தாயனார் – அரிவாட்டாய நாயனார்

பிறப்பிடம் – கண்ணத்தாங்குடி (கன்னமங்கலம்)

குலம் – வேளாளர் குலம்

நாள் – தை திருவாதிரை

முக்தி தலம் – கன்னமங்கலம்

அரிவாட்டாய நாயன்மார்

காவிரி பாயும் கவின்மிகு சோழரசின்
காணவியக்கும் வளமிகு காந்தழகு நிலமாம்
தாயனார் என்பாரின் தலைமை வேளாளநிலமே
தாயுமானவர் நீள்நெறிநா தராமடியா ருமேயவர்

மெய்யுணர்வாய் சிவத்தொண்டை பொய்யில்லாப் பணியாக
மெய்மையுடனே பணிந்து மனையாளுடன் புரிந்தார்
மெய்வருத்தி நிலமதில் வந்த செவ்வரிசி
தொய்வில்லாது செங்கீரையும் மாவடுவும் திருவமுதாய்

இறையருக்குப் படைத்து அடியார்களுக்கு அளித்திட்டார்
இறைப்பணியாய் நாளும் மாதமும் வருடமும்
கரைய இறையும் இவர்தம் தூயஅன்பை
கண்ணுற்று உலகும் கண்ணுற விளையாடல்

தொடங்கியது பெருஞ்செல்வம் வெள்ளத்திலும் வெப்பத்திலும்
தொலைந்து கருகி கரைந்துப் போகிட
துவளாது அறப்பணியாய் சிவப்பணியை விடாது
தொடர்ந்தார் நீள்நிலத்தை இழந்தாலும் பிறர்நிலத்தில்

உழைத்து கார்நெல் தமக்கும் செந்நெல்
உமையப்பனுக்கும் திருவமுது தடையில்லா துநிகழ்ந்திட
உவப்பாய் கார்நெல்லை தாமுண்டு நாள்கழிக்க
உவந்த கார்நெல்லும் இல்லாது இல்லப்பின்

புறக்கீரையே உணவாக சிலநாட்கள் கழிக்க
புற்றீசருக்கு மட்டும் மறவாது திருவமுது
புண்ணேதும் இல்லாது கண்ணேறாய் படைத்தார்
கீரையின் வேருண்டு அதும்காணாது நீரே

உணவாக நாட்கள் நகர்த்த ஒருநாள்
உணவாய் நீரருந்தி உமையவனுக்கு திருவமுது
உள்ளம் விரும்பி கையில் ஏந்தி
உள்ளமுறையும் மனைவியும் பின்னே ஆனைந்தைக்

கரமதி லேந்திப் பின்தொடர கன்னமங்கல
கனவான் நீள்நெறி நாதனுக்கு திருவமுது
கனிவாகப் படைக்க வயல்வழி நடக்க
கண்ணின் அயர்வும் பொய்யுடல் பசியும்

தாயனாரை நிலத்தில் மயங்கிடச் செய்ய
தயவான மனையாள் தன்னவனைத் ஒருக்கையில்
தாங்கிட கரத்தி லிருந்த செந்நெல்
சாதமும் செங்கீரை மசியலும் மாவடுவும்

சிதறி மண்ணில் பரவ பதறினார்
சிந்தை முழுவதும் சிவனையே ஏற்று
சிந்தை வழுவாது திருவமுது படைக்கும்
சிவனடி அளவில்லாது தீமையுடையேன் யாமெனவும்

இறைவன் அமுது செய்யும் பேறுயெமக்கு
இறைப்பணிக்கு பெற்றிலேன் ” இனிவாழ்ந் தென்ன??!!!
இறையே! எமதுயிரே! இனிவாழ் வெதற்கு
இறைவாயென அரிவாள் கொண்டு தன்னை

அறுத்தெரிக்க துணிந்திட படபடத்த மனையோ
பதற மறையவன் நொடிப்பொழுதில் கரமெழுப்பி
பதர்நீக்கி பக்குவ செந்நெல் அமுதும்
பக்குவ உவர்ப்பேறிய மாவடுவை “விடேல் , விடேல் “

விழுங்கும் ஒலியுணரச் செய்து அரிவாள்
கரத்தை பிடித்து நிறுத்தி , அன்பனே!!!
அழுக்கற்ற உனதுபேரன்பு அமுதிணைத் தொண்டை
உலகறிய செய்திடவே உவந்தளித்தேன் வினைகளை!!!

எம்மோடு கலந்து எம்மவராகுக ” என்றிட
எண்ணிலா பேருவகை கரநழுவிய அரிவாளை
காணாது கனவா ? நனவென வுணர்ந்து
சென்னியில் கரங்கூப்பி ” சிவனே சிவனே”

ஓலமிட்டு வணங்கிட விடப வாகனத்தில்
ஓம்கார நாதன் உமையம்மையாய் காட்சித் தந்திட
ஓம் சிவாய நம என்றே தொழுதிட்டார்
ஊர்மெச்ச தொண்டினைப் புரிந்து சிவப்பதம்

தொடர்புடையவை:  குலசை முத்தாரம்மன் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!

பெற்ற அரிவாட்டாய நாயனாரே போற்றி
பெருவொளி அண்ணாமலையே போற்றி போற்றி
பேரானந்த நீள்நெறி நாதனே போற்றி
அடியார்களின் அடியனேப் போற்றி போற்றி

இரா.விஜயகல்யாணி

குறிப்பு

ஆனைந்து (பஞ்சகவ்யம் ) : பசுவின் பால், தயிர், நெய், கோமயம் (சாணம்), கோசலம் (பசுவின் மூத்திரம்)

Share this

2 Comments

  • Saradha Santosh

    ஆனைந்துயென்றால் என்னவென கேட்க நினைந்தேன்..வாசகனின் எண்ணக் குறிப்பறிந்து.. பின்குறிப்பில் தந்து விட்டீர்கள்.. அற்புதம்.. திருச்சிற்றம்பலம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *