே

காசுமீரும் கன்னியாகுமரியும்
கர்வத்தில் மிதந்ததைய்யா

எங்கள் நாட்டு பெருமையெல்லாம் எல்லா நாட்டுக்கும் சென்றதய்யா

பாரதத்து மக்களையே
பாரிலுள்ளோர் புகழ்ந்திடவே
பார் போற்ற வாழ்ந்த குலம்
பாரதத்தின் நேச குலம்

அண்டிப் பிழைக்க வந்த
அந்நியன் ஆங்கிலேயன்
அரசுரிமை கொண்டானே – நம்மை
அடிமையாக வைத்தானே

வரி மேல் வரி போட்டானே நாமும்
வரிக்குதிரை ஆனோமே

வாய் திறந்து பேசிடாமல்
வாய்க்கு பூட்டு போட்டானே

தொடர்புடையவை:  கறுமையில் ஒரு பெருமை

சொந்த நாட்டை காப்பாற்ற
சொத்திழந்தார் சுகமிழந்தார்
சொந்தமும் தான் இழந்தார்
சொல்லனா துயர் அடைந்தார்

பாடுபட்டு பல வீரர்
பாடையிலே போய் விட்டார்

அகிம்சையிலே போராடி
அடைந்தோம் இந்த சுதந்திரத்தை அந்நியன் போனானென்று
அகமகிழ்ந்து குதித்திட்டோம்

ஆங்கிலேயன் போன பின்னே தேன்
ஆறும் பாலாறும் ஓடுமென்று

காத்திருந்த கண்களுக்கு
காணவில்லை தண்ணீர் ஆறு

பசியும் பட்டினியுமாய் மக்கள்
பட்சத்தில் வாழுகின்றார்
பதவியில் இருப்போர்கள்
படோடமாய் திரிகின்றார்

அதிகாரம் செலுத்தியவன்
அடியோடு போனானென்று அகமகிழ்ந்த இந்தியருக்கு
அடி வந்து விழுந்ததுவே

ஆட்சியிலே இருப்போர்கள்
ஆணவத்தில் திரிந்திட்டார்
ஆடுமாடுகள் போல் மக்களை ஆணவமாய் நடத்திட்டார்

சுதந்திரம் வந்துமிங்கே
சுதந்திரம் இல்லையே

ஒரு வேளை உணவின்றி
ஒட்டுத் துணியின்றி
ஒண்டுதற்கு குடிசையின்றி
ஒற்றுமையென சொல்லி வாழுகிறோம்

இந்த நிலை மாறிடாதா
இன்ப நிலை வந்திடாதா
இரு விழியை திறந்தவாறு இருக்கின்றோம் நாட்டினிலே

எந்நாட்டில் வாழுகின்ற
எல்லோரும் எல்லாமும் பெரும்நாளே எங்களுக்கு சுதந்திரமாம் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருப்போம்

– எம் கே ராஜ்குமார்


சுதந்திரம்

வானில் வெடித்தது
வாங்கிய சுதந்திரத்தின்
மகிழ்ச்சி

தெருவெங்கும் பறந்தது
தேசிய காெடிகள்
சுதந்திர காற்றை
சுவாசிப்பதற்கு

இனிப்புகள் பகிரப்பட்டது
இனிய சுதந்திரம்
அடைந்ததற்கு

இன்னும் இருக்கிறது
இறக்கைகள் முளைக்கிறது

எழுபது ஆண்டுகள் கடந்தது
ஏழைக்கு எங்கே வழி பிறந்தது

கிடைத்த சுதந்திரம் கைக்கு
கிடை க்கவில்லை என்று
ஒடுக்கப்பட்டவர்களின்
குரல் ஒலிக்கிறது
தடுக்கப்ட்டவர்களின் தலை
பெயர்க்கப்படுகிறது
கிடைக்குமா சுதந்திரம் என்று
மறைக்கப்பட்ட அடிமைக் கூட்டம் தவிக்கிறது

கா லெனின், சென்னை


புத்தம் புது மனைவிக்கும்
புன்னகைக்கும் குழந்தைக்கும் முத்தமிட
நேரமின்றி
அந்நியருக்கு எதிராக போராடத் துணிந்தவர் எத்தனை பேர்?
முழுமூச்சையும் உணர்வாக்கி கத்தியின்றி ரத்தமின்றி வரவில்லையடா!
ரத்தம் சொரிந்து சித்தம் சிறைக்குள்
அடைபட்டு,
வாழ்வின் வசந்தத்தை மண்ணாக்கி,
குண்டடிபட்டு குருதி சிந்தி
மண்டையோடு மண்ணில்விழ,
தண்டனிடாத நம்மோர் வாங்கித்
தந்த சுதந்திரமடா,
எப்போதும் எதற்காகடா அகிம்சை
தப்பான பாதையில் தடம்புரண்டு
இப்போது சிலபேர் செல்கினற நேரம்
ஒப்பில்லா வீரத்தை ஏந்திடடா
கையில்
நுட்பத்தால் இந்த நாட்டைக் காத்திடடா
என்று எழுந்தார் திலகரும்,லாலாலஜபதி
ராயும்,

சீட்டுக்குலுக்கிப் போட்டு சிந்தையிலே
தாகம் ஏற்றி,
நாட்டுப்பற்றுக்காக நல்லமகனாய் பலர் இங்கே,பலியானார்,தோட்டாவுக்குத்
உணவானார்,
ஓட்டுப்போட காசைக்காட்டி,கூட்டணி என்று கூறி வறுமையை கூட்டினாரே,
பாட்டுப்பாடி பழங்கதை பேசி கற்றைரூபாய் நோட்டுக்காக ஓடிப்பறக்குதடா சுதந்திரம்


இன்பச் சுதந்திர நாள்!!!

தன்னின்ப நாட்டின் நிலை கண்டு
மனம் வெதும்பி
துன்பந்தனை ஆடை யாக்கி
இன்னுயிரைக் கொடை யாக்கி
மன்னுயிர் வாழவழி தந்தார்!

நெஞ்சத்தில் வீரமும் உறுதியும்
மிஞ்சிட தருக்கர் தலையறுத்து
அஞ்சாமல் அந்நியரை விரட்டி
நஞ்சில்லா சுதந்திரம் அடைந்தோம்!

பெற்ற சுதந்திரம் இனிக்கிறதா?
தன்னலம் கொண்ட மனிதர்கள்
கண்ணென நாட்டைக் காவாமல்
காசு தேடியதால்
நற்கதி இழந்தது சுதந்திரம்!

சொந்த நாட்டைச் சுரண்டி
சொகுசு தேடி அந்நிய நாடு தஞ்சம்
கஞ்சிக் குடிக்கும் எளியவர் வாழ்வை
வஞ்சனையாக வதம் செய்தல்!

பிஞ்சுக் கரங்கள் பலியாக
நஞ்சு கலக்கும் நயவஞ்சகம்!
பிணந் தின்னிக் கழுகாய்
பணம் தின்னும் முதலைகள்_ இத்தகைய ஆக்டோபஸ்களான

வஞ்சகர் வலை அறுபடும்
நன்னாளே நம் சுதந்திர நாள்!
காமராசர் அப்துல் கலாம் போல்
நல்தலைவர்கள் வாய்க்கும் நாளே
இனிக்கும் இன்ப சுதந்திர நாள்!!!

முனைவர் ம.ரூபி அனன்ஸியா, திருச்சி


சுதந்திரம்

ஆழியை நீந்தி இங்கே வந்தது
வாணிபம் செய்யும் வஞ்சகர் கூட்டம்

ஆங்கிலம் பேசும் ஆண்கிழ நாடு

வார்த்தையில் நஞ்சை வாகாய் செலுத்தி
வாணிபம் தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்தான்

அடிமை ஆனது அறியாமல் நாமும்

அவன்மொழிக் கெல்லாம் தலைகளை யசைத்தோம்

வளங்கள் சுரண்டிய வெள்ளையன் அட்டைகள்
குருதி குடிக்க விழித்துக் கொண்டோம்

அடிமை இல்லை என்பதை உணர்த்த
வேலூர் கோட்டையில் சிப்பாய் கலகம்

போரின் வேகம் கண்டு நடுங்கி விழிகள் பிதுங்கி
சில விலக்குகள் தந்தான்

திசைக்கு ஒன்றாய் தலைவர் தோன்ற

எழுச்சி பெற்றது விடுதலை இயக்கம்

அண்ணல் என்னும் அகிம்சை தலைவன்
அறப்போர் என்னும் ஆயுதம் கொண்டார்

ஆயுதம் கொண்ட மன்னர் போரை
தோட்டா கொண்டு துளைத்து எடுத்தான்

அண்ணல் செய்யும் அஹிம்சைப் போரில்
அமைதி தவிர்த்து ஆயுதம் இல்லை

அதனால் ஆண்கிழன் சீற்றம் கொண்டு
வாங்கிய உயிர்கள் கொஞ்சமா? நஞ்சமா?

அன்னியத் துணியை நெப்பில் எரித்து
ஒத்துழை யாமை உணர்வு புரட்சி

சுங்கம் தவிர்க்க தண்டி புரட்சி

நமக்காய் பொருளை நாமே செய்தோம்

அறப்போர் வெற்றி மெல்ல நெருங்க
அணியை திரட்டி ராணுவம் செய்தார் நேதாஜி

தூக்குக் கயிற்றிலும் துவளாத
பகத்சிங்

தோல்விமேல் தோல்வி வெள்ளைத் தோலுக்கு

மிரண்டு போயவன் சுதந்திரம் தந்தான்

ஆங்கிலம் பேசும் அறிவிலி மாந்தன்

முன்னோர் தியாகம்
இன்றைய சுதந்திரம்

நன்றி சொல்வோம்
நாளும் பணிவோம்
தேசத்தை காத்தவர் தியாகம் போற்றுவோம்

முத்துவேல் இராகி கல்குறிச்சி விருதுநகர்


சுதந்திரம்

அடிமை வாழ்வை மீட்டெடுக்க அந்நிய

தடியடிகள் பலபெற்ற தன்மான உணர்வுள்ள

மடியில்லா தலைவர்களின் வீரத்தை பறைசாற்ற

இடியொத்த முழக்கமிட்டு கொண்டாடும் சுதந்திரம்…

அந்நியக் கயவர்களை ஒழித்து விடுதலையை

செந்தமிழ் நாட்டிற்கு பெற்றுத்தந்த வளமிகு

இந்தியத் தாயின் புதல்வர்களின் மெய்வழியில்

எந்நாளும் பயணிக்க கொண்டாடும் சுதந்திரம்…

மண்ணை மீட்டெடுக்க மாண்டுபோன வீரனுக்கு

விண்ணளவு வந்தே மாதரம் முழக்கமிட்டு

எண்ணங்களில் முன்னேற்ற பாதைதனை சமைத்திடவே

வண்ணமிகு கொடியேற்றி கொண்டாடும் சுதந்திரம்…

குருதியாற்று வெள்ளம் பாய்கின்ற எல்லையினில்

மருது பாண்டியராய் காக்கின்ற இரண்யனின்

உருவத்தை மூவர்ணக் கொடியாய் பாரினிலேற்றி

ஒருமைப்பாடு சிதையாமல் கொண்டாடும் சுதந்திரம்…

வெள்ளையனை வெளியேற்றி நம்முள் உருவான

கொள்ளையர் கூட்டத்தை வேரறுத்து உயிர்

உள்ளளவு தேசப்பற்றுடனே உள்நாட்டு வர்த்தகக்

கொள்முதல் மேன்மைபெற கொண்டாடும் சுதந்திரம்…

வற்றாத நதியாவும் ஒன்றிணைத்து பாட்டினிலே

பற்றுடைய புலவர்களின் நெறிசென்று மாநில

வேற்றுமைகளை மறந்து மக்கள் எல்லாம்

ஒற்றுமையாய் உவகையுடன் கொண்டாடும் சுதந்திரம்..

விருதை சசி விருதுநகர்


விடுதலைத் திருநாள் போற்றுவோம்

அடிபட்டார் உதைபட்டார் அய்யோ என்றே
     அலறித்தான் பலரிங்கே அவதி யுற்றார் !
துடிதுடிக்க எத்தனையோ துயரம் சொல்லின்
     சொல்லுக்குள் அடங்காது மிதியும் பட்டார் !
வெடியினிலும் தோட்டாவும் வீழ்த்த மாண்டார்
     வீரமுடன் எதிர்த்தாரும் சிறையில் மாய்ந்தார் !
இடியாக இன்னல்கள் வதைத்த போதில்
     எண்ணற்றோர் மண்ணுக்குள் மண்ணாய்ப் போனார் !

முனம்துயர்கள் பட்டதெலாம் மறந்து விட்டு
     முன்னேற்ற நம்நாட்டைத் தாழ்த்த லாமோ ?
இனப்பற்றும் மொழிப்பற்றும் ஏதும் இன்றி
     என்நாடு எனும்பற்றுத் துளியும் இன்றி
தனக்கான ஆட்சிக்காய்த் தருக்கிக் கீழோர்
     தம்பட்டம் அடிப்பதுவும் வெட்கக் கேடே !
மனந்தெளிய மாட்டாரோ மக்க ளெல்லாம் ?
     மக்களுக்காய்த் தலைவரெலாம் மண்வாழ் வாரோ ?

அந்நாளைப் போல்தலைவர், மக்கள் வாழ
     ஆனவழி காணாமல் அலைதல் நன்றோ ?
இந்நாளில் வாக்குக்காய் மக்க ளெல்லாம்
     இழிவாகிப் பணம்பெற்றே வழங்க லாமோ ?
அந்தபணம் ஐந்தாண்டு வாழ்வா நல்கும் ?
     அவர்தந்தக் கறிச்சோறா வாழ வைக்கும் ?
சிந்தையிலே ஏற்காமல் சிதைந்து போகும்
     சீர்கேடு மாறாதோ சிந்தை செய்வீர் !

விடுதலைக்காய் நம்நாட்டில் வீழ்ந்தார் பல்லோர்
     வெங்குருதி சாக்காட்டில் கிடைத்த யிந்த
விடுதலையைக் காத்திடுவோம் விழித்தே என்றும்
     வீரர்தம் ஆற்றலினை விதந்து சொல்வோம் !
விடுதலைக்காய் வித்திட்ட தலைவர் தம்மின்
     வியனாற்றல் தமைப்போற்றி வெற்றி காண்போம் !
விடுதலையைப் போற்றிடுவோம் உயிராய் நாளும்
      விந்தியர்நாம் ஒன்றிணைந்தே வாழ்வோம் சேர்ந்தே !

படைக்களப் பாவலர் துரை. மூர்த்தி, ஆர்க்காடு

Share this

10 Comments

 • நீலகண்ட தமிழன்

  சிறப்பான நிகழ்ச்சி
  அருமையாக சென்று கொண்டிருக்கிறது
  கவிதைகளும் பாடல்களும் கேட்க கேட்க இனிமையும் அறிவையும் இணைந்து வழங்குகிறது

  • தனலட்சுமி பரமசிவம்

   சிறப்பான விடுதலை நாள் கொண்டாட்டமாக அனைத்து கவிதைகளும் சிறப்பான கண்ணோட்டத்துடன் கவிஞர்கள் வடிவமைத்துள்ளனர்.வாழ்க தமிழ் வளர்க கவிஞர்கள். பாராட்டுகள்.
   சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கும் மற்றும் புதிய திசைகள் வானொலி நிர்வாகிகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

 • துரை. மூர்த்தி

  விடுதலைத் திருநாள் போற்றும் வண்ணம் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவும் திசைகள் வானொலி நிலையமும் இணைந்து நடத்திக் கொண்டண்டிருக்கும் ஏற்றமிகு கவியரங்கில் பங்குகொண்ட பாவலவர்களுக்கும் மூலமாகத் திகழும் பாவலர் நீலகண்ட தமிழன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி…
  தங்கள் தமிழன்பன்,
  _ படைக்களப் பாவலர்

 • Dr.வீ.ரமேஷ்பாபு, சிதம்பரம்

  வணக்கம்

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா மற்றும் திசைகள் வானொலி இணைந்து நடத்தும் சுதந்திரதின கவியரங்க நிகழ்ச்சியினை மிக நேர்த்தியாக தெளிவாக அத்துணை கவிதைகளையும் சிறப்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கும் திசைகள் வானொலி நிலையத்தார் அனைவருக்கும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா தமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து மகிழ்கின்றது….

 • கா. மாரியம்மாள், அகஸ்தியர்பட்டி

  தமிழ்க்கவிதை என்ற தென்றலோடு சுதந்திர பாடல் நறுமணத்தோடு வீசுகிறது

 • தனலட்சுமி பரமசிவம்

  அடக்கி வைத்த எண்ணங்களையும் ஆதங்கத்தையும் தமிழன்னை யின் ஆசியுடன் முரசுக் கொட்டிய அனைத்து கவிஉறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.நல் ஆசானாக நம்மை வழிநடத்தி தந்தையார் நம்மைப் பேணும் ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஐயா அவர்களுக்கு நன்றி என்ற ஒரு சொல் போதாதே. நம் வளர்ச்சியே அவருக்கு நாம் சமர்ப்பிக்கும் நன்றி படிவம்.

 • இரா.இராஜம் நன்னிலம்

  எழுச்சி மிகு கவியரங்கம்.விடுதலை வேள்வியின் அனல் பறக்கும் கவிதைகள்.நாட்டுப் பற்றை தட்டி எழுப்பும் கவிஞர்களின் குரல் வளம்.அனைத்தும் மிக அருமை.ஆதாராமாய்இருந்து அயராதுஉழைத்து நிகழ்ச்சியை செம்மையுறச் செய்த ஒருங்கிணைப்பாளர் ஐயா அவர்களுக்கும்,திக்கெட்டும் கவியொலி பரப்பிய திசைகள் வானொலி நிர்வாகத்தினருக்கும்,அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்…

 • P Sivaraman

  அருமையான கவிதைகள்..

  சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா
  ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி…

  பல செய்திகள்..

  பல எதிர்பார்ப்புகள்..

  பசி
  ப சிவராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *