மைதிலி


ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போது ” ஏஞ்சாமி இப்பதான் வந்தியலா.. நல்லா இருக்கியலா சாமி.. இத்தன நாளா பாக்காம கண்ணுரெண்டும் பூத்துக்கெடக்கு” ன்னு வயது 60 வதை தாண்டியும் மரியாதையுடன் அழைக்கும் மைதிலி யின் வார்த்தையில் எப்போதும் ஒரு வாஞ்சை இருக்கும், அதை கண்களிலும் பார்க்கலாம்..

ஆம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு பொங்கல், தீபாவளி, நல்லது, கெட்டது என எந்த ஒரு நிகழ்விலும் மைதிலியின் வருகையில்லாது, என் வீட்டு வாசலும், என் அம்மாவும் சந்தோஷ பட்டிருக்க முடியாது, நான் குழந்தையாய் இருக்கும்போதிலிருந்தே எனக்கும் எப்போதும் மைதிலின்னா ஏதோ ஒரு அலப்பறியா வாஞ்சை உண்டு..

என் வீட்டு குறக்கூடை ஒவ்வொன்றுமே மைதிலியின் கைவண்ணம்தான்.. மூனு வீதிக்கு அந்த பக்கம் வந்தாலே என் கட்டுத்தரு மாட்டுக்கும், ஆட்டுக்குமே மைதிலி வருவது தெரிந்துவிடும், என் வயது ஒரு 15 -16 தாண்டியிருக்கும், “என்ன சின்ன ………… எப்படி இருக்கீங்க” ன்னு கேட்டதுக்கு.. நான் சண்டைக்கு போனதும்.. “ஏன் சாமி இந்த ஊருல மூனு எல உட்டதெல்லாம் அவளே இவளேன்னுதான் பேசுது.. நீங்க மட்டும்தான் என்ன வா ஆத்தா போ ஆத்தா ன்னு கூப்புடுறீய.. உங்கள அப்படி கூப்பிடுறதுல என்ன தப்பு” ன்னு கேட்கும் போது மைதிலியின் கண்களில் வடிந்த கண்ணீர்தான் முதன்முதலாக எனக்கு ஜாதிய பாகுபாட்டின் வலியை உணர்த்தியது.

அவ்வப்போது அளவுக்கு மீறிய பாசத்தை காட்டும்போது மட்டும் என் வாய் மைதிலி என்றே அழைக்கும்.. அப்பொழுது மட்டும் அந்த முகத்தில் அவ்வளவு ஒரு புன்னகை பூக்கும்..

படிச்சு முடிச்சு வேலைக்கு நான் வந்த பிறகு ஊருக்கு நான் போகும் போதெல்லாம் எனக்கு முன்னமே என் வீட்டு வாசலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் காத்திருக்கும் ஒரு அப்பழுக்கற்ற ஜீவன் மைதிலி.!!

“இந்தா ஆத்தா 100 ரூபா வச்சிக்கோ”ன்னு கொடுத்தா. “வேணாம் சாமி… டவுனு பக்கம் போனா எனக்கு ஒரு 5 ரூவாய்க்கு உன் கையால வெத்தலபாக்கு வாங்கிட்டு வா சாமி” என்பது மட்டுமே வேண்டுகோளாக இருக்கும்..

ஆம்.. சில உறவுகளும், பாசங்களும் ஜாதியம் கடந்து மனிதனை மனிதனாக வாழ வேண்டும் என்று செவியில் அடிக்கிறது.!!

இன்று என் தந்தை தொலைபேசியில் பேசும்போது “மைதிலிக்கு ரொம்ப முடியலப்பா என்ன ஆகுமோ தெரியல.. பாக்க போனன்.. நீ எப்ப வருவ.? உன்ன ஒருவாட்டி பாத்தா தேவல ன்னு சொல்லுதுப்பா” என்று சொல்லும் போது அவர் வார்த்தைகள் உடைந்தார்.. நான் இன்னும் உடைந்து கொண்டே..

தொடர்புடையவை:  அறிவியல் தமிழமுது வினா விடை போட்டி

அண்ணே 10 ரூபாய்க்கு
வெள்ள வெத்தலயும், களிபாக்கும் கொடுங்க..

வாங்கி பத்திரப்படுத்திக்கொண்டேன், பயணிக்கிறேன்…

இறைவனை வேண்டுகிறேன் நலம்பெற்று வாழவேண்டும் அந்த ஆத்தா..

என்கிற ” மைதிலி”.

  • அர்ச்சனா குருநாதன்-
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *