தூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 4.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது என்றார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி. நகர் நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா தரமான மறுபயன்பாட்டு முகக்கவசங்கம் வழங்கும் தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சர் கடம்பூர் செ.ராஜு கலந்து கொண்டு, மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்துப் பேசியதாவது: இத்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 957 நியாயவிலைக் கடைகள் மூலம் 4லட்சத்து97ஆயிரத்து120 குடும்ப அட்டைதாரர்களில் இணைக்கப்பட்டுள்ள 16லட்சத்து71ஆயிரத்து909 குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தரமான மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் தலா இரு வீதம் 33 லட்சத்து 43 ஆயிரத்து 818 முகக்கவசங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

முதல் கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள 219 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 484 குடும்ப அட்டைகளில் உள்ள 6லட்சத்து18ஆயிரத்து444

நபர்களுக்கு தலா இரு தரமான மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் தலா இரண்டு விநியோகம் செய்யப்படவுள்ளது. தொடர்ந்து கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கும் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, கோவில்பட்டி பயணியர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் அரசு தீருதவி தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அண்மையில் மரணமடைந்த கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த கோடீஸ்வரனின் வாரிசுகளான தந்தை மாடசாமி, தாய் செல்வம் ஆகியோரிடம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு தீருதவி தொகை முதல் கட்டமாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500-க்கான காசோலையை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு வழங்கினார்.

மேலும், சார்ஜ்-சீட் ஃபைல் செய்த பின்பு மீதமுள்ள ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 வழங்கப்படும். ஏற்கெனவே அவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு வீட்டுமனைப் பட்டாவும், அதே இடத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். மாதம் ரூ.5 ஆயிரம் அகவிலைப்படியுடன் ரூ.13,500 ஆயுள் காலத்திற்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்றார்.

குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தினரிடம் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் ராஜாராம், வட்டாட்சியர் மணிகண்டன், ஆதிதிராவிடர் துறை நலத் துறை அலுவலர் பரிமளா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சந்திரசேகர், கூட்டுறவு இணைப் பதிவாளர் ரமணிதேவி, துணைப் பதிவாளர்கள் ஜெயசீலன், மாரியப்பன், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவர் அன்புராஜ், மொத்த பண்டக விற்பனை சாலை மேலாண்மை இயக்குநர் கோகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this
தொடர்புடையவை:  சிறப்பு ரயிலில் வந்த அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் - சென்னை மாநகராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *