தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும்

ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில், இறந்த மாணவிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது “கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மதுரை மாணவி ஜோதி துர்கா, இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு மன வேதனை அடைந்தேன்.

தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தை முதலில் மாணவர்கள் கைவிட வேண்டும். தற்கொலை என்பது தீர்வல்ல. வருங்காலம் என்பது இளைஞர்களின் கையில் இருக்கிறது. வாழ்க்கையை துணிவோடு எதிர்கொண்டு முன்னோக்கி செல்லும் போது தான் பல வெற்றி, தோல்விகளை சந்திக்க முடியும். ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றும் திறன் படைத்தவர்கள் நமது மாணவ சமுதாயத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share this
தொடர்புடையவை:  வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *