தமிழ்நாட்டைக் காக்கின்ற களத்தில் முன்வரிசையில் நிற்கின்றோம்

மாணவர் அணி பொறுப்பாளர்கள் காணொளி சந்திப்பில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரை

மாணவர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 18.07.2020, சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு காணொளி வாயிலாக, கழக மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச் சிங்கத்தின்
கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!
சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில்
விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல்
கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்ற தமிழ்
எங்கள் மூச்சாம்!

என்ற பாவேந்தரின் பாடலை, நாடு முழுமை யும், மேடைகள்தோறும் பாடினார் நாவலர்.

அந்த உணர்வு, இன்றைக்குத் தேவைப்படு கின்றது-

நான் வியப்பு அடைகின்றேன், திகைப்பு அடைகின்றேன். இந்தக் காணொளி கலந் துரையாடல் கூட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி பொறுப்பாளர்கள் 97 விழுக்காடு பங்கு ஏற்று இருக்கின்றீர்கள். 5 பேர் மட்டும்தான் வரவில்லை.

மாநில மாணவர் அணிச் செயலாளர் தம்பி பால சசிகுமார் தலைமை ஏற்று இருக்கின்றார். இலட்சிய வேங்கை, ஈழ வாளேந்தி தம்பி செந்திலதிபன், மாணவர் அணியை வார்ப்பித்து இன்றைக்குத் தென்காசி மாவட்டச் செயலாளராக சாதனை கள் படைத்து வருகின்ற தம்பி தி.மு. இராசேந்திரன், தேர்தல் பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் முன்னிலை ஏற்று இருக்கின்றார்கள்.

இந்தக் கூட்டம், ஏறத்தாழ ஐந்து மணி நேரமாக, மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

இந்தியாவை மட்டும் அல்ல, உலகம் முழு மையும் கொரோனா என்ற பேராபத்து சூழ்ந்து இருக்கின்றது. கடந்த ஐந்து மாதங்களில், இந்தியாவில் மட்டும் பத்து இலட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இனி அடுத்த ஒரு மாதத்தில் மட்டும், மேலும் பத்து இலட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கின்றார்கள். இதுவரை 25602 பேர் இறந்து விட்டனர். தமிழ்நாட்டில் 160907 பேர் பாதிக்கப்பட்டு 2315 பேர் இறந்து விட்டனர். இப்போதுதான் கிராமங் களுக்கு உள்ளே நுழைந்துகொண்டு இருக்கின்றது. அங்கே மருத்துவமனைகள் இல்லை. இரண்டே நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடிய கொடிய நோய் இது.

பல மருந்து நிறுவனங்களில், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால், அவை எல்லாம் சோதனை செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு வர இன்னும் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும்.

மனிதன் அறிவியலின் உச்சகட்டத்தை எட்டி விட்டான். விண்ணை அளக் கின்றான், கோள்களை ஆராய்கின்றான் என்ற போதிலும், அதே மனிதன் இயற் கையை எதிர்த்துத் தொடர்ந்து போராட வேண்டிய நிலை இருக்கின்றது. இதுவரை 11 என்டெமிக் கொள்ளை நோய்கள் வந்திருக்கின்றன. ஆனால், இந்தக் கொரோ னாதான் இரண்டாவது பேன்டெமிக். மிகக் கொடூரமானது. கோடிக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடும்.

அனைத்துத் தொழில்களும் முடங்கி விட்டன. விவசாயிகள் அடியோடு நொறுங்கிப் போய்விட்டார்கள். வாழைத் தார் என்ன விலை விற்கின்றது என, இராஜேந்திரன் சொன்னார். உணவு விடுதி கள் மூடப்பட்டன. எந்த விதத்திலும் வாழ வழி இல்லையே என்று மக்கள் பரிதவித் துக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில், திராவிட இயக்கத்திற்கும் ஆபத்துகள் சூழ்ந்து வருகின்றன. இரத்தத் தால், கண்ணீரால், வியர்வையால் கட்டி எழுப்பப்பட்ட இயக்கம் இது. இலட்சக் கணக்கான தொண்டர்கள் உழைப்பில் உருவான இயக்கம் இது. எண்ணற்றவர்கள் தங்கள் உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள். அப்படிக் கட்டி எழுப்பிய கோட்டை இது. அவ்வளவு எளிதில் தகர்த்துவிட முடியாது. இந்துத்துவ சக்திகள் வலுப்பெறுகின்றார்கள் என தம்பி தமிழீழ சோமு இங்கே சொன்னார். அது நிலைத்து நிற்காது. காலப்போக்கில் கரைந்து விடும். காற்றோடு காற்றாக மறைந்து போய்விடும். அது நீர்க்குமிழி. எத்தனையோ அறிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் சேர்ந்து ஆக்கிய இயக்கம் இது. ஏழை எளிய பாமர மக்களால், முடி திருத்தகங்களில் அடித்தளம் அமைத்த இயக்கம்.

தொடர்புடையவை:  விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

ஒரு மரக்குதிரைக்கு உள்ளே பகைவர்கள் பதுங்கிக் கொண்டு, ட்ராய் நகரத்திற்கு உள்ளே நுழைந்தார்கள். அதைப்போல, இந்து மதத்தைச் சொல்லிக் கொண்டு, ஊடுருவப் பார்க்கின்றார்கள் என்று அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் நான் சொன்னேன். இறை வழிபாட்டு உணர்வு என்பது இயற்கையாக மனிதனிடம் இருக்கின்றது. அவன் சூரியனை வணங் கினான், நெருப்பை வணங்கினான், மரங்களை வணங்கினான், கல்லைக் கட வுளாகச் சமைத்து வழிபட்டான். அந்த உணர்வுகளைத் தூண்டி, அதன்வழியாகத் தமிழ்நாட்டைக் கைப்பற்றி விடலாம் என்று சனாதன இந்துத்துவ சக்திகள் நினைத்தால், அது நடக்காது. ஆலய வழிபாட்டை நாம் தடுக்கவில்லை. ஆறுகால பூசைகள் நடக் கட்டும்.

அறிவாசான் தந்தை பெரியார் சிலைக்கு, காவிச் சாயம் பூசி இருக்கின்றார்கள் சில பைத்தியக்காரர்கள். தன்மீது ஒரு செருப்பு வீசியபோது, வண்டியைத் திருப்பிக் கொண்டு வந்து, அடுத்த செருப்பையும் வீசச் செய்து எடுத்துக்கொண்டு போனவர் தந்தை பெரியார். அவரது சிலை மீது காவிச் சாயம் பூசினால், அது களங்கம் ஆகி விடுமா? ஆனால், இத்தகைய துணிச்சல், சில காலிப் பயல்களுக்கு வந்து இருக்கின்றது.

அவர் புத்துலகச் சிற்பி. தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று சொன்னது யார்? கலைஞர் அல்ல, வீரமணி அல்ல. ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு சொன்னது. ஏன்? எதனால்? எப்படி? என்ற கேள்விகளை எழுப்புங்கள் அன்றைக்கு ஏதென்ஸ் நக ரத்து வீதிகளில் சொன்னதற்காக, விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட சாக்ரடீஸ் போல, தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று தந்தை பெரியாரைச் சொன்னார்கள். அவர் ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தலைவர். அவரது சிலையை சிலர் இழிவு படுத்துவதால், திராவிட இயக்கத்தைச் சிதைத்துவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்குக் காரணம் தந்தை பெரியார். மராட்டிய மண்டலத்தில் அம்பேத்கர் கிளர்ந்து எழுந்தார். ஆனால், அவரைக் கட்டாயப் படுத்தி, காந்தியாரோடு புனே ஒப்பந்தம் செய்து கொள்ள வைத்தபோது, வேண்டாம், கையெழுத்துப் போடாதீர்கள் என்று ஐரோப்பாவில் இருந்து தந்தி கொடுத்தவர் தந்தை பெரியார். அவர் தம் இறுதி மூச்சு அடங்கும் வரை, கையில் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, அடிவயிறு வலிக்கப் பேசி, அம்மா அம்மா என்று அலறி, அந்த வலியையும் பொறுத்துக்கொண்டு, பட்டி தொட்டிகளில் எல்லாம் கொள்கை யைப் பேசி, மக்களை விழிப்பு உணர்வு பெறச் செய்தவர் தந்தை பெரியார். வாழ்நாள் முழுமையும் போராடினார். அதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த நாடு, இந்தியா அல்ல. இது ஒரு துணைக் கண்டம். பல தேசிய இனங்கள் வாழ்கின்ற நாடு. இதை இந்திய ஐக்கிய நாடுகள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் சொன் னேன். என்னுடைய தாய்மொழி இந்த நாட்டின் ஆட்சி மொழி ஆகும்வரை நான் மனநிறைவு அடைய மாட்டேன் என்று அண்ணா, மாநிலங்கள் அவையில் சொன்னார். அவர்கள் வகுத்துத் தந்த கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது.

கார்ல் மார்க்ஸ் பொது உடைமையைக் கொள்கையை வகுத்தார். அவரது சீடனாக லெனின் தோன்றினார். அவர் சட்டக்கல்லூரி மாணவர். தன்னுடைய உடன்பிறந்த அண்ணன் அலெக்சாண்டரை அரசாங்கம் தூக்கிலிட்டுக் கொன்ற காரணத்தால், அவர் அரசியலுக்கு வந்தார். பொது உடைமைக் கொள்கைகளைப் பரப்பினார். ரஷ்யப் புரட்சி வென்றது. எந்த ஒரு விளைவுக்கும் ஒரு எதிர்விளைவு ஏற்படும். இது இயற்கை நியதி.

சனாதனக் கொள்கைகளைத் திணிக்க முற்படுகின்றார்கள். அதை எதிர்க்கின்ற சக்தி, தானாகக் கிளர்ந்து எழும். அதற்கு மாணவர்கள்தான் அடித்தளம் அமைக்க வேண்டும். நம் அன்னைத் தமிழ் மொழியின் இலக்கியச் செழுமை உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. நமது முன்னோர்கள் சொன்ன கருத்துகள், உலகுக்கே வழி காட்டக் கூடியவை. ஆப்பிரிக்கக் கண்டத்தில் தொழு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், ஆல்பிரட் சுவைட்சர் பின்னர் இலக்கியம் படித்தார். நோபல் பரிசு பெற்றார். உலக இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்தபிறகு அவர் சொன்னார். புத்தரின் மணிமொழிகள் அருமையானவைதான். ஆனால் அதைவிட உயர்ந்த கருத்துகளை, திருவள்ளுவர் கூறி இருக்கின்றார். அத்தகைய பெருமைக்கு உரிய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம்.

தொடர்புடையவை:  ஸ்ரீவில்லிபுத்தூரில் 26ஆம் தேதி முதல் ஆக.2ஆம் தேதி வரை முழு முடக்கம்

1964 நான் மாணவனாக இருந்தபோது, காமராசர் என்னை அழைப்பதாக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஜீத் வந்து சொன் னார். நான் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறேன். அதனால் நான் வரமாட்டேன் என்று சொன்னேன். நான் தமிழ் மொழியின் மீது கொண்ட காதலால், அண்ணாவின் தலைமையை ஏற்றேன். அவர் முன்பு உரை ஆற்றுகின்ற வாய்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில்தான் எனக்குக் கிடைத்தது. ஆகஸ்ட் மூன்றாவது வாரம், கோகலே அரங்கத்தில் பேசினேன். ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. எந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டேனோ, அதில் இம்மி அளவும் சம ரசம் செய்து கொண்டது இல்லை. எதற்காக நீ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்றாய்? என்று யாராவது கேட்டால், அவர்கள் செவிட்டில் அறைந்தது போல் சொல்லுங்கள். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற இயக்கம் இது. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வடவரின் ஆதிக்கத்திற்குப் போகாமல் தடுத்தது எங்கள் கட்சி, எங்கள் தலைவர் வைகோ என்று சொல்லுங்கள். மராட்டிய மாநிலம் இரத்தினகிரி விவசாயிகள் கடப்பாறையோடு சென்று உடைத்து நொறுக்கிய ஸ்டெர்லைட் என்ற நாசகாரத் தொழிற்சாலை, தமிழ்நாட்டில் உரிமம் வாங்கிக் கொண்டு வந்து, தூத்துக்குடியில் எமனாக வந்து உட்கார்ந்து இருக்கின்றது. அதை எதிர்த்து 26 ஆண்டுகளாகப் போராடி இருக்கின்றோம். எத்தனை நடை பயணங்கள், எத்தனை உண்ணா விரதம் மறியல் போராட்டங்களை நடத்தி னோம். அதன்பிறகு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த ஆலையை மூட வேண்டும் என்று ஆணையும் பெற்றுக்கொடுத்தோம். அது எங்கள் இயக்கத்தின் சாதனை என்று சொல்லுங்கள். அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று தடை ஆணை வாங்கினார்கள். அந்த ஆலையை எதிர்த்துக் கிளர்ந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரைக் கொன்று விட்டார்கள். அந்தப் பிரச்சினை இன்னமும் தீரவில்லை. அந்த ஆலையின் உரிமையாளர், உலகக் கோடீசுவரர்களுள் ஒருவன் அனில் அகர்வால், என்னைச் சந்திக்க நேரம் கேட்டபோது, சந்திக்க மறுத்தவர் எங்கள் தலைவர் என்று சொல் லுங்கள்.

நம்மாழ்வார் சொன்னதைக் கேட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாம்தான் முதல் அறிக்கை கொடுத்தோம். நீதிமன்றத்திற்குச் சென்றோம். மீத்தேனை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கூடங்குளம் அணு உலையை எதிர்த்துப் போராடினோம். அங்கே அணுக்கழிவுகளைக் கொட்டுவதை எதிர்த்துப் போராடினோம். அந்த அணு உலை அமைக்கப்போவதாக, 1988 நவம்பர் 21 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி சொன்னபோது, எங்ககே அமைக்கப் போகிறீர்கள்? எங்கள் தென்னாட்டில் கூடங்குளத்தில் அமைக்கப் போகிறீர்கள். ஏன் உங்கள் அறிக்கையில் அதைக் குறிப்பிடவில்லை? தென்தமிழ்நாடு அழிந்து போகும். அணுஉலை அமைக்கக் கூடாது என்று பிரதமரோடு வாக்குவாதம் செய்தேன். இந்தியா நாடாளுமன்றத்திலேயே அதை எதிர்த்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான் மட்டும்தான். நியூட்ரினோவை எதிர்த்துப் போராடுவதற்காகவும், மதுவை எதிர்த்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடை பயணம் சென்றோம். கொட்டு கின்ற மழையிலும், நெருப்பு வெயிலிலும் தொடர்ந்து நடந்தோம். இன்னும் சில ஆண்டுகள் வாழ வேண்டிய என் தாயார், மதுக்கடையை எதிர்த்துப் போராடியதால் உடல்நலன் கெட்டு இரண்டு மாதங்களில் இயற்கை எய்தினார்கள். நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணம் புறப் பட்டபோது, சிவகாசி ரவி தீக்குளித்து மடிந்தான். என் துணைவியாரின் அண்ணன் மகன் சரவண சுரேஷ் தீக் குளித்து மடிந்தான். நாட்டுக்காக நாம் உயிர்களைக் கொடுத்து இருக்கின்றோம். தமிழ்நாட்டைக் காப் பாற்றுகின்ற கடமை யில் முன்வரிசையில் நிற்கின்றோம். எதற்காகவும் அஞ்ச வேண்டியது இல்லை. எதைக் கண்டும் கலங்க வேண்டியது இல்லை. தம்பி சோமு போன்றவர்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. சபலங்களுக்கு ஆட்படுகின்றவர்கள் விலகிச் செல்வதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் கொள்கைக்காக இருக்கின்றோம். எந்தப் படையையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.

உளறல்களைப் புறம் தள்ளுங்கள். நெஞ்சில் உறுதி கொண்ட ஐந்து பேர் இருந்தாலும் போதும், ஐயாயிரம் பேர் கொண்ட படையையும் எதிர்க்க முடியும். அந்த நம்பிக்கையோடு, நீங்கள், புதிய மாணவர்களை இயக்கத்திற்கு அழைத்து வாருங்கள். உலகமே வியக்கின்ற வகையில், ஈழத்தில் ஒரு பெரும்படையைக் கட்டி எழுப்பினார் தலைவர் பிரபாகரன். ஏழு அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்துக் களத்தில் நின்றார். வேறு எவரும் சாதிக்க முடியாததைச் செய்து காட்டினார். அவருக்கு நிகரான தலைவன், உலக வரலாற்றில் வேறு எவரும் இல்லை. அவர்தான், அண்ணன் வைகோ அவர்கள் தம் உயிரைத் துச்சமாகக் கருதி எங்களைச் சந்திக்க வந்ததை எண்ணி, நான் ஆயிரம் முறை சாகலாம் என்று தம் கைப்பட கலைஞருக்குக் கடிதம் எழுதினார். இதை எல்லாம் நீங்கள் இளைஞர்களிடம் தெரிவிக்க வேண்டும். அங்கே கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு ஒரு விடியல் வேண்டும். அதற்காக நாம் பாடுபட வேண்டும். இன்றைக்கு இந்து என்று சொல்லிக் கொண்டு வருகின்றவர்கள், ஈழத் தமிழர்களின் கோவில்களை உடைத்து நொறுக்கியபோது எங்கே போனார்கள்? எதிர்த்தார்களா? குரல் கொடுத்தார்களா? அதைச் சொல்லுங்கள்.

தொடர்புடையவை:  மக்களே… மனம் திறந்து பேசுங்கள்: மனதை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்!

கொலைகாரன் ராஜபக்சே மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு வந்தபோது, இங்கிருந்து புறப் பட்டுச் சென்று, நான்கு மாநிலங்களைக் கடந்து சென்று போராட்டம் நடத்தினோம். ஈழத் தமிழர்கள் படுகொலையை, இந்தியா முழுமையும் எடுத்துச் சொன்னோம் .அத்தகைய ஒரு போராட்டத்தை நடத் துகின்ற ஆற்றல், மறுமலர்ச்சி திமு கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. முருகனை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று தூண்டி விடுகின்றார்களே, ஈழத்தில் முருகன் கோவில்களை இடித்தானே? அன்றைக்கு எங்கே போயிருந்தீர்கள்? அன்றைக்கு அதை எதிர்த்து நாங்கள் தான் போராடினோம். கல்லூரி வாயில்கள் தோறும் சென்று மாணவர்களிடம் பரப்புரை செய்தேன். ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம் என்ற காணொளித் தொகுப்பை ஆக்கி, அதை மாணவர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். தமிழகம் முழுவதும் கொடுத்தோம். அதன் விளைவு மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள். முத்துக்குமார் உட்பட 18 இளைஞர்கள் தீக்குளித்து மடிந்தார்கள். தங்கள் மேனியில் பெட்ரோலை ஊற்றிக் கொளுத்திக் கொண்டு மடிந்தார்களே அந்தத் தீராதி தீரர்கள், அந்த உணர்ச்சி செத்துப் போய் விடவில்லை. ஒருபோதும் மடியாது. ஈழப்போராட்டம் முடிந்து போகாது. அன்றைக்கு ஒரு இலட்சம் மாணவர்கள் உறுதியாக நின்று தொடர்ந்து போராடி இருந்தால் நிலைமை வேறாகி இருக்கும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய கட மையை, ஈழப்போராட்டத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் செய்யவில்லை. உணர்ச்சி ஊட்டத் தவறி விட்டோமா? புறநானூற்று வீரத்தைப் புகட்டத் தவறி விட்டோமா? கலிங்கத்துப் பரணியின் உணர்ச்சியை ஊட்டத் தவறி விட்டோமா? என்றுதான் நினைக்கின்றேன். ஊட்டி இருந்தால், அழி வைத் தடுத்து இருக்க முடியும்.

உலகில் தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது, சுதந்திரத் தமிழ் ஈழமாக இருக்க வேண்டும். அதற்காக, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உலகில் முதன்முதலில் சொன்னது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அது எங்கள் இயக்கம். அதற்கு முன்பாக வேறு எந்தத் தமிழ்நாட்டுத் தலைவர்களோ, ஈழத் தலைவர்களோ யாரும் சொன்னது கிடையாது. அதே குறுந்தகடை, ழுநnடிஉனைந டிக நுநடயஅ கூயஅடைள: ழநயசவள க்ஷடநநன என்ற தலைப்பில் ஆக்கி, 157 நாடுகளின் தூதரகங்களில் கொண்டு போய்க் கொடுத் தோம். இந்தியிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து, குறுந்தகடாகவும் புத்தகமாகவும் வெளியிட்டோம். பொது வாக்கெடுப்பு ஒருநாள் நடக்கும். உறுதி யாக நடக்கும். அதற்கு வித்து ஊன் றியது நாம்தான். நம்மிடம் கொள்கை இருக்கின்றது. ஏன் கவலைப்பட வேண் டும்? நம்முடைய சாதனைகளை மக்களிம் கொண்டு போய்ச் சொல்லுங்கள். மாணவர்களைத் திரட்டுங்கள். நம்மிடம் வாக்கு வங்கி இல்லை.. ஆனால், நாம் சாதித்ததை வேறு எவரும் சாதித்தது இல்லை. நமக்கு உள்ள தகுதி வேறு எவருக்கும் இல்லை. இந்த இயக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் முயற்சித்தால், ஒரு மாவட்டத்திற்குப் பத்து மாணவர்கள் கிடைக்க மாட்டார்களா? கொள்கையில் உறுதியாகக் கடைசி வரை இருப்பவர்களைத் தேர்ந்து எடுங்கள். கொள்கையில் உறுதி வேண்டும். சாக்காடு எங்களுக்குப் பூக்காடு என்ற உணர்வு வேண் டும். திராவிட இயக்கத்தைக் காப்போம்.

இவ்வாறு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

சங்கொலி, 07.08.2020

Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *