உறவுகளில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் சண்டை போல் உலகில் நாடுகளுக்கு இடையிலான கருத்து மோதல்களும், சண்டைகளும் சச்சரவுகளும் இயல்பானதா இருக்கிறது.கருத்து மோதல்களை கடந்து வெளியுறவுகளை சுமூகமாக பேணுவது, உலக அமைதிக்கும் சர்வதேச பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனாலும் சில வேளைகளில் சொந்த நாட்டின் நலனுக்காக அந்நிய நாட்டுடனான உறவில் மோதல் ஏற்படுவதும் பின்னர் அதை இருதரப்பும் சமரசமாக பேசித் தீர்த்துக் கொள்வதும் இன்று நேற்று அல்ல வரலாற்று காலம் தொட்டே நிலவும் ஒன்றாகும்.
அந்த வகையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த வர்த்தகப் போர், அதைத்தொடர்ந்து பெருந்தொற்று பேரிடர் காலத்திலும் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல் சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான எந்த ஒரு கருத்து மோதலாக இருந்தாலும், ஒரு நாட்டை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இன்னொரு நாடு தனித்து இயங்குவது என்பது இன்றைய உலகமயமாக்க சூழலில் சாத்தியமற்றது.
அதிலும் சீனா போன்ற ஒரு நாட்டை இந்த உலகில் எந்த ஒரு நாடும் அவ்வளவு எளிதாக தவிர்த்து விட முடியாது. சீனா இன்று உலகின் முக்கியமான சக்தியாக வளர்ந்திருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவின் இத்தகைய வளர்ச்சியை ஏற்க முடியாமல்தான் அதன் மீது மோதல் போக்கை கடிபிடிக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சீனாவின் கவனம் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளில் இருந்தது, ஆனால் மிக சமீபத்தில் சீனாவின் முக்கியத்துவம் அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயங்களுக்கு மாறியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு சீனா உலக வர்த்தக அமைப்பில் இணைந்தது. இப்போது பல்வேறு சர்வதேச அமைப்புகளுக்கு சீனா தலைமை வகிப்பதோடு, ஐ.நா.வின் 15 சிறப்பு அமைப்புகளில் 4 அமைப்புகளுக்கு சீனா தலையேற்று வழிநடத்துகிறது.
2017 ஆம் ஆண்டு முதல் சீனா அமெரிக்க அரசின் போட்டியாளராக” கருதப்படுகிறது. மேலும் 2019 ஆம் ஆண்டு நேட்டோ லண்டன் பிரகடனத்தில் சீனாவின் செல்வாக்கு மற்றும் சர்வதேச கொள்கைகளால் முன்வைக்கப்பட்ட சவால்கள் முதல் முறையாக பேசப்பட்டது. சீன செல்வாக்கு மேலும் விரிவடைவதைத் தடுக்க அமெரிக்கா முயல்கிறது என்பதை சீனாவின் அரசு உயர் அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதற்கு ஏற்றார் போல் தற்போதைய கரோனா சூழல் அமைந்திருக்கிறது. கரோனா பரவலுக்கு முன்பு வர்த்தக தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு சீனா மீது அடக்கு முறை மேற்கொள்ள முயன்ற அமெரிக்கா தற்போது கரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என ஆதரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்து உலக அரங்கில் சீனாவின் பெயரை கெடுக்க முயன்று வருகிறது.
இருதரப்பின் பார்வைகள் வேறுபட்டுள்ளன. அமெரிக்கா முதன்மையானது மற்றது அனைத்தும் கடைசி என கருதுகிறது. சீனாவின் பார்வையோ, “மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்கால சமூகத்தை உருவாக்குவதாக இருக்கிறது. ஆனால் கடைகளுக்குள் நுழைந்து அனைத்தையும் சேதப்படுத்தும் காளைகள் போல் அந்த பாதையில் நுழைந்த அமெரிக்கா செயல்படுகிறது. இந்த இரு நாடுகளும் வணிகம், தொழில்நுட்பம் போன்ற பல விஷயங்களில் மோதல் போக்கைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா-சீனாவுக்கு இடையே உள்ள பகைமை உணர்வு உலகின் ஸ்திரத்தன்மையை எப்படி மாற்றப்போகிறதோ என்று பல உலகத்தலைவர்களும் கவலை கொள்கின்றனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், இந்த உலகத்தின் எதிர்காலத்தை சீனா, அமெரிக்கா இடையே இருக்கும் உறவு முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்தார். அத்துடன், இந்த ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, கரோனா வை “சீன வைரஸ்” என்று குறிப்பிட்டது, இருதரப்பு உறவை மேலும் மோசமக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில் சீனாவை குற்றம்சாட்டுவது ஒன்றையே தனது தேர்தல் பிரசாரத்தின் மையாக கொண்டு செயல்படுகிறார் அவரின் இந்த போக்கு அமெரிக்க தேர்தலில் அவருக்கு வெற்றியை பெற்றுத்தந்துவிடுமா இல்லையா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்
- திருமலை சோமு, பெய்ஜிங்