மாசற்ற மனிதநேயம் தழைக்க ஹஜ் திருநாளில் சபதமேற்போம் : தமிழ்நாடு முஸ்லிம் லீக் பக்ரீத் வாழ்த்து

நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

தியாகத்தின் பெருமையை ஊருக்கும், உலகுக்கும் விளக்குவது தான் பக்ரீத் திருநாளின் நோக்கமாகும். இறை தூதரான இப்ராகிம், இறைவனின் கட்டளையை ஏற்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு பிறந்த தமது மகன் இஸ்மாயிலை பலி கொடுக்க முன்வந்த போது, வான் தூதரை அனுப்பி அதை தடுத்த இறைவன், மகனுக்குப் பதிலாக ஆட்டை பலிகொடுக்கும்படி கூறினார். இப்ராகிமின் தியாகத்தையும் இறைவன் பாராட்டினார். இதை குறிக்கும் வகையிலேயே பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

தியாகத் திருநாளான பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரீத் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது.

உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெறவேண்டும் என்பதும் இந்த தியாகத் திருநாள் மூலம் உணர்த்தப்படுகிறது. அனைத்தையும் கடந்து நிற்கும் இறைவனை தியாகச் செயல்கள் மட்டுமே மகிழ்ச்சிப் படுத்தும். இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் , மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க இஸ்லாமியர் அனைவரும் பாடுபட வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு அனைத்து தரப்பு மக்களும் சகோதரத்துவடன் வாழ்ந்துவருகின்றனர். ஆனால் சமீபத்திலே மதவாத சக்திகள் இந்தியாவிற்கு மதச்சாப்பின்மை தேவையில்லை என்று கூறி, நமது நாட்டின் அடித்தளத்தை சிதைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இன்றைக்கு இந்தியாவிலே வாழ்கிற 17 கோடி முஸ்லீம்களின் எதிர்காலத்தை அச்சுறத்துகிற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. அந்த தாக்குதலில் இருந்து இஸ்லாமிய மக்களை காக்க வேண்டியது அனைவரது கடமை.

அந்த வகையில் ஜாதிய, மத அடிப்படையிலான வேறுபாடுகளையும் காழ்ப்புணர்ச்சிகளையும் களைந்து மாசற்ற மனிதநேயம் தழைக்க இந்நன்னாளில் தியாக திருநாளாம் ஹஜ் திருநாளில் சபதம் கொள்வோம் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பக்ரீத் தியாக திருநாள் வாழ்த்த்துக்களை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Share this
தொடர்புடையவை:  இசைஞானிக்குள் ஒரு தமிழ் ஞானி நூல் வெளியீட்டு விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *