“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்” என்று தொடங்கும் அப்பர் பெருமானின் தேவார திருவிருத்தப்பாடலைக் கேட்கும்போது நம் மனதில் குமிண்சிரிப்பு எப்படி இருக்கும் என்று ஆராயத் தோன்றுகிறது. உடனே தில்லை நடராஜனின் திருமுகத்தை நினைவு கூறுகிறோம்.. குமிழ் என்பது மலர்ந்து மலராத அரும்பைக் குறிக்கும். அரும்பும் நகையைக் குமிழ்சிரிப்பு என்பர். குமிண்சிரிப்பு (குமிழ்+சிரிப்பு) என்ற சொற்றொடருக்கு அகராதியைப் பார்த்தால் “புன்னகை, சிரிப்பு, இளநகை, குறுஞ்சிரிப்பு, குறுநகை, செல்லச்சிரிப்பு, புன்முறுவல், முகிழ்நகை, மூரல், முறுவலிப்பு” என்றெல்லாம் பொருள் போட்டிருக்கிறார்கள்.. அவர் புரியும் ஐந்தொழில்களில் படைத்தலை கையிலேந்தியுள்ள உடுக்கையும், காத்தலை அபயம் நல்கும் வலது கையும் அழித்தலை தீசுவாலையும் மறைத்தலை உடலின் குறுக்கே நீட்டிய இடக்கரமும், அளித்தருளலை தூக்கிய திருவடியும் குறிக்கின்றனவாம். அனால் நடராஜரின் புன்னகை எதை உணர்த்துகிறது என்பது தனி ஆன்மீக ஆராய்ச்சி.

தில்லையைப்போல் மற்றும் பல ஊர்களிலும் கடவுள் உருவங்கள் புன்னகையுடன் காட்சியளிப்பதைக் காணலாம். பழனி, பச்சைமலை தண்டபாணிகளின் புன்னகைகள் சிறப்பு வாய்ந்தவை. குருவாயூர் கிருஷ்ணனின் ‘மன்தஸ்மித மதுரதரமான’ முகம் யாரைத்தான் ஈர்க்காது? ஸ்ரீ லலிதா திரிசதியில் அம்பாள் ‘ஈஷத் ச்மிதானநாயை’ – புன்சிரிப்பு தவழும் வதனமுடையவள்-.என்று போற்றப்படுகிறாள். அபிராமி அம்மை பதிகத்தில், பட்டர் அவர்கள் ‘வந்தெனது முன் நின்று மந்தஹாஸமுமாக வல் வினையை மாற்றுவாயே என்று அவள் புன்முறுவலை அருள வேண்டுகிறார்கிறார். காமாக்ஷி மந்தஸ்மிதத்தை பற்றி ஒரு நூறு ஸ்லோகங்கள் எழுதியிருக்கிறார் மூககவி என்ற வடமொழிக் கவிஞர். புராணக்கதைகளின்படி சிவபெருமான் தன்னுடைய புன்னகையாலேயே தங்கம், வெள்ளி, உலோகக் கோட்டைகளுடைய திரிபுரங்களை எரித்துவிட்டார் என அறிகிறோம். ஸ்ரீமத் பாகவதத்தில் அன்னை யசோதை குழந்தையிடம் வாயைத்திறந்து காட்டச்சொன்னபோது கண்ணன் புன்முறுவலுடன் தனது வாய்க்குள்ளே அகில பேரண்டங்களையும் தோன்றச்செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

“வடுவூர் கோதண்டராமரின் புன்னகையால் மயங்காத பக்தர்களே இல்லை எனலாம். வடுவூர் ஸ்ரீநிதி ஸ்வாமி என்று போற்றப்படும் வைணவப் பெரியவர், ஒரு ஆசுகவி, தமிழ்நாட்டிலும் மைசூரிலும் போற்றப்பட்டவர். வடுவூர் கோயிலுக்கு சென்று வழிபடும் ஒவ்வொரு முறையும் அந்த மகானுக்கு ராமரின் புன்னகைக்கு ஒரு புதிய காரணம் – இராமாயணக் கதையுடன் சம்மந்தப்பட்டது- மனதில் தோன்றுமாம். உதாரணமாக,
“அன்று நீ கௌசல்யா தேவியின் மகனாக அவதரித்த போது, உன் அன்னையைப் பார்த்துப் புன்னகை பூத்தாயே! அதை எனக்குக் காட்டத்தான் இன்று வடுவூரில் புன்முறுவல் பூத்தபடி காட்சி தருகிறாயோ?”
“அன்று வில்லை முறித்து விட்டுச் சீதையைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தாயே! அதை எனக்குக் காட்டவே இங்கு புன்னகை அரசனாக வந்து குடிகொண்டுள்ளாயோ?”
“அன்று சபரி தந்த இனிய கனிகளை உண்டு அவள் வேண்டியதை ஒரு புன்னகையுடன் கேட்டாயே! அதை எனக்கும் காட்டி அருள்வதற்காகத் தான் இங்கு புன்னகை தவழும் முகத்தோடு காட்சி தருகிறாயோ?”
என்றிப்படியெல்லாம் இராமாயண காவியத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பல நிகழ்வுகளை நினைவுகூறி, தினம் ஒரு வடமொழி கவிதையாக எழுதி வந்தார். இவற்றைத் தொகுத்து உருவாக்கப்பட்ட நூலின் பெயர்தான் ‘மந்தஸ்மித ராமாயணம்’ அதாவது ‘புன்னகை ராமாயணம்’.
இதுவரை பார்த்தவற்றிலிருந்து வெவேறு கடவுளர்களும் தங்கள் புன்னகைகள் மூலம் ஐந்தொழில்களையும் நிறைவேற்றியுள்ளனர் என்பது தெளிவாகிறது.. பாலகன் கண்ணன் புன்முறுவலுடன் தனது வாய்க்குள் பேரண்டத்தை தோன்றச்செய்தது “படைத்தல்” செயல். அபிராமி பட்டர் வேண்டியது அம்பிகையின் குறுநகையால் “காக்கப்படுதலை”. பரமசிவன் புன்னகையால் திரிபுரங்களை எரித்தது “அழித்தல்” செயலுக்கு எடுத்துக்காட்டு. அன்புடன் படைக்கப்பட்ட பழங்களை உண்டு இராமன் தன் முகிழ்நகையால் பக்த சபரியை முக்தியடைய வைத்தது “அருளுதல்”. இப்படியிருக்க சிதம்பர ரகசியத்தின் மர்மத்தை உள்ளடக்கிய தில்லை நடராஜரின் குமின் சிரிப்பு ஒருவேளை இறைவனின் “மறைத்தல்” தொழிலை உணர்த்துகின்றதோ?
அருணாச்சலக் கவிராயர் தன் மோகனக் கீர்த்தனையில் கேட்டதுபோல் நம்மையும் “ஏன் புன்னகை புரிந்தீர் ஐயா?” என்று தெய்வங்களைக் கேட்கத் தூண்டுகிறதல்லவா?
- பா.கோபாலன்
சிறந்த ஆன்மீக கட்டுரை.. நன்றியும்.. வாழ்த்தும் விஞ்ஞானி கோபாலன் அவர்களே..
மிக மிக அருமையாக இருந்தது ஸார். பல பல வார்த்தைகள் தமிழில் இருந்து போய்விட்ட (for trivial reasons )
இந்தத கால கட்டத்தில் அதனை மீண்டும் மீட்டு ப்ரயோகம் செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்… நன்றி